- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய சட்டங்கள் அரசியல் களத்திலும் பொதுத் தளத்திலும் பேசுபொருளாக இருக்கின்றன. காலத்துக்கு ஏற்பச் சட்டங்களில் மாறுதல்கள் தேவைதான், குற்றங்களின் தன்மைக்கு ஏற்பச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதிலும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது.
- புதிதாக மூன்று குற்றவியல் சட்டங்களை உருவாக்கியதற்கான காரணங்களையும் மத்திய அரசு முன்வைத்திருக்கிறது. காலனி ஆதிக்கத்தின்போது தண்டனை வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த சட்டங்களை மாற்றவும்; நீதியை விரைந்து வழங்கும் வகையிலும், குற்ற நிகழ்வுகள் மேற்கொண்டு நிகழாமல் தடுக்கும் வகையிலும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன என்பதே அதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
- நடைமுறையில் இருந்துவரும் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரும்போது, அது தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்கள், மாநில அரசுகளின் ஆலோசனைகள் ஆகியவற்றைக் கேட்டறிந்து விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டங்கள் முழு வடிவம் பெற வேண்டும்.
- இது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டும் பரிசீலித்தும் குழுவின் பரிந்துரைகளை அரசுக்கு அளித்த பின்னர், நாடாளுமன்றத்தில் அச்சட்டங்கள் இரண்டு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக் குழுவின் விரிவான விவாதத்துக்குப் பிறகு இறுதிசெய்யப்பட்டு, நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துவிட்டன. அதேவேளையில், இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேற்படி சட்டங்கள் குறித்து விவாதம் நடக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
பெயர் சர்ச்சை:
- சட்டங்களின் ஷரத்துகளைவிடச் சட்டங்களின் பெயர்கள்தான் இப்போதைய முக்கியப் பிரச்சினை. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், சட்டங்களின் பெயர்கள் மட்டும் சம்ஸ்கிருத வார்த்தைகளிலான இந்தி சொற்கள். அதாவது, மனித உடலுக்கு விலங்குத் தலை என்பதுபோல.
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான ப.சிதம்பரம், “91 சதவீதத்துக்கு மேல் பழைய சட்டங்களின் ஷரத்துக்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், பெயரில்தான் பிரச்சினை” என்கிறார். அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் பெயர் மாற்றத்துக்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இது போன்ற பெயர் மாற்றங்களின் வாயிலாக இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் மறைமுகமாகத் திணிக்க மத்திய அரசு முயல்வதாகக் கருதப்படுகிறது.
- ‘அரசமைப்புச் சட்டக்கூறு 348இன்படி சட்டங்கள் ஆங்கிலத்தில்தானே இருக்க வேண்டும்; அப்படி இருக்க சட்டங்களின் தலைப்புகள் மட்டும் சம்ஸ்கிருதம் கலந்த இந்தியில் ஏன் இருக்க வேண்டும்?’ என்பது எதிர்ப்பவர்களின் வாதம். ஆதரிப்பவர்கள் அதே அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 344, 351 ஆகியவற்றைத் தங்களுக்கு ஆதரவாகக் காட்டுகிறார்கள்.
- சட்டக்கூறு 343இன்படி மத்திய அரசின் அலுவல் மொழியான தேவநாகரி எழுத்து வடிவிலான இந்தியை வளர்க்கவும், அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிந்தவரை இந்திச் சொற்களை அனைத்து நிலைகளிலும் முன்னெடுத்துப் பயன்படுத்தவும், ஒருவேளை இந்தி மொழியில் சொற்கள் இல்லை என்றால் சம்ஸ்கிருதம் அல்லது 8ஆவது அட்டவணை மொழிகளில் இருந்தும் வார்த்தைகளை எடுத்துக் கையாளலாம் என்றும் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டித் தமது தரப்பை நியாயப்படுத்துகிறார்கள்.
- மேலும், இந்திய அரசின் அலுவல் மொழியாக இருக்கும் இந்தியோடு ஆங்கிலம் நீடிக்க, நாடு குடியரசு ஆன ஆண்டிலிருந்து 15 ஆண்டுகள் மட்டுமே என்கிற அந்தக் காலவரையறை இன்னும் நீக்கப்படவில்லை. 1963ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற அலுவல் மொழிகள் சட்டத்தாலும், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியாலும் ஆங்கிலத்துக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
- அரசமைப்புச் சட்டக் கூறு 344 இன்படி இந்தி வார்த்தைகளை அதிகளவில் பயன்படுத்தவும், அதேவேளை ஆங்கிலத்தின் பயன்பாட்டை முடிந்த அளவு கட்டுப்படுத்தவும் சொல்லப்பட்டிருப்பதால், அந்தக் காரணங்களுக்காக இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் வளர்க்க அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுவதன் மூலம், ஏனைய மாநில மொழிகளான அட்டவணை மொழிகள் புறக்கணிக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த வருத்தம் மாநிலங்களுக்கு இருப்பது மிகவும் நியாயமானது.
இனி என்ன?
- இப்போது மேற்சொன்ன மூன்று குற்றவியல் சட்டங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இது குறித்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு தனிநபர் குழு அமைத்துள்ளது. இது குதிரைகள் வெளியேறிய பிறகு, லாயத்தை மூடிய செயலாக இருக்கிறது. அப்படியே தனிநபர் குழு, இச்சட்டங்களில் சில மாற்றங்களைப் பரிந்துரைத்தாலும் சட்டக்கூறு 254இன்படி பொதுப் பட்டியலில் உள்ள இந்த அம்சங்கள் குறித்து மாநில அரசு நிறைவேற்றும் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றாக வேண்டும். அதிலும் சிக்கல்.
- ஏற்கெனவே இந்தச் சட்டங்கள் குறித்து ஆராய மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்துகள் சொல்லப்பட்டிருந்தால், அதைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் மாநில அரசின் நிலைப்பாட்டை மக்கள் அறிந்துகொள்ள முடியும். இல்லையென்றால், தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும்.
- இன்றைக்கு நாடு தழுவிய எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. புதிய சட்டங்கள் காவல் துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கியிருப்பதாகவும், ஒருவேளை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படலாம் என்றும் ஒரு சாரார் கருதுகிறார்கள். சட்டத்தை மையமாக வைத்து வாதாடும் வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு ஒரு பக்கம், சட்டப்படி நீதி வழங்கும் நீதிமன்றம் இயங்காத நிலை இன்னொரு பக்கம். இது தொடர்கிறது.
- சட்டங்களின் சாதக பாதகங்கள் தற்போது விவாதப் பொருளாக மாறிவிட்டன. சிலர் சட்டங்களைப் புரிந்துகொண்டு எதிர்க்கின்றனர். பலர் புரியாமல் எதிர்த்து வருகின்றனர். அரசமைப்புச் சட்டப் பிரதியைக் கையில் தூக்கிப் பிடித்துக் காட்டுபவர்கள், அரசமைப்புச் சட்டத்தையே மத்திய அரசு மாற்றப் பார்க்கிறது என்கிறார்கள்.
- ஆளும் தரப்பினரோ தாங்கள் டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த அரசமைப்புச் சட்டக்கூறுகளின்படிதான் நடக்கிறோம் என்கிறார்கள். அதற்கு ஆதரவாகத் தங்களுக்குச் சாதகமான அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளைத் துணைக்கு அழைக்கிறார்கள்.
- பதினெட்டாவது மக்களவைக்குத் தமிழ்நாட்டில் இருந்து 39 உறுப்பினர்கள் சென்றிருக்கிறார்கள். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் இப்போதைய இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண மத்திய அரசின் அலுவல் மொழியான இந்தியோடு காலவரையின்றி ஆங்கிலம் தொடரும் வகையில் அரசமைப்புச் சட்டக்கூறு 343இல் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சட்டக்கூறு 344இல் சொல்லியுள்ளபடி ஆங்கிலப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நீக்க வேண்டும்; சட்டக்கூறு 351இல் சொல்லியுள்ளபடி இந்தியை வளர்க்க, அதன் பயன்பாட்டை அதிகரிக்க - அதற்கு சம்ஸ்கிருதத்தைத் துணைக்கு அழைக்க, இரண்டு மொழிகளுக்கும், அவற்றின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவதைப் போல, தமிழ் உள்பட மற்ற 8ஆவது அட்டவணை மொழிகளுக்கும், அதே முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவும் வேண்டும் - கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு இவற்றையெல்லாம் தமிழ்நாடு எம்பிக்கள் சாதிப்பார்களா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. அதை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 07 – 2024)