TNPSC Thervupettagam

புத்தக வெளியீட்டில் தனித்த நெடும் பயணம்

May 19 , 2024 236 days 170 0
  • புத்தகம் என்பது நமது அன்றாடப் பிரக்ஞையின் ஒரு வெளிப்பாடாகவும், ஒரு பகுதியாகவும், நமக்குச் சக்தி கொடுக்கக்கூடிய பல விஷயங்களில் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்று கருதி, தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்களைத் தீராத ஆர்வத்துடன் வெளியிட்ட பதிப்பகமான க்ரியா 50ஆவது ஆண்டைத் தொட்டுவிட்டது. இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் அந்தப் பதிப்பகம் வெளியிட்டது சுமார் 150 புத்தகங்கள்தான். ஆனால், அழகிய அச்சு அமைப்புடன் முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் , மொழிபெயர்ப்புகள், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஆகியவை அந்தப் பதிப்பகத்திற்குத் தனிப் பெருமை சேர்த்துள்ளன. இதன் பதிப்பாளர் ராமகிருஷ்ணன்.
  • தான் பார்த்த தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு, தோழி ஜெயலட்சுமியுடன் இணைந்து 1974 மே 20ஆம் தேதி க்ரியா பதிப்பகத்தை ராமகிருஷ்ணன் தொடங்கினார். பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜெயலட்சுமி தந்த முதலீடும் உழைப்பும் க்ரியாவை ஒரு நிறுவனமாகக் கட்டமைக்க உதவின. ‘கசடதபற’ ஆசிரியராக இருந்த நா.கிருஷ்ணமூர்த்தியின் சென்னை திருமூர்த்தி நகர் பி.எப். குவாட்டர்ஸ் வீடுதான் க்ரியாவின் முதல் முகவரி. தீவிர இலக்கியப் புத்தகங்களை வெளியிடுவதற்கு வாய்ப்புகள் இல்லாத அந்தக் காலத்தில், ஆதிமூலத்தின் முகப்போவியத்துடன் ந.முத்துசாமியின் மூன்று நாடகங்கள் அடங்கிய ‘நாற்காலிக்காரர்’ 1974 ஆகஸ்ட்டில் க்ரியாவின் முதல் வெளியீடாக வெளியானது. சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதைத் தொகுப்பு, சி.மணியின் ‘வரும்போகும்’ கவிதைத் தொகுப்பு, பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) ‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பு, நாரணோ ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுப்பு போன்ற புத்தகங்களை க்ரியா வெளியிட்டது. எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘அந்நியமாதல்’, ‘எக்சிஸ்டென்சியலிசம்’ ஆகிய நூல்களும் எழுபதுகளிலேயே வெளிவந்தன.
  • க்ரியா புத்தக வெளியீட்டுக்கான லச்சினையை வடிவமைத்தவர் ஓவியர் ஆதிமூலம். தொடக்கத்தில் சில புத்தகங்களில் மட்டுமே இடம்பெற்ற அந்த லச்சினை, பிற்காலப் புத்தகங்களில் இடம்பெறவில்லை. சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பைலட் திரையரங்கு அருகே மாடியில் இருந்த க்ரியா பதிப்பக அலுவலகத்தில் விற்பனைக்கான புத்தகங்கள் மட்டுமல்ல, ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
  • எழுத்தாளர்கள், ஓவியர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள் வந்து செல்லும் இடமாக அது திகழ்ந்தது. டிராட்ஸ்கி மருதுவின் முதல் ஓவியக் கண்காட்சி க்ரியாவில்தான் நடைபெற்றது. எழுத்தாளர்கள் திலீப்குமார், சி.மோகன், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் க்ரியாவில் பணிபுரிந்திருக்கிறார்கள். ஒரு புத்தகம் சிறப்பாக வெளிவருவதற்கு, எழுத்தாளரும் பதிப்பாளரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிவந்த ராமகிருஷ்ணன், எடிட்டிங்-இன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.
  • ந.முத்துசாமி, சா.கந்தசாமி, சி.மணி, சுந்தர ராமசாமி, எஸ்.வி.ராஜதுரை, மௌனி, சிட்டி, சிவபாதசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சார்வாகன், சம்பத், ஜி.நாகராஜன், பூமணி, ராஜேந்திரசோழன், அம்பை, திலீப்குமார், இமையம் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை க்ரியா வெளியிட்டிருக்கிறது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களான மு.தளையசிங்கம், அ.யேசுராசா, வ.ஐ.ச. ஜெயபாலன் உள்ளிட்டோரின் புத்தகங்களையும் வெளியிட்டது. 1984இல் வெளிவந்த ‘பதினோரு ஈழத்துக் கவிஞர்கள்’ முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்பு. மு. நித்தியானந்தனின் ‘கூலித் தமிழ்’ கட்டுரைத் தொகுப்பு மலையகத் தமிழர்கள் குறித்த முக்கிய ஆவணம்.
  • ஆங்கிலம் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்தும் நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதில் க்ரியா முன்னோடிப் பதிப்பகமாகத் திகழ்ந்தது. இந்தி, கன்னடம், வங்காள மொழிகளிலிருந்தும் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. கிரிஷ் கர்னார்டின் பிரபலமான ‘துக்ளக்’ நாடகத்தை கன்னடத்திலிருந்து ஜெயா தமிழில் மொழிபெயர்த்தார். ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து வெளியிட்ட ஐராவதம் மகாதேவனின் ‘Early Tamil Epigraphy’ என்கிற புத்தகமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
  • தமிழ் அகராதிகளின் வரலாற்றைச் சொல்லும் கிரகரி ஜேம்ஸ் எழுதிய, ‘Colporul: A History of Tamil Dictionaries’ என்கிற புத்தகம் முக்கிய வரலாற்று ஆவணம். சு.தியடோர் பாஸ்கரனின் ‘The Message Bearers’, யூஜின் இர்ச்சிக் எழுதிய ‘Tamil revivalism in the 1930s’ போன்ற ஆங்கிலப் புத்தகங்களும் முக்கியமானவை. பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, ‘முதல் மனிதன்’, அந்துவான் து செந்த் எக்சுபெரி எழுதிய ‘குட்டி இளவரசன்’, பியர் பூர்த்தியு எழுதிய ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’, ழாக் ப்ரெவெர் எழுதிய ‘சொற்கள்’, காமெல் தாவுத்தின் ‘மெர்சோ: மறுவிசாரணை’, சார்த்தரின் ‘மீள முடியுமா?’, ஃபிரான்ஸ் காப்காவின் ‘விசாரணை’, லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தேஜிங்’, யானிஸ் வருஃபாகிஸின் ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு’ போன்ற பல மொழிபெயர்ப்பு நூல்களை க்ரியா வெளியிட்டுள்ளது.
  • க்ரியாவின் பதிப்புப் பணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பணி ‘தற்காலத் தமிழ் அகராதி’ உருவாக்கம். பல்கலைக்கழகங்களும் அரசாங்க நிறுவனங்களும் செய்யவேண்டிய இப்பணியை, 1992இல் க்ரியா சாத்தியப்படுத்தியது. க்ரியா அகராதித் திட்டம் தொடர்ந்து செயல்பட தன்னிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் தந்தவர் ஜெயலட்சுமி. அகராதித் திட்டத்துக்காக 1985லிருந்து 2020ஆம் ஆண்டில் அவரது மரணம்வரை தனது வாழ்நாளில் கணிசமான காலத்தைச் செலவழித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.
  • பேராசிரியர்கள் அண்ணாமலை, பா.ரா.சுப்பிரமணியன், தாமோதரன், நூலகர் ப.சங்கரலிங்கம், கே.நாராயணன், தங்க.ஜெயராமன், டி.கே.ரகுநாதன் உள்ளிட்ட பலர் இந்த அகராதித் தயாரிப்புக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். எந்தப் பிரதிபலனும் இல்லாமல், பலர் உழைப்பை நல்கி இருக்கிறார்கள். க்ரியாவின் அகராதி மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது. க்ரியா தற்காலத் தமிழ் அகராதி, பார்வைத் திறனற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் காக்னிஸென்ட் ஃபவுண்டேஷன் உதவியுடன் பிரெய்ல் பதிப்பும் வெளிவந்துள்ளது. அரை நூற்றாண்டை எட்டிப்பிடித்து பதிப்புத் தொழிலில் தனி முத்திரை பதித்த க்ரியாவின் எதிர்காலம், எந்தத் திசையில் தொடர்ந்து செல்லும் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
  • கிரிஷ் கர்னார்டின் பிரபலமான ‘துக்ளக்’ நாடகத்தை கன்னடத்திலிருந்து ஜெயா தமிழில் மொழிபெயர்த்தார். ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து வெளியிட்ட ஐராவதம் மகாதேவனின் ‘Early Tamil Epigraphy’ என்ற புத்தகமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்