TNPSC Thervupettagam

புத்துயிர் பெற வேண்டும் தன்னாட்சிக் கல்வி

July 1 , 2024 194 days 157 0
  • உலகில் முதல் உடனுறைப் பல்கலைக்கழகம், 4ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம்தான். இத்தகைய பெருமிதத்துடன் கல்வியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நாம். ஆனால், ‘டைம்ஸ்’ வெளியிட்டுள்ள உலகத் தரவரிசை-2024 பட்டியலில் 214ஆம் இடத்தில்தான் இந்தியப் பல்கலைக்கழகம் நுழைய முடிகிறது. எண்ணிக்கை அளவில் முதல் இடத்தில் இருக்கும் நாம் ஏன் தரத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்?

கல்வியும் சுதந்திரமும்:

  • சுதந்திரம் என்பது அனைவரின் தார்மிக உரிமை. அது மனித நேயத்தின் அடித்தளம். “மற்றவர்களுக்குச் சுதந்திரத்தை மறுப்பவர்கள் சிறந்த அடிமைகள்” என்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. சுதந்திரத்தின் உன்னதத்தை இதைவிட மேன்மையாக வேறு யாரும் சொன்னதாக எனக்குப் புலப்படவில்லை.
  • அதேபோல, “கல்வி மனிதனுக்கு வளர்ச்சியும் சுதந்திரமும் அளிக்கிறது” என்கிறார் ரவீந்திரநாத் தாகூர். “சுதந்திரம் என்கின்ற தங்கக் கதவைத் திறக்க, கல்வி என்கின்ற திறவுகோல் வேண்டும்” என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன். கல்வியாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரம்தான் சுவாசம். கல்வியும் சுதந்திரமும் சார்ந்தே இருப்பவை.

தன்னாட்சிக் கல்லூரிகளின் நிலை:

  • கல்லூரிகளுக்குத் தன்னாட்சி என்கிற சுதந்திரக் கருவை ‘தேசியக் கல்விக் கொள்கை 1986’ வித்திட்டது. பேராசிரியர் ஞானம் முன்வைத்த பரிந்துரையின்படி 1993ஆம் ஆண்டு அது செயல்பாட்டுக்கு வந்தது. ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற முதன்மைக் கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி என்கின்ற கவசத்துடன் தொடங்கப்பட்டவை.
  • மற்றவை ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளாகத் தோன்றி, பிறகு தன்னாட்சி பெற்றவை. தற்சமயம் நம் நாட்டில் 1,000க்கும் மேலாகத் தன்னாட்சிக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருக்கின்ற தன்னாட்சிக் கொள்கை எந்த அளவில் தன் அடிப்படை இலக்குகளை எட்டியுள்ளது என்று பார்ப்போம்.
  • இதன் அடிப்படையில், கல்வி நிலையங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம் - முதன்மை, அரசு, தனியார் கல்வி நிலையங்கள். முதன்மைக் கல்வி நிறுவனங்களைத் தவிர, மற்ற இரு நிலையங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
  • இக்கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டங்களைத் தாங்களே வரையறுத்துத் தேர்வுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதுதான் தன்னாட்சியின் எல்லைக்கோடுகள் என்று கருதுகின்றன. கல்விச் சுதந்திரம் என்பது தன்னாட்சி என்கின்ற ராஜ்ஜியத்தின் ஓர் அங்கம்தான்.
  • ஆளுமை, நிர்வாகம், பொருளாதாரம், கல்வி என்கின்ற நான்கு திசைகளிலும் வியாபித்திருக்கும் சுதந்திரம்தான் உண்மையான தன்னாட்சி. கல்விச் சுதந்திரம் தவிர மற்றவற்றைப் பற்றி பலருக்குப் போதிய புரிதல்கூட இல்லை என்பதே நிதர்சனம். இது ஒருபுறம் இருக்க, நடைமுறையில் இருக்கும் கல்விச் சுதந்திரம் எந்த அளவில் செயல்பாட்டில் உள்ளது என்பதைக் கவனிப்போம்.

தனியார் கல்வி நிறுவனங்கள்:

  • தனியார் நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம், மரியாதை, ஊக்குவிப்பு என்று பெரிதாக ஏதும் கிடையாது. மாணவர்களின் வேலைவாய்ப்பை முன்னிலைப்படுத்தி வியாபாரத் தலங்களாகத்தான் அக்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆழமான கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றுக்கு அங்கு இடம் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் கல்விச் சுதந்திரம் என்பது ஓர் ஆற்றலற்ற கருவி.
  • இதில் விதிவிலக்காகப் பல நிறுவனங்கள் சிறப்பாகப் பயணிக்கின்றன. அவை காலப்பயணத்தில் இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் தங்கள் சுவடுகளைப் பதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன.

அரசுக் கல்வி நிறுவனங்கள்:

  • 2005 ஜூன் மாதம், மத்தியக் கல்வி ஆலோசனை வாரியத் தலைவராக இருந்த காந்தி பிஸ்வாஸ் அன்றைய மனிதவள அமைச்சரிடம் ‘உயர் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி’ என்ற 150 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் அடித்தளம், ‘அதிகாரத்துவம், அரசியல், வெளிப்புற அழுத்தங்கள் ஆகியவற்றிலிருந்து பல்கலைக்கழகங்களைத் தனிமைப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்’ என்பதுதான்.
  • ஆனால், தன்னாட்சிக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் அரசியல்வாதிகள் / அதிகாரிகளின் உடும்புப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இப்படிப்பட்ட முரண்பாடான அமைப்பில் தன்னாட்சி என்பதெல்லாம் வெறும் புரட்டு.

இரட்டைத் தவறு:

  • கல்வியாளர்களுக்கு நிர்வாகத் திறமை போதாது; ஆகவே, நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நாங்களே எடுக்கிறோம் என்று அரசு அதிகாரிகள் தங்களின் எல்லை மீறலை நியாயப்படுத்துகின்றனர்.
  • அடுத்ததாக, தன்னாட்சியைச் செயல்படுத்திய முறையே தவறு. இது தொடர்பான அறிக்கை (1998) ‘பொறுப்புடைமை மற்றும் தன்னாட்சி’ (Accountability and Autonomy) என்றுதான் ஆரம்பிக்கிறது. 24 கட்டுரைகள் கொண்ட அந்த அறிக்கையில், 11 கட்டுரைகள் பொறுப்புடைமை பற்றியவைதான்.
  • தன்னாட்சியைச் செயல்படுத்தும்முன் பொறுப்புடைமையை அளவிடும் இயங்கியல் அமைப்பை வடிவமைத்திருக்க வேண்டும். “பொறுப்புடைமையை நிலைப்படுத்தாமல் சுதந்திரம் அளித்தால், அராஜகம்தான் விளையும்” என்று அந்த அறிக்கையில் பேராசிரியர் ஞானம் எச்சரிக்கிறார்.
  • பொறுப்புடைமையை அளவீடு செய்வதில் அதிகாரிகளுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், அந்த இயந்திரம் அவர்களையும் அளவிடப் பயன்படுத்தப்படும். அதைச் செயல்படுத்தாவிடில் வேலையும் மிச்சம்; அதிகாரமும் கைவசம். அதுதான் அவர்களது நிலைப்பாடு.
  • அடுத்ததாக, துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் எங்களுக்கு வேண்டும் என்று அரசியல்வாதிகள் நீதிமன்றம் செல்கின்றனர். சட்டங்களுக்கு இணங்காமை; நிபுணர்களின் கருத்துப் புறக்கணிப்பு போன்ற அணுகுமுறை கல்விக்குப் பெரும் கேடு.

தெளிவான பாதை:

  • பேராசிரியர் கே.பி.பவார் (1998) தன்னாட்சி என்பதற்கு ஒரு முழு வடிவம் கொடுக்கிறார், “50 ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பல்கலைக்கழகங்களில் தன்னாட்சி தழைத்திருந்தது. துணைவேந்தர்களை யாரும் கேள்வி கேட்கவில்லை. அரசியல் குறுக்கீடுகளால் தன்னாட்சி என்பது தற்போது சீரழிந்துள்ளது.
  • தன்னாட்சி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது சட்டம் சார்ந்த கோட்பாடு அல்ல, அரசமைப்பு சார்ந்த கோட்பாடும் அல்ல. இது ஒரு தார்மிகக் கோட்பாடு; கல்வி சார்ந்த கோட்பாடு. ஜனநாயகத்தில் சட்டமன்றங்கள் அறுதி இறையாண்மை பெற்றவைதான், இருப்பினும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் குறுக்கிடக் கூடாது. தன்னாட்சி என்பது ஒரு சலுகையல்ல... ஒரு நிபந்தனைக்கு உட்பட்ட சுதந்திரம்.” இவ்வளவு தீர்க்கமான பாதையைக் காட்டிய பிறகும் முட்டுச்சந்துக்கு முகவரி தேடுகிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

இரட்டைக் கோட்பாடுகள்:

  • எங்கு சுதந்திரம் இல்லையோ அங்கு கல்வி அழியும்; எங்கு பொறுப்புடைமை இல்லையோ அங்கு சுதந்திரம் தவறும்; எங்கு சட்டம் இல்லையோ அங்கு சுதந்திரம் அழியும். இவை இரட்டைக் கோட்பாடுகள்; ஒன்றைப் பிரித்தால் மற்றது மறையும் தன்மை படைத்தது.
  • செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் நாம், நம் நாகரிகத்தின் அடிக்கட்டுமானங்களைச் சிதைக்கிறோம் - இது விபரீத அணுகுமுறை. அனைத்துக் கல்வி நிலையங்களும் தன்னாட்சி பெற வேண்டும் என்று நம் கல்விக்கொள்கை-2020 கனவு காண்கிறது. கனவை நனவாக்கும் முயற்சியில் நாம் இந்நாள்வரை காகித அளவில் வெற்றிபெற்றுள்ளோம்.
  • நம் நாட்டின் சிறந்த கல்வியாளர்களின் அறிவுரைகளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களைச் செயல்படுத்திக் கல்வி நிலையங்களின் சுதந்திரத்தைச் சிதைக்காமல் பாதுகாத்து விரிவுபடுத்தி, ஒரு புதிய விடியலை விரைவில் கொணர்வோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்