TNPSC Thervupettagam

புதுமைப் பெண்களின் அலட்சியம்

November 17 , 2022 632 days 416 0
  • ஒரு பெண் பிளஸ் 2 முடித்திருக்கும் போது அவர் 18 வயதை எட்டியிருப்பார். இந்த வயதில் வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதியையோ, உடல் திறனையோ எட்டுவதற்கு வாய்ப்பில்லை. இக்கல்வித் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட சில போட்டித் தேர்வுகளை மட்டுமே எழுத முடியும். ஆனால், அத்தகைய தேர்வில் இளநிலை பட்டப்படிப்பு படித்தோர் முதல் முனைவர் பட்டம் பெற்றோர் வரை பங்கேற்கின்றனர்.
  • பட்டதாரிகளுடன் போட்டித் தேர்வு எழுதி பிளஸ் 2 மாணவி தேர்ச்சி பெறுவது எளிதன்று. பிளஸ் 2 முடித்தவர் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்பையோ, பொருளாதார சுதந்திரத்தையோ பெற முடியாது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் வேளையில் பெண்களின் எண்ணம் விரிவடைந்து இலக்கை நிர்ணயிக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் முடியும்.
  • அதற்காக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தை தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து அதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது.
  • ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டமே உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டது. இப்படி மாற்றப்பட்டபோது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. திருமண நிதியுதவியைவிட இத்திட்டம் பெண்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப பெண்களின் திருமண வயதும் 21 ஆக அதிகரிக்கப்பட்டதால் நடப்பாண்டில் உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது.
  • ஒரு பெண், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்திற்கான தகுதியாகும். அத்துடன், குறிப்பிட்ட நான்கு வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் போன்றவை பிற தகுதிகளாகும்.
  • இதனைத் தொடர்ந்து மாணவியர் பலரும் விண்ணப்பிக்கத் தொடங்கினர். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவியர் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் என்றபோதும் நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயின்றோரும் விண்ணப்பித்தனர்.
  • நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானபோது விண்ணப்பிப்பது எளிதான நடைமுறை என்றே மாணவியர் கருதினர். ஆனால், இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவியரின் விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை மூலம் சரிபார்க்கப்பட்டு, பல்வேறு கட்டங்களுக்குப் பிறகே நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. போதிய தகுதிகளுடன் முறையாக விண்ணப்பித்த மாணவியர் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற்று வருகின்றனர்.
  • ஆனால் தேவையான தகவல்களை முறையாகப் பதிவேற்றம் செய்யாமல் அலட்சியமாக இருந்தவர்கள், அனைத்து தகுதிகளும் இருந்தும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற இயலவில்லை. இதற்கான காரணம் மாணவியரின் அலட்சியமே ஆகும்.
  • வங்கிக் கணக்கிலும், பள்ளிச் சான்றிதழிலும் மாணவி பெயரின் எழுத்துகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், சிலரின் பெயரில் ஓரிரு எழுத்துகள் மாறிப்போனதால் அவர்களால் நிதியுதவி பெற இயலவில்லை. அதுபோன்று வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறையாக உள்ளது.
  • ஆனால், வங்கிக் கணக்கு தொடங்கி சில ஆண்டுகளாகியும், ஆதார் அட்டை பெற்று பல ஆண்டுகளாகியும் பெரும்பாலான மாணவியர் இதனைக் கடைப்பிடிக்கவில்லை. அனைத்து வகையான நிதியுதவி பெறவும் தனியாக வங்கிக் கணக்கு அவசியம் என்றபோதும் பல மாணவியர் வங்கிக் கணக்கு தொடங்கவில்லை.
  • தற்போதைய சூழலில் வங்கிக் கணக்கு தொடங்குவது என்பது எளிதான நடைமுறையாகி விட்டது. இருந்தபோதும் சிறிது நேரம் காத்திருந்து வங்கிக கணக்கு தொடங்குவதில் கூட மாணவியர் அலட்சியம் காட்டுகின்றனர். புதுமைப் பெண் திட்டம் மட்டுமின்றி பலவகையான நிதியுதவி பெறவும் வங்கிக் கணக்கு கட்டாயம். ஆனால் தங்களின் அலட்சியத்தால் மாணவியர் பலரும் எவ்வகையான நிதியுதவியும் பெறுவதில்லை.
  • உயர்கல்வியில், மாநில அரசின் கல்வி உதவித் தொகை, மத்திய அரசின் கல்வி உதவித் தொகை, தமிழ் வழி ஊக்கத் தொகை என பல்வகையான நிதியுதவிகளை மாணவ, மாணவியர் பெறுவதற்கான வழிவகைகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கான சான்றுகளைப் பெறுவதில் அலட்சியம், விண்ணப்பிப்பதில் நிலவும் அறியாமை போன்றவற்றால் பலர் எவ்வகையான நிதியுதவியும் பெறுவதில்லை.
  • அரசு கல்லூரிகளில் செலவினம் குறைவு என்பதால், அரசின் நிதியுதவியைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. அதன்பொருட்டே அரசு கல்லூரிகளில் அண்மைக்காலமாக சேர்க்கை பெறும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2019-20 ஆண்டுக்கான அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை, கடந்த ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் மாணவியர் எண்ணிக்கை 18.2 %-உம், மாணவர்கள் எண்ணிக்கை 11.4 %-உம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
  • ஆய்வறிக்கையின்படி உயர்கல்வி சேர்க்கையில் இரண்டாமிடத்தில் உள்ள தமிழகத்தில், உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பெண்களின் எண்ணிக்கை 51%-ஆக உள்ளது. முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளத்தில் இது 44.7 %-ஆக உள்ளது.
  • அண்மைக்காலமாகவே உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பெண்களின் அதிகரித்து வந்தாலும், நடப்பு ஆண்டில் அதிகமானோர் சேர்க்கை பெற்றுள்ளனர். இருப்பினும், பள்ளிக் கல்வியைப் போன்று உயர்கல்வியிலும் இடைநிற்றல் நிலவுகிறது. இடைநிற்றலைத் தடுத்து அவர்களைத் தக்க வைக்க வேண்டும்; பள்ளியில் பயிலும் அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்கை பெறச் செய்ய வேண்டும். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த பலனை அடைய முடியும். அவ்வகையில் "புதுமைப் பெண்கள்' திட்டத்தில் மாணவியரிடையே இருந்துவரும் அலட்சியம் நீங்கி பொறுப்புணர்வு ஏற்பட வேண்டும்.

நன்றி: தினமணி (17 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்