TNPSC Thervupettagam

புதுமைப் பயணம் போவோமா

November 24 , 2023 414 days 296 0
  • பயணங்கள் மனிதர்களின் வாழ்வை மாற்றக்கூடியவை. தனிப்பயணம், குழுப்பயணம், சாகசப் பயணம் எனப் பயணங்களில் பல வகை உண்டு. இதில் புதிதாக இணைந்திருக்கிறது ‘தொண்டுப் பயணம்’. இது ‘Voluntourism’ எனப்படுகிறது. இளைய தலைமுறைக்கு விருப்பமான முறையில், பட்ஜெட்டுக்குள் அடங்கும் இந்த தொண்டுப் பயணங்களுக்கான பிரத்யேக செயலிதான் ‘வேர்ல்ட் பேக்கர்ஸ்’ (Worldpackers).

உலகம் நம் கையில்

  • இந்தியாவுக்குள் அல்லது உலகின் எந்த நாட்டிலும் தொண்டுப் பயணம் மேற்கொள்ளலாம். வழக்கமான சுற்றுலாப் பயணத்தைப் போல அல்லாமல், தங்கும் இடத்துக்கு ஏதாவது ஒரு தொண்டு செய்ய வேண்டும். அதாவது, சுத்தம் செய்வது, மரம் நடுவது, சுவர் ஓவியங்கள் வரைவது, ஆவணப்படுத்துவது போன்று ஏதாவதொரு உதவி செய்ய வேண்டும். பதிலுக்கு தன்னார்வலருக்கான தங்குமிடம், உணவு போன்றவை கட்டணமின்றி அல்லது குறைந்த கட்டணத்துக்கு நிர்வாகத்தால் வழங்கப்படும். இப்படித்தான் தொண்டு பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • தன்னார்வலர்களை வரவேற்கும் குழுக்கள் பற்றியும், இது குறித்து அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா வாசிகளுக்குமான தகவல் களஞ்சியம்தான் ‘வேர்ல்ட் பேக்கர்ஸ்’ செயலி. கூகுளின் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளங்களிலிருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். இதைப் பயன்படுத்த கட்டணம் ஏதுமில்லை. செயலியைத் திறந்தவுடன் உங்களுக்கான கணக்கைத் தொடங்க வேண்டும். தனிப்பயணம், குழுப்பயணம், சுற்றுலா, பேக்பேக் பயணம், தொண்டுப் பயணம் எனப் பல வகைப் பயணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதிலிருந்து விருப்ப பயணங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்து, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா எனச் செல்ல விரும்பும் இடம், தகவல்கள் அறிந்து கொள்ள விரும்பும் கண்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இனி, பேக்பேக்கர்ஸ் செயலியில் தொண்டுப் பயணத்தைத் திட்டமிடலாம்.

திட்டமிடல்

  • தனிப்பயணம் மேற்கொள்ள, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த, மொழிகள் கற்க, புது அனுபவங்களைப் பெற தொண்டுப் பயணம் மேற்கொள்ளலாம். வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஓரிடத்தில் ஒன்றிணைந்து ஆரோக்கியமான பயனுள்ள மாற்றத்தைக் கொண்டு வருவது இதுபோன்ற தொண்டுப் பயணத்தின் மூலம் சாத்தியம். உதாரணத்துக்கு, தருமரிபுரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் சுவர் ஓவியங்கள் வரைய தன்னார்வலர்கள் தேவை எனத் தொண்டு நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்கிறது என வைத்துக் கொள்வோம். பேக்பேக்கர்ஸ் செயலியில் இந்த அறிவிப்பு குறித்த செய்தி வெளியாகும்பட்சத்தில், ஆர்வமுள்ளவர்கள் தகவல்களைத் தெரிந்து கொண்டு அந்தத் திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கலாம். அந்த இடத்துக்கு பயணம் செய்து தொண்டு வேலையைச் செய்து முடிப்பது மட்டுமின்றி தன்னார்வலர் குழுவோடு பாட்டு, நடனம், ஊர் சுற்றல் என அந்தப் பயணத்தை விரிவாக்கலாம்.

கற்றலும் அளித்தலும்

  • உலக அளவில் மாணவர்கள், தன்னார்வலர்கள், தனிப்பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியில் ‘பேக்பேக்கர்ஸ்’ செயலி மிகப் பிரபலம். தொண்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இடத்தை தேர்வு செய்து பங்கேற்பை உறுதி செய்யும்பட்சத்தில் பயணக் குறிப்பு, திட்டம், பாதுகாப்பு குறித்த அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும். இதுபோன்று தொண்டுப் பயணம் மேற்கொள்ளும்போது முக்கியமாக பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டும். தொண்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் திட்டம் பற்றி இணையதளத்தில் விமர்சனங்களைத் தேடி அறியலாம். சில குழுக்கள், பயணத்தின் முடிவில் தன்னார் வலர்களின் தொண்டுப் பணிக்குச் சான்றிதழ்களையும் வழங்குகின்றன என்பது இதிலுள்ள இன்னொரு சிறப்பு. இதைத் தவிர, பயண அடிப்படைகள், பயண திட்டமிடல், பயண பரிந்துரைகள் ஆகியவற்றையும் வழங்குகிறது ‘வேர்ல்ட் பேக்கர்ஸ்’ செயலி!

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்