TNPSC Thervupettagam

புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு!

August 28 , 2019 1918 days 1779 0
  • ஈரோடு மாவட்டம் கொடுமணல், அறச்சலூரில் இசை சார்ந்த அகழ்வாராய்ச்சி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருள்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பைத் தந்தது. இன்னும் தோண்டி எடுத்தால் பல தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
கொடுமணல் நாகரிகம்
  • கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையான வரலாற்று தொடர்புடையது. ஆனால், இந்தப் பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்துக்குத் தெரியவில்லை. இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது. 
    கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
  • இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின்போது கல்லறைகள்,  சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
    இங்கு முதல் ஆய்வினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985- ஆம் ஆண்டு நடத்தின.
  • பின்னர் 1986, 1989,1990-ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தின. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்கள் தோண்டப்பட்டு பழைமையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
அகழாய்வு
  • 1999-ஆம் ஆண்டு மீண்டும் ஓர் அகழாய்வு நடந்தது. அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப் பெரிய ஆய்வாகக் கருதப்படுகிறது. காரணம், ஒரே பகுதியில் 15 அகழிகள் தோண்டுவது என்பது மிகப் பெரிய விஷயமாகும். இது இந்தப் பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
  • காரணம், இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகள் வெவ்வேறு விதமாக உள்ளன. இங்கு கிடைத்த பொருள்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
  • இரும்பு பொருள்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டுமணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கிருஷ்ணன் கோவில் வட்டாரத்தில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள் நிரம்ப புதைந்துள்ளன. இது குறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்று துறையைச் சார்ந்த உதவிப் பேராசிரியர் கந்தசாமி, பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர் தங்க முனியாண்டி, பேராசிரியர் முத்துகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
முதுமக்கள் தாழிகள்
  • இந்தப் பூமியில் காணப்பட்ட முதுமக்கள் தாழிகளின் தொடர்ச்சி பல இடங்களில் இந்த வட்டாரத்தில் உள்ளதாகத் தரவுகள் சொல்கின்றன. அதன் மீது கற்பாறைகள் அடுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான மூன்றுவித ஓடுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. 
  • ஏறத்தாழ 2 அங்குலம் கனப் பரிமாணத்தில் களிமண், செம்மண் முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. இதில் வண்ணப் பூச்சும் பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கற்கள் யாவும் கனம் அதிகமாகவும், அவை இரும்புத் தாது கலந்து சுட்ட மண்ணால் கலவைப்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகள் பூமியில் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் வடபுறமும், கீழ்மேலாகவும் ஒரு சிறு ஓடை உள்ளது.
  • இந்த சிற்றோடையின் வடகரை மிகப் பழைமையான சுவர் தடுப்புகளும் கொண்டுள்ளது. எனவே, அங்கு கட்டுமானப் பணிகள் அந்தக் காலத்தில் நடந்துள்ளதாகத் தெரிகிறது. 
    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அண்மையில் அடிக்கல் நாட்டிய நிலத்திலும் அகழ்வாராய்ச்சி செய்தால் தமிழர்களின் தொல் நாகரிகத்தின் அடையாளம் கிடைக்கும் என்று அந்த ஊரைச் சேர்ந்த கள ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஏற்கெனவே விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி, கோபால்சாமி மலை போன்ற சில பகுதிகள், திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை போன்ற பகுதிகள் ஆகியவற்றில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மட்டுமல்லாமல், அங்குள்ள பாறை ஓவியங்களையும் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன. 
கீழடியில்.....
  • கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண் பானைகள் உள்பட 5,300 சங்ககால பொருள்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மதுரை, 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாசார தலைநகரம் மதுரை. தமிழ்நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மதுரை.  
  • இந்த நகரின் தொன்மையைப் பேசும் சான்றுகள் நிறையவே உண்டு. பிளினி, தாலமி போன்ற கிரேக்க அறிஞர்கள் மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவரின் எழுத்துக் குறிப்புகளும், சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளும் விளக்குகிற தகவல்கள், இந்த நகரம் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதை உணர்த்தும் சான்றுகளாகின்றன. இருந்தாலும், இந்த  மதுரை மாநகரைப் பற்றிச் சொல்லும்படியான அகழ்வாய்வு சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. 
  • அந்த நகரின் வரலாற்றை கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்துக்கு நகர்த்துவதற்குத் தேவையான வலுவான ஆதாரங்கள் எதுவும் மதுரை நகர் சார்ந்து இதுவரை நமக்குக் கிடைக்காமல் இருந்தன. இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூரு பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி அகழ்வாராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரிகம் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இருந்து மீண்டும் கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள்  வந்துள்ளன. 
ஆதிச்சநல்லூரில்....
  • ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி, 3,000 ஆண்டுகளின் தொன்மையைக் காட்டுகிறது. 1872, 1876, 1903, 1914-ஆம் ஆண்டு எனப் பல கட்டங்களில் இங்கு ஆய்வுப் பணிகள் நடந்தன. முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம் போன்ற பண்டைய பயன்பாட்டுப் பொருள்கள் கிடைத்தன. இது குறித்தான சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கை வெளிவராமல் மத்திய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 
    பழனி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம்-சூலூர், ஈரோடு மாவட்டம்=அறச்சலூர், நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி, கண்டியூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
  • ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துகள்; கேரள மாநிலத்தின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களைக் கொண்டே தமிழின் தொன்மையை அறிந்துகொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே மெளரிய மன்னனும், திபெத்திய மன்னனும் பயன்படுத்தியிருப்பர் என்று கூறப்படுகிறது.
மற்ற நகரங்களில்....
  • அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர் போன்ற இடங்களில் அகழாய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக, இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள்தான் கிடைத்தன. ஆனால், கீழடியில் வேறு சில அரிய பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரிகள் இருந்தன என்கின்றன செய்திகள். இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
  • சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பைச் சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் அரசியல் மனமாச்சரியங்களுக்கு இடமில்லாமல் முறையாக நடத்தப்பட வேண்டும். ஆதாரப்பூர்வமான முறையான வரலாறு இல்லாமல் இருப்பதுதான் நமது மிகப் பெரிய பலவீனம். அகழாய்வுகளால்தான் அந்தக் குறை அகலும்.

நன்றி: தினமணி(28-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்