TNPSC Thervupettagam

புதுக்கோட்டையில் ஒரு கீழடி – பொற்பனைக்கோட்டை

September 2 , 2021 1065 days 626 0
  • கீழடி ஆய்வுக்குப் பின்னர், தமிழர்களின் தொன்மையை உலகம் மேலும் அதிகமாக உணர்ந்துவருகிறது. கீழடியில் கிடைத்துள்ள புழங்கு பொருட்கள் தமிழகத்தில் வேறெங்கும் இதுவரை கிடைக்காதவை என்றால், வேறெங்கும் கிடைக்காத ‘சங்க காலக் கோட்டை’ எனும் நம்பிக்கை தருவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக் கோட்டை. ஆனால், இங்கு தொல்லியல் ஆய்வு தொடர வேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா?
  • ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஆதித் தொல்குடிகள் பயன்படுத்திய ‘கல்லாயுதம்’ ஒன்று புதுக்கோட்டை அருகில் உள்ள குருவிக்கொண்டான்பட்டி கிராமத்தில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொ.மு.ஆ. 5000 ஆண்டுகள் என மதிப்பிடக்கூடிய தொன்மையுடன், இனக்குழு மக்கள் வாழ்க்கையைக் காட்டக் கூடிய பாறை ஓவியங்கள் திருமயம் கோட்டையில் இருப்பதாக, ‘புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்’ நூலாசிரியர் நா.அருள்முருகன் சொல்கிறார்.
  • இரண்டாண்டுகளுக்கு முன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தால் அறந்தாங்கி அருகில் உள்ள அம்பலத்திடலில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்திய புதுக்கோட்டைப் பகுதியின் தொன்மை வரலாறு தொடர்வதன் சான்றாகும்!
  • ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ உள்ளிட்ட பல அரிய வரலாற்று நூல்களின் ஆசிரியரும், தொல்லியல் அறிஞருமான ராஜாமுகமது, சிந்துவெளியில் காணப்பட்ட பானைக் குறியீடு (எழுத்து)களும், புதுக்கோட்டைப் பகுதியில் கிடைத்துள்ள பானைக் குறியீடு(எழுத்து)களும் ஒன்றாக உள்ளதாக வியப்பூட்டுகிறார்!
  • சங்க காலத்திலிருந்து பொ.ஆ.13-ம் நூற்றாண்டு வரையான சோழ - பாண்டிய நாடுகளின் எல்லைப் பகுதி இன்றைய புதுக்கோட்டைக்குள் வருவதாலும், வடக்கில் கந்தர்வக்கோட்டை, தெற்கில் கீழாநிலைக்கோட்டை இருப்பதாலும் பொற்பனைக் கோட்டை பாதுகாப்புக் கருதி கோட்டை கொத்தளத்துடன் இருந்திருக்கலாம்தானே?
  • சங்க இலக்கியத்தோடும் சங்கப் புலவர்களோடும் தொடர்புடைய பற்பல ஊர்ப் பெயர்கள் இப்போதும் புதுக்கோட்டையைச் சூழ இருக்கின்றன. புகழ்பெற்ற ‘கெடுக சிந்தை கடிதிவள் துணிவே’ எனும் (புறநானூறு-279) பாடலை எழுதிய மாசாத்தியாரின் ஒக்கூர், இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் உள்ளது.

புதுக்கோட்டையில் ஒரு கீழடி

  • வேள்பாரியின் ஊரான பரம்புமலை, புதுக்கோட்டையிலிருந்து 50 கிமீ தொலைவில்தான் உள்ளது. உலகப் புகழ்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் புறநானூற்றுப் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாரின் ஊர்தான் இன்றைய மகிபாலன்பட்டி.
  • இதுவும் புதுக்கோட்டை மாவட்ட எல்லை தாண்டினாலும் 50 கிமீ தொலைவில்தான் உள்ளது. இவற்றோடு, ஆவூர், முள்ளூர், குடவாயில் (குடவாசல்), அழும்பில் (அம்புக்கோவில்), எரிச்சலூர் (எறிச்சி), குறிச்சி, கீரனூர், அவ்வையாப்பட்டி முதலிய சங்க காலத் தொடர்பின் ஊர்ப் பெயர்கள் புதுக்கோட்டை அருகில் இன்றும் புழங்குவது, அன்றைய சரித்திரத்தின் தொடர்ச்சி, அசைக்க முடியாத அகச்சான்றாகும்.
  • அதேபோல, புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த சங்க கால மக்கள் 60 கிமீ மேற்கிலுள்ள கடல்வழியில் ரோமாபுரியோடு வணிகம் செய்தனர் என்பதற்குச் சான்றாக, பொற்பனைக் கோட்டையின் அருகிலுள்ள கருக்காகுறிச்சி எனும் ஊரில் ரோமானிய நாணயங்கள் கிடைத்திருப்பதும், அவை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதும் புறக்கணிக்க முடியாத புறச்சான்றாகும்.
  • இரும்புக் கால ஆயுதங்கள், அணி-மணிகள், புதை தாழிகள் புதுக்கோட்டையைச் சுற்றிலும் கிடைத்துள்ளன. பொ.ஆ.மு. 800 முதல் பொ.ஆ. 100 வரை பெருங்கற்கால நாகரிகம் இங்கே தழைத்திருந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தொல்லியல் அறிஞர் கருதுகின்றனர்.
  • இந்தக் காலத்தையே சங்க காலம் என்று மு.வரதராசனார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
  • ஓவியத்துக்கு உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசலின் ஏழடிப் பட்டம் குகையில் பிராமி (எ) தொல் தமிழி எழுத்துகள் உள்ளன.
  • மாவட்டம் முழுதும் உள்ள இயற்கைக் குகைக் கோவில்கள், ஏராளமான கல்வெட்டுகளுடன், சமண ஆய்வுக்கு மிகவும் முக்கியமான சான்றுகளைக் கொண்டிருக்கின்றன.
  • புதுக்கோட்டையில் ஆதிகாலந்தொட்டே தொல்குடிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதால், இப்போதும் நூற்றுக்கு மேற்பட்ட தொல்லியல் துறைப் பகுதிகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ளதால், ‘தொல்லியல் ஆய்வுகளின் தொட்டில் புதுக்கோட்டை’ என்பது மிகையல்ல!
  • தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன், 2005-ல் இங்கு நடத்திய ஆய்வில், “அழகன்குளம், உறையூர், பூம்புகாரில் கண்ட செங்கல்லும், ‘பொப்பண்ணக் கோட்டை’யில் கிடைத்துள்ள செங்கல்லும் ஒரே வகை” என்றதோடு, இதற்கு, சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரின் பாயிரச் செய்யுள் வரிகளையும் இலக்கியச் சான்றாகப் பதிவு செய்துள்ளார்.
  • ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, புதுக்கோட்டையின் தொல்லியல் சான்றுகளைக் கண்டறிந்து சொல்லிக்கொண்டே இருக்கும் கரு.இராசேந்திரன், பொற்பனைக் கோட்டையை ஆய்வுசெய்ய வேண்டி, மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
  • மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துக்கு அரசு அனுமதி அளிக்க, பல்கலைக்கழகமும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்க, தொல்லியல் பேராசிரியர் இனியன் தலைமையில், திருச்சியிலிருந்து ஒரு குழு ஆய்வு செய்ய வந்துசேர்ந்தது.
  • 2021 ஜூலை 30 அன்று, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சரும், பொற்பனைக்கோட்டை அமைந்துள்ள ஆலங்குடித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சிவ.வீ.மெய்யநாதன் அகழாய்வைத் தொடங்கி வைத்தார்.
  • புதுக்கோட்டை மாவட்டத் தொல்லியல் ஆர்வலர் ஆசிரியர் ஆ.மணிகண்டன் குழு, வேப்பங்குடி ஊராட்சித் தலைவர் ராஜாங்கம், ராமநாதபுரம் மாவட்டத் தொல்லியல் குழுத் தலைவர் ராஜகுரு, வேப்பங்குடி கிராமத்து சுபாஷ்சந்திர போஸ் இளைஞர் மன்றத்தினர், புதுக்கோட்டைத் தன்னார்வலர்கள் ஆசிரியர் ராஜாங்கம், டெய்சிராணி, பீர்முகம்மது, புதுகை செல்வா உள்ளிட்டோர் அகழாய்வுப் பணிகளில் உதவி செய்தாலும், இப்போது அரசு ஆணை, நிதிஉதவி கிடைத்தால்தான் அடுத்த கட்டத்துக்கு இந்த ஆய்வுகள் நகர முடியும்!
  • பொற்பனைக்கோட்டையில் வட்ட வடிவில் உள்ள கோட்டை 1.63 கிமீ சுற்றளவுடன், 50 ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு புறவாயில்கள், மேற்புற வாயில்கள், பத்து அடி அகலச் சுற்றுப் பாதைகளில் செம்புராங்கல் பரவி, அமைந்துள்ளது.
  • பாதை இடையே அம்பு எய்யும் அறைகள் (கொத்தளம்) காணப்படுகின்றன. இவை, மண் மேடல்ல கோட்டைதான் என்பதை அடையாளப்படுத்த முக்கியமான சான்றாகும் என்கிறார் ஆ.மணிகண்டன்.
  • இந்தப் பகுதிகளில் இரும்பு உருக்காலைகள் இருந்த சான்றுகள் புதுக்கோட்டை மன்னரின் மேனுவல் ஆவணங்களிலும் உள்ளதாகத் தெரிவிக்கிறார் ஆ.மணிகண்டன்.
  • இது போர்க்களக் கோட்டைதான் என்பதற்கு ஆதாரமாக இதனருகில் ‘செந்நாக்குழி’ எனும் இடம் இப்போதும் உள்ளது. ‘செந்நாக்குழி’ என்பதன் பொருள் ‘சிவந்த நெருப்புக் குழி’ என்பதால், ‘இரும்பு உருக்கு ஆலை’ இங்கு இருந்ததற்கு இதுவே தெளிவான சான்று.
  • பொற்பனைக்கோட்டையில் முக்கோண வடிவில் கிடைத்துள்ள கல்வெட்டில், பசுக் கூட்டத்தைக் கவர நடந்த போரில் கோட்டைக் காவலன் இறந்த செய்தி 2013-ல் வெளிவந்த ‘ஆவணம்’ இதழில், தொல்லியல் அறிஞர் சு.இராஜவேலின் குழுவால் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • எனவே, பொற்பனைக்கோட்டையின் அகழாய்வு, கோட்டைக் கொத்தளம் வரை நீள வேண்டும். ஒன்றிய அரசு கைவிட்டாலும் தமிழ்நாடு அரசு கையில் எடுத்ததால்தான் கீழடியின் தொன்மை உலகுக்குத் தெரியவந்தது. அதேபோல், தமிழ்நாடு அரசே பொற்பனைக் கோட்டையில் நேரடியாகத் தொடர் ஆய்வில் ஈடுபட வேண்டும்.
  • திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இனியனின் அறிக்கையை விரைந்து பெற்று, இதைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுத் துறையே தொடர்வதுதான் சரியாக இருக்கும். இதைத் தமிழ்நாடு அரசு செய்யும், செய்ய வேண்டும் என்பதே தமிழ்கூறு தொல்லுலகின் வேண்டுகோள், எதிர்பார்ப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 09 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்