மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் தனியொருவர் அதிக நேரம் படிக்கிறார்; சராசரியாக வாரத்துக்கு 42 மணி நேரங்கள் என்கிறது ‘குளோபல் இங்கிலீஷ் எடிட்டிங்’ என்கிற அமைப்பு 2018-ல் உலக அளவில் நடத்திய ஆய்வு. அடுத்ததாக, தாய்லாந்தில் 9.24 மணி நேரமும், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் சுமார் 5.30 மணி நேரமும் படிக்கிறார்கள் என்று கூறுகிறது.
இந்த ஆய்வில் புலப்படாத ஒன்று, இந்தியர்கள் படிக்கும் அந்தப் பத்தரை மணி நேரத்தை அச்சுப் புத்தகங்களில் படிக்கிறார்களா அல்லது மின்புத்தகம், திறன்பேசி (ஸ்மார்ட்போன்) இவற்றையும் சேர்த்தா என்று குறிப்பிடவில்லை. அது மட்டும் அல்ல; மாணவர்கள் பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வுகள் என்று படிப்பதும் இதில் கணக்கில் கொள்ளப்பட்டதா என்று குறிப்பிடவில்லை. இவையும் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால், இந்தியர்கள் கல்விசாரா பொதுப் புத்தகங்கள் படிப்பது வெகு குறைவு என்பதும் தெரியவந்திருக்கும்.
புத்தகங்கள் நமது கற்பனை வளத்தைப் பெருக்குகிறது. உதாரணமாக, கதையொன்று படிக்கும்போது அதில் பூங்கா ஒன்றைக் குறித்து விவரிக்கப்படும்போது, படிக்கும் ஒவ்வொருவரும், தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு அதை நிர்மாணித்துக்கொள்வார்கள். புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், ஆரோக்கியமான அறிவார்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.
காரில் பயணிக்கிறோம் என்பதற்காக நடக்காமல் இருந்தால் கால்கள் வலுவிழந்துபோய்விடுவதைப் போன்று, புத்தகங்களைப் படிக்காமல் இருந்தால் நமது மூளை வளராமல் தேங்கிப்போய்விடும் ஆபத்து உள்ளது. புதிய படைப்புகள் உருவாக வேண்டுமெனில் அதற்குப் புதிய சிந்தனைகள் தோன்ற வேண்டும். சிந்தனைகள் உருவாகுவதற்குக் கற்பனை வளம் அவசியம். கற்பனைகள் தோன்ற வேண்டுமெனில், நாளும் நாம் புதிது புதிதாகப் படிக்க வேண்டும். புத்தகங்களே மனிதனுக்கு உற்ற துணை, ஒப்பற்ற வழிகாட்டி.
மனிதக் கண்டுபிடிப்புகளில் புத்தகங்கள் அளவுக்கு மற்றவை சவால்களைச் சந்தித்திருக்குமா என்பது சந்தேகமே. உலக வரலாற்றில் போர்களால் அழிக்கப்பட்டவை மனிதர்கள் மட்டுமல்ல, புத்தகங்களும்தான். மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும், அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங் களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள். இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகமும் பஞ்சாப் பல்கலைக்கழகமும் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோன்று இலங்கையில் இனக்கலவரத்தில் யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டு எண்ணற்ற தொன்மை வாய்ந்த தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டன. ஓலைச்சுவடிகளில் வீற்றிருந்த தமிழ் இலக்கியங்கள் நெருப்பிலும் ஆற்றிலும் வீசி அழிக்கப்பட்டதும் வரலாறு. அவற்றில் அழிந்துபோய் மிச்சம் மீதியுள்ள இலக்கியங்கள்தான் இன்றைக்கு நம்மிடமுள்ள செல்வங்கள்.
புதிய சவால்கள்
ஒருபுறம், தீக்கிரையாவதிலிருந்து தப்பித்து வந்தால் இன்னொருபுறம் தொடர்ந்து வளர்ந்து வரும் அறிவியலும் அதை ஒட்டித் தோன்றும் புதிய கண்டுபிடிப்புகளும் புத்தகங்களுக்குத் தடை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை விளைவித்துவந்துள்ளன. வானொலி கண்டுபிடிக்கப்பட்டபோது அந்த அச்சம் தோன்றியது. இனி மக்கள் படிக்க மாட்டார்கள், கேட்பொலியே போதுமானது என்று எண்ணினர். ஆனால், புத்தகங்கள் அதை வென்றெடுத்தது. தொலைக்காட்சிகள் வந்தபோதும் அதே அச்சம் நிலவியது. பின், கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அது தொடர்ந்தது. ஆனால், புத்தகங்கள் படிக்கும் பழக்கம் மக்களிடமிருந்து மறையவில்லை.
2007-ல் அமேசான், ‘கிண்டில் மின்புத்தகங்கள்’ வெளியிட்டபோது அச்சுப் புத்தகங்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. காரணம், மின்புத்தகங்கள் உலகின் எந்த மூலையில் வெளியிடப்பட்டாலும் உடனடியாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது. அச்சுப் புத்தகங்களை ஒப்பிடும்போது உற்பத்திச் செலவு மிகவும் குறைவு. இதன் காரணமாக, 2010-க்குப் பிறகு மின்புத்தகங்கள் விற்பனை வெகுவாக அதிகரித்து, அச்சுப் புத்தகங்களின் விற்பனையில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இந்நிலை மூன்றாண்டுகள் தொடர்ந்தது. 2013-க்குப் பிறகு மின்புத்தகங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டு, அச்சுப் புத்தகங்களின் விற்பனை கூடியது. மின்புத்தகங்களைத் தொடர்ந்து படிப்பதால் கண்களில் நீர் வற்றி எரிச்சல் ஏற்படுவதும், அச்சுப் புத்தகங்களில் ஏற்படும் ஈடுபாடு இவற்றில் கிடைப்பதில்லை என்கிற குறைபாடுகளும் மின்புத்தகங்களின் விற்பனையைக் குறைத்தன. இருந்தபோதும் இவ்விரு புத்தகங்களும் ஒன்றுக்கு ஒன்று இணைந்து சந்தையில் பவனிவருகின்றன.
சமீப காலங்களில் புத்தகங்களுக்குப் பெரும் சவாலாக விளங்குவது திறன்பேசிகள். அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளிலேயே உலக அளவில் 40% மக்களிடம் சென்றடைந்துவிட்டன. இதே அளவு மக்களிடம் கணினி சென்றடைவதற்கு 14 ஆண்டுகள் ஆனது. இதன் மூலம் திறன்பேசிகளின் ஊடுருவல் எவ்வளவு வேகத்தில் உள்ளது என்பதை நாம் உணர முடிகிறது. மக்கள் இன்றைக்குப் பெரும்பான்மையான நேரத்தைத் திறன்பேசிகளில் மட்டுமே செலவழிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியர்கள் ஒரு நாளைக்கு சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது அவர்கள் புத்தகங்கள் படிக்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது.
பதிப்புத் துறையின் பெருங்குறை
புத்தக வாசிப்பின் அவசியத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் பதிப்புத் துறையின் குறைகளையும் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியப் பதிப்புத் துறையின் மிகப் பெரிய குறை வெவ்வேறு மொழிகளில் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன என்கிற சரியான புள்ளிவிவரங்கள் கிடையாது. இதற்கு முக்கியக் காரணம், பதிப்பகங்களிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை. இதைக் குறித்து அரசாங்கமும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
இந்தியாவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் போட்டிபோடும் சீனாவில் ஆண்டொன்றுக்கு 4 லட்சத்து நாற்பதாயிரம் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இந்தியாவில், தோராயமாக சுமார் 90 ஆயிரம் புத்தகங்கள் வெளியாகக்கூடும். ஆனால், பதிப்புத் துறை ஒரு தொழில் துறையாக இன்னும் கருதப்படவே இல்லை. பதிப்பாளர்கள் தங்கள் கூடுகளை விட்டு வெளியே வர வேண்டும். சர்வதேசப் பதிப்புலகின் தொழில் முறைமையை நாமும் கைகொண்டால்தான், தமிழ்ப் பதிப்புலகைக் கடந்து பிற மொழிகளுக்கும் நமது புத்தகங்களைக் கொண்டுசெல்ல முடியும்.