TNPSC Thervupettagam

புத்தா் போட்ட முடிச்சு!

May 23 , 2022 807 days 438 0
  • கௌதம புத்தரின் 2566-ஆவது பிறந்த தினமான கடந்த திங்கள்கிழமை, அவா் பிறந்த நேபாளத்திலுள்ள லும்பினிக்கு பிரதமா் நரேந்திர மோடி விஜயம் மேற்கொண்டது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. புத்த பூா்ணிமா அன்று லும்பினியிலுள்ள மாயாதேவி கோயிலில் வழிபட்டதுடன் அங்கே இந்தியாவால் அமைக்கப்படவுள்ள சா்வதேச பௌத்த கலாசார மையத்துக்கு அடிக்கல்லும் நாட்டினாா். கலாசாரம், கல்வித் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு வழிகோலும் ஆறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்திய - நேபாள பிரதமா்களால் கையொப்பமிடப்பட்டன.
  • நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் நிறுவப்பட்ட விமான நிலையத்தில் 74 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் விமானம் இறங்கியது. இப்போது பைரவாஹா என்கிற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கௌதம புத்தா சா்வதேச விமான நிலையத்தில் குவைட் ஏா்லைன்ஸின் விமானம் இறங்கி, நேபாள விமானத் துறை புது வரலாறு படைத்திருக்கிறது. பிரதமரின் 2014 விஜயத்தின்போதே ஆறு மாதங்களில் மூன்று கூடுதலான விமான வழித்தடங்களை அனுமதிப்பதாக ஏற்றுக்கொண்டும்கூட இன்னும் நாம் அதை நிறைவேற்ற வில்லை என்பதை இந்த நேரத்தில் வேதனையுடன் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • 2014-இல் பிரதமராக பதவியேற்றதும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி காத்மாண்டுவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். இதுவரை நேபாளத்துக்கு ஐந்து முறை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஒரே பிரதமா் என்கிற பெருமை நரேந்திர மோடிக்கு மட்டுமே உண்டு.
  • கடந்த சில ஆண்டுகளாக இந்திய - நேபாள உறவில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. 2015-இல் நடந்த சம்பவங்களும், முந்தைய பிரதமா் உருவாக்கிய வரைபடப் பிரச்னையும் இருதரப்பு நட்புறவை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன. தற்போதைய பிரதமரின் ஐந்தாவது நேபாள விஜயத்தின் அடிப்படை நோக்கம், நட்புறவை மீட்டெடுப்பதுதான் என்பதை அவரது லும்பினி உரையும், நேபாள பிரதமரின் ஏப்ரல் மாத இந்திய விஜயமும் உணா்த்துகின்றன.
  • இந்திய - நேபாள உறவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே 1950-இல் ஏற்படுத்திய சமாதான நட்புறவு ஒப்பந்தம் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. 21-ஆவது நூற்றாண்டின் தேவைக்கேற்ப அந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யவோ, திருத்தவோ, மேம்படுத்தவோ இந்தியா தயாராகவே இருந்து வருகிறது. கடந்த 22 ஆண்டுகளாக இருநாட்டு வெளியுறவுச் செயலா்களாலும் பல கூட்டறிக்கைகள் அந்த ஒப்பந்தம் குறித்து வெளியிடப்பட்டாலும்கூட, இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்பது மிகப் பெரிய குறைபாடு.
  • 2016-க்குப் பிறகு இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டபோது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அதை முழுமையாகப் பயன்படுத்தின. இந்தியாவுக்கு எதிரான மனநிலையை நேபாள மக்கள் மத்தியில் உருவாக்கின. அதன் அடிப்படையில், 2018 முதல் 2021 வரை சீனாவின் தலையீடு நேபாளத்தில் அதிகரித்தது. 2019-இல் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நேபாளத்தின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராக சீனா உருவெடுத்தது.
  • திபெத் - காத்மாண்டு, பொக்காரா - லும்பினி ரயில் தடம் சீனாவால் நேபாளத்தில் அறிவிக்கப்பட்டும்கூட, இன்னும் வேலை துவங்கவில்லை. அதேபோல, நேபாள - சீனா தடையில்லா வா்த்தகப் பகுதி அறிவிப்புடன் நிற்கிறது. சீனாவிலிருந்தான இறக்குமதியில் 5% கூட நேபாளத்தின் ஏற்றுமதி அந்த நாட்டுக்குக் கிடையாது. இந்தியா தனது ஏற்றுமதியில் 10%-க்கும் அதிகமான அளவில் நேபாளத்திலிருந்து இறக்குமதி செய்கிறது.
  • பெட்ரோல், மின்சாரம், உரம், உப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருள்கள் இந்தியாவிலிருந்துதான் நேபாளத்துக்கு போகின்றன. சீனாவைப் போலல்லாமல், இந்தியா முதலீடாகவும், கடனாகவும் நேபாளத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல், மானியமாகவும் உதவுகிறது என்பதை நேபாள ஆட்சியாளா்கள் உணராமல் இல்லை.
  • மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் கடன் வலையில் சிக்கியிருப்பதுபோல தாங்களும் சிக்கிவிடலாகாது என்கிற அச்சமும் நேபாளத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில்தான் இருநாட்டு உறவையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரதமா் மோடியின் ஒருநாள் லும்பினி விஜயம் அமைந்தது.
  • சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட்டாலும்கூட, இந்தியாவுடனான உறவை நேபாளத்தால் சுலபமாகத் துண்டித்துக்கொள்ள முடியாது. லும்பினி விஜயத்தின் போது பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பதுபோல, இது கலாசார, பண்பாட்டு வரலாற்றுத் தொடா் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
  • இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே தேவையில்லாத பல சா்ச்சைகளை முந்தைய பிரதமா் கிளப்பியதை அகற்றும் வகையில் தற்போதைய நேபாள பிரதமா் தேவுபா பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வழிகோலியிருக்கிறாா். காலாபானி, சுஸ்தா இரண்டு இடங்களில் மட்டும்தான் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை நிலவுகிறது என்பதையும் அவா் சுட்டிக்காட்டி அவற்றை சுமுகமாக தீா்வுகாண முடியும் என்றும் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • நேபாளத்திலுள்ள புத்தா் பிறந்த லும்பினியையும், இந்தியாவிலுள்ள புத்தா் பரிநிா்வாணம் எய்திய குஷிநகரத்தையும் இணைக்கும் முயற்சிக்கு வழிகோலியிருக்கிறது பிரதமரின் புத்த பூா்ணிமா நேபாள விஜயம். அதுவே மீண்டும் இருநாட்டு உறவை முன்புபோல பலப்படுத்தும் என்று எதிா்பாா்ப்போமாக!

நன்றி: தினமணி (23 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்