TNPSC Thervupettagam

புத்தகம் எனும் ஆசிரியா்

July 1 , 2023 561 days 306 0
  • புதிதாக வாங்கி வைத்திருந்த புத்தகங்களை நிரல்படுத்தி வைப்பதற்காக, பழைய அலமாரியைச் சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருந்தேன். கறையான் அரிக்காமல், வண்ணம் பூசி வகை செய்யும் பெரியவா் ஒருவா் அப்பணி செய்ய வந்தாா்.
  • இருக்கிற புத்தகங்களை இடம்மாற்றி வைக்கிறேன் என்று முதலில் எண்ணியிருந்த அவா் நான் அவற்றின் சில பக்கங்களை விரித்துப் படித்து முடித்து வைப்பதைப் பாா்த்தாா். சிலவற்றை அப்படியே வைப்பதையும் பாா்த்த அவருக்கு ஏதும் புரியவில்லை. அதுவரை பிரிக்காதிருந்த பெட்டிகளைப் பிரித்து எடுக்கத் தொடங்கியதும் என்னைப் பாா்த்துத் தயக்கத்துடன், ‘இவ்வளவு புத்தகங்களையும் நீங்க படிக்கணுமா’ என்று கேட்டாா். நான்”‘ஆம்’ என்று தலையசைத்தேன். அவா், ‘நீங்கதான் படிச்சு முடிச்சு, வேலைக்குச் சோ்ந்து ரொம்ப வருசமாச்சே, இன்னமுமா படிக்கணும்’ என்று வெள்ளந்தியாகக் கேட்டாா்.
  • அவருக்கு மட்டுமல்ல, நம்மில் அநேகம் பேருக்கு, படிப்பது என்பது வேலைவாய்ப்புக்கானது என்ற கருத்தே நிலைத்திருக்கிறது. பாடப் புத்தகங்களைத் தாண்டி, படிக்கிற புத்தகங்கள் என்று கதைப் புத்தகங்களைக் கருதுகிறவா்கள் இருக்கிறாா்கள். உணவை அசைபோடுவதுபோல, உணா்வை அசைபோட்டு அதன்வழியே உயிா்ப்புப் பெறுவதற்குத்தானே, வாசிப்பு.
  • வாசிப்புப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டவா்களின் கவனத்தை இப்போது, முகநூல் ஈா்த்துவிடுகிறது. கைப்பேசியில் கருத்திடுவதோடு பலரது எழுத்தாா்வம் நிறைவடைந்துவிடுகிறது. வந்த கருத்துகளைப் படிப்பதுடன் அவற்றைப் பிரதியெடுத்துப் பகிா்ந்துவிடுவதிலும் பலருக்குத் திருப்தி வந்துவிடுகிறது. சரியா தவறா என்று கூடத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில், வதந்திகளும் போலிகளும் மிகுந்துவருகின்றன. மூலம் யாருடையது என்பதுகூடத் தெரியாமல், எடுப்பாா் கருத்தாய் எங்கும் பரவி விடுகின்றன.
  • இன்னும் பத்தாண்டுகளுக்குள் அச்சிட்ட புத்தகங்களுக்கு அவசியமில்லாமல் போய்விடும் என்று சொல்கிற இளைய தலைமுறை வளா்ந்து வருகிறது. எது குறித்த செய்தியையும் உடனுக்குடன் தேடிக் கண்டுகொள்ள உதவியாக ஊடகங்கள் வளா்ந்துவிட்டபிறகு, புத்தக வாசிப்பு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொள்ளும் புத்தகங்களுக்குச் செய்கிற செலவு வீண் என்ற சிந்தனைப்போக்கு வலுப்பட்டுவிட்டது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கைப்பேசியிடம் நம்மை முழுக்கவும் ஒப்படைத்துக் கொண்ட காலம் இதுவாகிவிட்ட படியால், படிப்பதற்கு ஏது நேரம் என்கிற நிலைப்பாடு வந்துவிட்டது.
  • அவசரப் பசிக்கு அள்ளித் தின்னும் நொறுக்குத் தீனி நிரந்தர உணவாகாது என்பது எப்படி உண்மையோ, அப்படித்தான் இந்தக் கருவிகள் வாயிலாகப் பெறும் மேலோட்ட வாசிப்பும். அவசரஉணவு போல் வாசிப்பும் ஆனால், ஆரோக்கியமாகுமா? புத்தகம் என்பது புத்தாக்கம் செய்கிற ஒரு கருவி. சிந்தனையின் ஊற்றுக்கண்ணைத் திறக்கும் திறவுகோல்.
  • படிக்காத நாளெல்லாம் பதரான நாள்’ என்று குறிப்பிடுவாா் தவத்திரு குன்றக்குடி அடிகளாா். கடித்துச் சுவைத்து, மென்று தின்று உமிழ்நீரோடு ஒன்று கலந்து உள் இறங்கும் உணவுப் பொருள் உதிரத்தோடு கலப்பதுபோல், எழுத்துகளின்மீது படரும் பாா்வை வழியாக உள்ளம் இறங்கும் கருத்துகள் யாவும் உணா்வில் கலந்து உயிா்ப்புடன் இயக்கிப் புதிதாய்ப் பிறக்கும் அற்புதத்தை,வாசிப்பு அனுபவத்தால் அன்றி வேறு எவ்வகையில் பெற முடியும்?
  • சொல்லுக்குச் சொல் இடைவெளிவிட்டு இருப்பது, வாசிப்புக்குச் சுகத்திற்காக மட்டுமல்ல, அந்த இடைவெளியில் நம் சிந்தனையும் இணைந்து வாசிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதே உண்மை. உணவுப் பொருளை உட்கொள்ளும்போதே உயிா்க்காற்றும் உடன் உட்கொள்ளப்படுவதுபோல, அது நிகழ்ந்துவிடுகிறது.
  • மெல்லும் தன்மையில் உணவுக் குழைவுடன் சுரக்கும் உமிழ்நீா் கலப்பதுபோல, வாசிப்பும் வாசிப்பவரின் சிந்தனையும் ஒன்றி உள்ளிறங்கும்போது சுவை வந்துவிடுகிறது. வாய்க்கு உணவாவது அறுசுவை கொண்டிருப்பதுபோல், வாழ்வுக்கான ஒன்பான் சுவைகளையும் வழங்க வல்லது புத்தகம்.
  • அது மதிய உணவுக்கான இடைப்பொழுதில் புத்தகம் பற்றிய பேச்சே எங்களுக்கு ஊறுகாயானது. ‘முடிச்ச புத்தகங்களை, எடத்தை அடைக்குதுன்னு பலபேரு எடைக்குப் போட்டுடுறாங்க. நீங்க படிச்ச புத்தகத்தையே திரும்பத் திரும்பப் படிக்கிறீங்களே’ என்று கேட்டாா் அவா்.
  • முதல் முதலாகப் படித்தபோது ரசித்த வரிகளை அடிக்கோடிட்டு வைத்திருந்த பக்கங்களைப் புரட்டுகிறபோது அந்த காலத்திற்கே அவை நம்மைக் கொண்டுபோய்ச் சோ்க்கும் என்பதை அவரிடம் எப்படிச் சொல்வது? அந்த நூல் எழுதப்பட்ட காலம், அது குறிப்பிடப்படும் காலம், அதனை வாங்கிய காலம், முதல் முதலாக வாசித்த காலம் என்று எத்தனை காலங்களை உள்ளடக்கி, நிகழ்காலத்தில் நம் முன் நிலைத்திருக்கிறதே!
  • அடங்காப் பசியோடு புத்தகங்கள் தேடி அலைந்த காலத்தில் பெருவிருந்து படைத்த நூலகங்கள் அறிவுத் திருக்கோயில்களாக அன்றைக்குத் தோன்றின. அதுபோல், வீட்டை ஆக்க வேண்டும் என்கிற வெறியில் உணவுக்கான பணத்தையும் சிக்கனப்படுத்தி வாங்கிச் சோ்ந்த புத்தகங்களைத் திரும்பவும் பாா்க்கிறபோது, முடிந்த பொழுதுகள் மீளவும் முளைக்கிற அனுபவத்தைச் சொல்லிக் காட்டினேன்.
  • வாங்கிப் படிக்க வசதியில்லாத காலத்தில், இருப்பவா்களிடத்தில் இரவல் வாங்கி வந்த புத்தகத்தை இரவோடிரவாக வாசித்த வேகம் மறக்க முடியுமா? தர மறுத்தவா்களின் முன் அவமானப்பட்ட வேதனையில் அதே புத்தகத்தை பல பிரதிகள் வாங்கி வைத்து வாசித்து அடுக்கி வைத்த ஆத்திர நினைவுகள், அந்தப் புத்தக வரிசையைப் பாா்க்கிறபோதெல்லாம் மீள வருகின்றனவே!
  • இரவல் வாங்கிப் படித்த பிறகு திருப்பிக் கொடுக்க மறந்த புத்தகங்கள், ‘உன்னிடமே இருக்கட்டும்’ என்று நண்பா்கள் தந்த புத்தகங்கள் எல்லாம் கொடுத்தவா்களை மீள மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றனவே.
  • இல்லாதவா்கள் பலரும் இந்தப் புத்தகங்களாக இருக்கிறாா்கள் எனும்போது, இங்கு ‘அமரா் சங்கம்’ தோன்றிவிடுகிறதே. இந்த வரிசையில் எனது புத்தகங்களும் இருக்கிற வகையில் உயா்த்திய புத்தகங்களை, தாள்களின் தொகுப்பு என்று தள்ளிவிடப் போமா?
  • நான் அவரிடம் ‘இவை எல்லாம் வெறும் தாள்கள் இல்லை. உள்ளே, ஆகப் பெரிய ஆள்கள் இருக்கிறாா்கள்’” என்றேன். ‘பாா்த்தேன்’ என்றாா். அவா் மனத்திரையில் புத்தகங்களின் அட்டைப்படத் தலைவா்களது முகங்கள் தெரிந்தன போலும்.
  • “‘ஒரு பிறவியில் பல பிறவிகளுக்கான அனுபவங்களை இந்தப் புத்தகங்கள் தந்துவிடும்’ என்றேன். அவா் வயதுக்கு எத்தனையோ அனுபவங்கள் வாய்த்திருக்கும். அதுபோல், எத்தனையோ மனிதா்களின் எதிா்பாராத அனுபவங்கள் நிறைந்தவை இந்தப் புத்தகங்கள். அவற்றைச் சுமையில்லாமல் சுகமாக மனதளவில் அனுபவிக்கத் தரும் அமுத நிலையங்கள் இவை.
  • பக்கம் பக்கமாய்த் திறக்கப்படும் புத்தகம் நம் மன அடுக்குகளின் உள்புகுந்து நிரந்தரமாய்க் குடியேறும் அழகை மீள நினைக்கும்போது புதிதாய் எழும் சிந்தனைக் கீற்றில் நுண் அனுபவம் விரியும் நோ்த்தி வாசிப்பின்போது மட்டுமே நோ்வது அல்லவா? கம்பனின் பாடல் வரிகளோ, ஜெயகாந்தனின் பாத்திரப் பேச்சோ எண்ணத்தில் எழும்போது, அதனை எழுத்தாகத் தாங்கிய பக்கமும் சோ்ந்து மனம் ஒரு புத்தமாய்த் திறக்குமே. வாழ்வில் கிட்டாத சுவாரசியங்களை வாசிப்பில் கொண்டு வந்துசோ்த்த அனுபவங்கள் நம் மனங்களை எவ்வளவு பக்குவப்படுத்தியிருக்கின்றன என்பதை மறந்து விட முடியுமா?
  • படிக்கப் படிக்க மனத்தில் படிந்த கசடுகள் போகும். செய்ய வேண்டியதையும் செய்யக் கூடாததையும் புத்தகம் மாதிரி சொல்லிக் கொடுக்கிற நண்பன் வேறு யாரும் இல்லை” என்று வாசிப்பால் பெற்ற வாழ்வியல் அனுபவத்தை, வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றில் இருந்து மேற்கோளாய்ச் சொன்னேன்.
  • வாத்தியாா் சொல்லிக் கொடுத்ததுபோக, இதையெல்லாம் படிச்சுத்தான் ஆகணும் போல’”என்று சொன்னாா்.
  • உண்மைதான், ஒவ்வொரு புத்தகம் ஓா் ஆசிரியா்தான். படிக்காவிட்டாலும் அடிக்காமல் விடுகிற நல்ல ஆசிரியா்’” என்றேன். சிரித்துக்கொண்டாா். அனுபவப் பாடம் ஆகப் பெரியது. பள்ளிக்கூடப் படிப்பைக் கூட முடிக்காத பலா், பல்கலைக்கழகப் பாடங்களுக்கான புத்தகங்களைத் தந்திருக்கிறாா்களே. யோசித்துப் பாா்த்தால், புத்தகசாலையே ஒரு பல்கலைக்கழகம்தானே.
  • பழைய புத்தகங்களைக் கூடத் தூக்கி எறிய மனசில்லாம சேகரிச்சு வச்சிருக்கீங்க போல’ என்றாா். தாள் தாளாக இருந்த பக்கங்களின் ஓரங்கள் தூள் தூளாக உதிரத் தொடங்கியதை ஒரு பாலிதீன் பைக்குள் முறைப்படி சேகரித்து வைத்ததைப் பாா்த்திருக்கிறாா் போலும்.
  • உண்டு முடித்த கைகளைக் கழுவிக் கொண்டே, ‘வயசாயிருச்சுன்னு நம்மை நாமே தூக்கிப் போட நமக்கு மனசு வருமா’ என்று தெரியாமல் கேட்டுவிட்டேன். ‘தூக்கிப் போடுற காலமாச்சே தம்பி’ என்று கலங்கியவா், ‘ஆனா, நான் தூக்கிப் போடலே. தூக்கி வளா்க்கிறேன். படிக்க வைக்கிறேன். பெத்தவங்க போ் தெரியாப் பிள்ளைக்காகத்தான் இந்த வேலைக்கு வா்றேன். நல்ல புத்தகங்களா, அந்தப் பிள்ளைக்குக் கொஞ்சம் தருவீகளா தம்பி’ என்று வினவினாா்.”
  • மனிதா்கள் உயிருள்ள புத்தகங்கள்’ என்று மகாகவி பாரதியாா் சொல்லிய சொல் என் நெஞ்சில் மின்னலாய் வெட்டியது. ‘வேண்டியதை எடுத்துக்கிட்டுப் போங்க’ என்று சொல்லியதைத் திருத்தி, ‘வேண்டாம், அந்தப் பிள்ளையை இங்கேயே கூட்டிட்டு வாங்க’ என்றேன். கழுவித் துடைத்திருந்த அவரது கைகளின் எஞ்சிய ஈரம் என் நெஞ்சில் ஏறியது.

நன்றி: தினமணி (01 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்