TNPSC Thervupettagam

புதிய முயற்சி, சரியான முனைப்பு!

August 8 , 2024 113 days 134 0

புதிய முயற்சி, சரியான முனைப்பு!

  • தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு நியாயவிலைக் கடையில் பொட்டலமிடப்பட்ட பொருள்களை விநியோகிக்கும் நடவடிக்கை சோதனை முறையில் தொடங்கப்பட்டிருக்கிறது. நுகர்வோருக்குத் தரமான பொருள்களை வழங்குவதும், விநியோக முறைகேடுகளைத் தடுப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்கள். இம்முயற்சி பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை.
  • தமிழகத்தில் 36,578 நியாயவிலைக் கடைகள் மூலமாக, 2,23,86,333 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளின் மூலமாக, அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்படுகின்றன. இங்கு அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, சமையல் எண்ணெய் (பாமாயில்), மண்ணெண்ணெய் ஆகியவை விநியோகமாகின்றன.
  • வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதிலும், அனைத்து மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் நியாயவிலைக் கடைகளின் பங்கு அளப்பரியது. இந்தக் கடைகளை மாநில அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன.
  • நியாயவிலைக் கடைகளின் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்துள்ளன. குடும்ப அட்டை புத்தகங்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையும் இத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. ஆதார் அட்டை இணைப்பின் வாயிலாக போலி பயனாளிகள் களையெடுக்கப்பட்டு விட்டதால், உண்மையான பயனாளிகளுக்கு அரசின் திட்டம் சிறந்த முறையில் சென்று சேர்வது எளிதாகி இருக்கிறது.
  • இந்நிலையில், நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருள்களை சேதாரமின்றியும் தரமாகவும் பாதுகாப்பாகவும் வழங்கும் முயற்சியில் தமிழக அரசு தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உணவு தானியங்கள், சர்க்கரை, பருப்பு வகைகளை சரியான முறையில் பொட்டலமிட்டு நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கும் திட்டம், சோதனை முறையில் தற்போது சேலம், சீரங்கப்பாளையம் நியாயவிலைக் கடையில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் சரிவிகித உணவு, ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், விநியோக முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலம் முழுவதிலும் 234 நியாயவிலைக் கடைகளில் இந்த விற்பனை பரிசோதனை முறையில் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இதனைப் பரவலாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஆரம்ப காலத்தில் பெரும் பீப்பாய்களில் கொண்டுவரப்பட்ட பாமாயிலை விநியோகிப்பது பெரும் சவாலாக இருந்தது. தற்போது பாமாயில் பொட்டல வடிவில்தான் விநியோகமாகிறது. மூட்டையாக வரும் தானியங்கள், சர்க்கரை, பருப்பு ஆகியவற்றில் சேதாரங்கள் நிகழ்வதும், எடைநிறுத்தலில் குறைகள் ஏற்படுவதும் வழக்கமான குறைபாடாக உள்ளது. எனவே, இந்தப் புதிய திட்டத்தால் நுகர்வோருக்கு தரமான, சரியான எடையுடன் கூடிய அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் என்று நம்பலாம். தவிர, நியாயவிலைக் கடை ஊழியர்களின் பணிப் பளுவையும் இந்தப் பொட்டல முறை குறைக்கும்.
  • தமிழகத்தின் 355 நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை அங்கேயே பொட்டலமிட்டு, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்புவதும் எளிதாக இருக்கும்.
  • எனினும் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. பொதுவிநியோக முறையில் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கல் அரிசியின் தரம் ஓரளவு மேம்பட்டிருக்கிறது. ஆனால், துவரம்பருப்பு, கோதுமை ஆகியவை இன்னமும் தரம் உயர்த்தப்பட வேண்டிய நிலையில்தான் உள்ளன.
  • குறிப்பாக, அத்தியாவசியப் பொருள் அட்டையை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ கோதுமை வழங்கப்பட வேண்டும். ஆனால், பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோதான் வழங்கப்படுகிறது. தவிர, அந்த கோதுமையும் சுத்தம் செய்யப்படாததாக இருக்கிறது. இதை சீர்செய்ய வேண்டியது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொறுப்பு.
  • விலையில்லாமல் வழங்குவதாலோ, மலிவு விலையில் வழங்குவதாலோ, பொருள்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது. சிந்தாமணி, வளர்மதி, அமுதம் அங்காடி போன்ற பெயர்களில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் தரமாக விநியோகிக்கும் தமிழகக் கூட்டுறவுத் துறைக்கு, நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்களின் தரத்தை மேம்படுத்துவது சிரமமான செயலல்ல.
  • சில ஆண்டுகளுக்கு முன்னர் மலிவுவிலையில் மிளகு, சீரகம், மஞ்சள்தூள் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை சிறு பொட்டலத் தொகுப்பாக ரூ. 50-க்கு நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்தபோது அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ, அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. உளுத்தம் பருப்பு விநியோகமும் நிறுத்தப்பட்டுவிட்டது. இவற்றை மீண்டும் விநியோகம் செய்வது மாநில அரசின் கடமை.
  • கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நியாயவிலைக் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை பற்றாக்குறையாக இருந்தன. இதனால் நுகர்வோர் பலருக்கு அவை கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்படாத வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்முதல் பணிகளை உணவுப்பொருள் வழங்கல் துறை முடுக்கிவிடுவதும் அவசியம்.

நன்றி: தினமணி (08 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்