- விடுதலை வேள்வியில் பண்டித நேரு குடும்பம் எந்த அளவு அர்ப்பணிப்பு செய்ததோ, அந்த அளவு அர்ப்பணிப்பு செய்த குடும்பம், சர்தார் வல்லபபாய் படேலின் குடும்பம். பாபு இராசேந்திர பிரசாத், படேல் குறித்துக் குறிப்பிடும்போது, "இன்றைக்கு இந்தியர் ஒருவர் தம் நாட்டின் பரந்து விரிந்த நிலையினைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம், சர்தார் படேலின் இராஜதந்திரமும், நிர்வாகத்திறனுமே ஆகும்' என்றார்.
- "படேலின் குணம் மலையைப் போல் உயர்ந்தது; அவருடைய மன உறுதி இரும்பைப் போல் உறுதியானது' எனஅபுல் கலாம் ஆசாத் சொன்னார். ஏர்பிடித்து உழுது உழைத்த சம்பாத்தியத்தைக் கொண்டு, இலண்டனிலுள்ள "மிடில் டெம்பிள்' சட்டக்கல்லூரியில்' பாரிஸ்டர் பட்டத்திற்கான படிப்பில் சேர்ந்தார். கடினமான உழைப்பால், 36 மாதங்களில் முடிக்க வேண்டிய சட்ட படிப்பை முப்பது மாதங்களிலிலேயே முடித்தார்; முதன்மையான மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.
- அதனால், நிர்வாகம் கல்லூரிக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்து, ரொக்கப் பரிசாக 50 பவுண்டையும் அளித்தது. மேலும், அக்கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றுகின்ற வாய்ப்பையும் நல்கியது. ஆனால், தாய் மண்ணையே அன்னையாகக் கருதிய படேல், அனைத்தையும் உதறிவிட்டு இந்தியா திரும்பினார்.
- இந்தியா திரும்பிய படேலின் நுண்மாண் நுழைபுலத்தைச் செவிவழிக் கேட்டுணர்ந்த, பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸர் பாசில் ஸ்காட், படேலை அழைத்து, பம்பாய் சட்டக்கல்லூரியில் பேராசிரியர் பணி அல்லது பம்பாய் நீதிமன்றத்தில் பிரீமியர் பதவி ஏதாவதொன்றை ஏற்குமாறு வேண்டினார். மண் விடுதலைக்காக இரண்டு பதவிகளையும் மறுத்துவிட்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் தன்னை வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார்.
- 1909-ஆம் ஆண்டு பம்பாய் நீதிமன்றத்தில் ஒரு நிரபராதி முக்கியமான வழக்கில் சிக்கி, கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக வழக்குரைஞர் படேல் கடுமையாக வாதாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது, அவருடைய மனைவி (புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்) பம்பாய் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
- நீதிமன்றத்தில் கடுமையாக வாத, பிரதிவாதங்கள்நடந்து கொண்டிருக்கும்போது, அவருடைய மனைவி இறந்த செய்தியைத் தாங்கிய தந்தி அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதனை மடித்து வைத்துவிட்டு, தம்முடைய வாதியைக் காப்பாற்றிய பிறகு, கடைசியில் தந்தியைப் பிரித்துப் பார்த்து, அவருடைய கண்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்த்துதான், மற்றவர்களுக்கு செய்தி தெரிய வந்தது.
- 1947-ஆம் ஆண்டு விடுதலைச் சட்டப்படி, சுதேச அரசுகள் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேரலாம், அல்லது தனித்து இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. லார்ட் மவுன்ட்பேட்டன் ஏதோ நடுநிலை வகிப்பது போல் ஒரு நாடகம் ஆடினார். சுதந்திரத்துக்கு முன், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்குக் கப்பம் கட்டி, தேசிய உணர்வு மக்களிடம் பரவாமல் பார்த்துக் கொண்ட 565 ஜமீன்தார்கள், சிற்றரசுகள், நவாபுகள் குதூகலித்தனர்.
- விடுதலை பெற்ற இந்தியாவில் மதக்கலவரம், வன்முறை ஆகியன ஏற்படாமல், தேசத்தைக் காப்பது எப்படி என்ற கவலை காந்தியடிகள், நேருஜி, லார்ட் மவுன்ட் பேட்டன், அபுல் கலாம் ஆஸாத் போன்ற தலைவர்களுக்கு ஏற்பட்டது.
- பிரதமர் நேரு, படேலை உள்துறை அமைச்சராக்கியதோடு, துணை பிரதமராகவும் ஆக்கினார். பதவியேற்ற படேல், உள்துறையிலேயே, "சுதேச அரசர்களின் துறை' என்ற பெயரில் ஒரு தனித்துறையை உருவாக்கி, அதற்கு வி.பி. மேனனை உள்துறைச் செயலர் ஆக்கினார் (வி.பி. மேனன் லார்டு வேவலுக்குத் தனிச்செயலராக இருந்தவர்).
- நாடு இரண்டுபட்டுவிட்டது என்றவுடன், ஆங்காங்கே மதக்கலவரங்கள் தீவிரமடையத் தொடங்கின. நிஜாமுதீன் தர்ஹாவின் உள்ளே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், உள்துறை அமைச்சர் படேல் துணை இராணுவத்தை அழைத்து, தர்ஹாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு எந்தத் தீங்கும் நேரக்கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
- பாகிஸ்தானுக்குச் செல்லும் மக்களுக்கும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்கும் இடையே கலவரம் மூண்டிருப்பதைக் கேள்விப்பட்டு, படேல் அமிருதசரஸ் வளாகத்திற்கு விரைந்தார். அங்கிருக்கும் பஞ்சாபியர்களிடம் பேசி, இரு தரப்பினரும் அமைதியாகச் செல்ல பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தினார்.
- மூன்று அம்சங்கள் அடங்கிய அறிக்கையை 565 சுதேச மன்னர்களுக்காக வெளியிட்டார். சுதேசி அரசுகளில் வாழும் மக்களும் இந்திய மக்களும், இனத்தால், மொழியால், பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள்; நாம் வரலாறு படைக்கும் தருணத்தில் வாழ்கிறோம்; ஐக்கிய இந்தியாவை உருவாக்குங்கள் என்பனவே அம்மூன்று அம்சங்கள்.
- அறிக்கையின் கனத்தைப் புரிந்துகொண்ட பாட்டியாலா, குவாலியர், பரோடா, பிக்கானிர் உள்ளிட்ட 136 அரசுகள் 1.1.1948 அன்று இந்தியாவோடு இணைந்தன. அபுல் கலாம் ஆஸாத்தும் மகாத்மா காந்தியடிகளும் நாடு பிரியக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனால், முகம்மது அலி ஜின்னா, நவாபுகள் ஆளுகின்ற இந்திய பிரதேசங்களை பாகிஸ்தானோடு இணைப்பதற்குப் பெருமுயற்சி எடுத்தார்.
- ஜோத்பூர், ஜெய்சால்மீர், கட்ச், ஜுனாகத் நாவுபுகள் பாகிஸ்தான் பக்கம் போவதையே விரும்பினர். லார்டு மவுன்ட்பேட்டன் இதனை ஐ.நா சபைக்குக் கொண்டு செல்லலாமென ஆலோசனை கூறினார். ஆனால், சர்தார் படேல் துணை இராணுவத்தை அனுப்பினார்.
- பெரும்பாலான மக்கள் இம்மண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால், அவர்களும் நவாபுகளை எதிர்த்துப் பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். இறுக்கமான சூழ்நிலையில் நவாப், பணம், நகைகளோடு பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார். படேலின் நடவடிக்கையால் 17,680 சதுர மைல் பரப்பும், 27 இலட்சம் மக்கள் தொகையும் கொண்ட 180 அரசுகள் இந்தியாவோடு இணைந்தன.
- இந்த விவகாரத்தில் தலைவலியாக இருந்தவர், ஹைதராபாத் நிஜாம். 82,000 சதுர மைல் பரப்பும், 1.6 கோடி மக்கள்தொகையும் கொண்டது ஹைதராபாத். அப்பகுதிக்கு ஏழு வயதுடைய நிஜாம் உஸ்மான் மன்னராக இருந்தார். உள்துறை அமைச்சர் பலவாறு எடுத்துச்சொல்லியும் மன்னர் இணங்கவில்லை. அவர் தமது சொந்த செலவிற்கு ஆண்டொன்றுக்கு 50 இலட்சம் ஒதுக்கியிருந்தார்.
- பாகிஸ்தான் படையும் அவருக்குத் துணைக்கு வந்ததால், "அரச பதவி இறைவனால் எனக்கு வழங்கப்பட்டது. அதனை யாராலும் பறிக்க முடியாது' என்றார். 15.8.1948 அன்று ஹைதராபாதை தனி நாடாக அறிவித்தார் மன்னர். ஹைதராபாத் அரசு தனது இராணுவ பலத்தை 42,000 ஆக உயர்த்தியது. 10 புதிய விமான தளங்கள் ஏற்படுத்தப்பட்டன. உள்துறை அமைச்சர் படேல், கே.எம். முன்ஷியை பிரதிநிதியாக ஹைதராபாதிற்கு அனுப்பினார்.
- இரும்பு மனிதர் படேல் 13.9.1948-இல் இந்திய இராணுவத்தை ஹைதராபாதிற்கு அனுப்பினார். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், நிஜாமின் படைகள் சீருடையைக் களைந்துவிட்டுச் சரணடைந்தன. இந்தியப் படைகளின் தலைவரான மேஜர் ஜெனரல் ஜே.என். செளத்ரியை படேல் பாராட்டினார். இரண்டு ஆண்டுகள் ஹைதராபாத் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. 26.1.1950 அன்று ஹைதராபாத் இந்தியாவோடு இணைந்தது.
- ஹைதராபாதிற்கு அடுத்த தலைவலி, ஜம்மு - காஷ்மீர். சர்தார் படேல், வி.பி. மேனன் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்காமல், தனி நாடு என்றார் மன்னர். பாகிஸ்தான் அரசு வடமேற்கு எல்லையிலிருந்த சிலரை காஷ்மீருக்குள் அனுப்பியது. அவர்கள் காஷ்மீர் மக்களைக் கொலை செய்து, கொள்ளையடித்துப் பெரும் அழிவை ஏற்படுத்தினர். தக்க நேரத்தில் காஷ்மீர் மன்னர் இந்திய அரசின் துணையை நாடினார். சர்தார் படேல் இந்திய இராணுவத்தை அனுப்பி, நிலைமையைக் கட்டுக்குள் கொணர்ந்தார்.
- 27.10.1947-இல் காஷ்மீர் மன்னர், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைய கையொப்பம் இட்டார். அதற்கு அந்த மண்ணின் மைந்தராகிய ஷேக் அப்துல்லாவும் முழு ஒத்துழைப்பு தந்தார். படேல், வருமுன்னர் காக்கும் மதியுடையவர் என்பதால், மேஜர் ஜெனரல் திம்மையா தலைமையில் இராணுவத்தையும் அங்கு தங்க வைத்தார்.
- சர்தார் படேல் எடுத்த நடவடிக்கைகளால், இந்திய அரசுக்கு சுமார் 77 கோடி ரூபாய் கையிருப்பு வந்தது. சுதேச அரசர்களின் அரண்மனைகள், மாளிகைகள் இந்திய அரசின் உடைமை ஆயின. ஆண்டுக்கு 1.56 கோடி ரூபாய் வருவாய் வரும் நிலங்களை ஹைதராபாத் நிஜாம், இந்திய அரசிடம் ஒப்படைத்தார். சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைத்ததால், 14,000 மைல் நீளமுள்ள இருப்புப் பாதை, எந்தவித தொகையும் தரப்படாமல் நாட்டுக்குக் கிடைத்தது.
- கிழிசல் பட்டுக் கிடந்த பாரதத்தை, வல்லபாய் படேல் தம்முடைய மதிநுட்பம் என்னும் ஊசி நூலால் தைத்து, புதிய பாரதத்தை உருவாக்கினார்.
- இரண்டாம் உலகப் போரில் உலகைக் காப்பாற்றிய சர்ச்சிலை "சேவியர் ஆஃப் த வேல்டு' என்று கூறுவார்கள். அதுபோல சர்தார் வல்லபபாய் படேலை "சேவியர் ஆஃப் இண்டியா' எனச் சொல்லலாம்.
- இன்று (டிச. 15) சர்தார் வல்லபபாய் படேல் நினைவுநாள்.
நன்றி: தினமணி (15 – 12 – 2022)