TNPSC Thervupettagam

புன்னகைப் பூக்கள் மலரட்டும்!

February 25 , 2019 2099 days 1611 0
  • புன்னகைப்பதும், ஆனந்தமாக இருப்பதும் மனிதனின் பிறப்போடு கூடிய இயல்பு;  ஆனால், பின்னர் மகிழ்ச்சியைத் தேடி, கவலைகளைச் சுமந்து, புன்னகையைப் பெரும்பாலானோர் மறந்தே விடுகின்றனர்.
  • அலுவலகங்களில் சிலர், தங்களது சக அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் புன்னகைக்கவே மாட்டார்கள்.சிறிது புன்னகையோடு பேசினால், தனக்குக் கீழ் பணிபுரிபவர், தனது உத்தரவுகளைச்  சரிவரச்  செயல்படுத்த மாட்டார், எதிர் கருத்துக்களைக் கூறுவார்கள் என்ற அச்ச உணர்வு காரணமாக இருக்கக் கூடும்.
  • ஆனால், புன்னைகையோடு உள்ள அதிகாரி, அதிகார தோரணை காட்டும் அதிகாரியைவிட அதிகமாக,  சக அதிகாரி அல்லது ஊழியரிடமிருந்து நல்ல மனமுவந்த ஒத்துழைப்பினைப்  பெறுகிறார்; அதிகமாகச்  சாதிக்கிறார்.
  • சில அரசு அலுவலகங்களில்,  அலுவல்  நிமித்தமாக வரும் பொது மக்களிடம் நேர்பார்வையுடன் பேசுவது-புன்னகைப்பது  பெரும் குற்றம் என எண்ணிப் பணிபுரிவோர் ஏராளம் .
  • வாழ்வில் எவ்வளவு பேரைப் பார்த்தாலும் பேசினாலும், அவர்களில் பலரை மறந்து விடுகிறோம்; ஆனால் புன்னகையை முக விலாசமாகக் கொண்டவர்கள் நம் நெஞ்சில் நிரந்தரமாய்ப் பதிந்து விடுகிறார்கள்.
  • ஏனெனில், அகம் புறம்  என இரு தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது புன்னகை.
  • ஓர் இலகுவான சூழலை ஏற்படுத்தும். மனச்சோர்வினை அகற்றும் தன்மை கொண்டது.
  • மேலும், அவர்  தன்னம்பிக்கை உடையவர் என்ற தோற்றத்தினை ஏற்படுத்தும்.
  • சலிப்பு, கோபம், ஆத்திரம், மன உளைச்சல் உள்ளிட்ட பல எதிர்மறை எண்ணங்களுக்கு மாற்று மருந்து புன்னகை. சில சமயங்களில், நூறு கடும்
  • சொற்கள் சாதிக்க முடியாததை, ஏற்படுத்த முடியாத தாக்கத்தினை, புன்னகையுடன் கூடிய ஒரு சில சொற்கள் ஏற்படுத்த முடியும்.
  • பொதுவாக உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கும்போதெல்லாம் முகத்தில்   புன்னகை  தோன்றும்; இதன் இன்னொரு பிரதிபலிப்பாக , 'முகத்தில் புன்னகைத்தோற்றம் இருக்குமானால், மனதில் மகிழ்ச்சி ஏற்படும்' என்று சொல்வோரும் உண்டு.
  • எனவே, சிலர் "முதலில் பொய்க்காகவாவது புன்னகையுங்கள்; நாளடைவில் அது உங்கள் முகத்தில் நிரந்தரமாகக் குடியேறும்' என்பர்.
  • தமிழில், ஒரு சொல் பல பொருள்களைத் தருவதைப் போல, புன்னகையும் ஒவ்வொருவருக்கு ஒரு பொருளைத் தர வல்லது; கண்டிப்பான  மேலதிகாரியின் புன்னகை சில ஊழியருக்கு வெகுமதி ;  அக்கம்பக்கத்தாரின்  புன்னகை, தனித்திருக்கும் முதியவருக்கு பெரும் ஆறுதல்;   நல்லாசிரியரின் புன்னகை ஒரு மாணவனுக்கு அங்கீகாரம்; ஒரு தந்தையின் புன்னகை மகனுக்கு பெரும் ஊக்கம்; பெற்றெடுத்த குழந்தையின் புன்னகை தாய்க்குப் பரவசம்  எனப் பல்வேறு பொருள்களைத் தருகிறது.
  • எவர் எப்படியிருப்பினும்  குழந்தைகள் மட்டுமே, எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி புன்னகைப்பர்.
  • ஆனால், சில குழந்தைகள் புன்னகைக்கவே முடியாது என்பது வருத்தம் தருவது ஆகும்.
  • இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில்,ஆயிரத்தில் ஒரு குழந்தை, "பிளவுபட்ட உதடுகள்' என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகள், பிறர்போல்  சாதாரணமாகப்  புன்னகைக்கவே முடியாது; அதனினும் கொடுமையாக இவர்கள் தாய்ப்பால் அருந்துவதற்கும், உணவு உண்பதற்கும், பேசுவதற்கும் கூட பெரும் சிரமப்படுவர்.
  • இந்தக் குறைபாடு நீக்கப்பட முடியாதவர்கள் பலர், வளரும்போது  தங்களது உடற்கூறு   குறைபாட்டுடன், மனதளவிலும் பாதிக்கப்படுவர். இவர்களில் கணிசமானோர்  இருபது வயதுக்குள் உயிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • மருத்துவ உலகமும், பல அரசு சாரா நிறுவனங்களும் இந்தக் குறையினைச் சீர் செய்ய உதவி செய்கின்றன.
  • நமது நாட்டில் நடைபெறும் சில சமூக விரோதச் செயல்களில் ,சிறுவர்-சிறுமியர்  கடத்தல் என்பதும் ஒன்றாகும்; பெற்றோர் -குழந்தைகள் என இரு சாராரும் தங்களது நிம்மதியைத் தொலைக்க வைக்கும் செயல் இது; நம் மத்திய அரசு, இந்தப் பெற்றோர்கள்-சிறுவர்கள் முகத்தில் புன்னகையை மீண்டும் அரும்பச் செய்யும் வகையில், "புன்னகையை மீட்டெடுப்போம்' என்ற இலக்குடன், சில  திட்டங்களைச்  செயல்படுத்துகிறது. பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, நடைபாதை, ரயில் நிலையங்கள் எனப்  பொது இடங்களில் தங்கியிருக்கும்  சிறார்களையும், தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படும் சிறுமியரையும் கண்டுபிடித்து மீட்டு  அவர்களது பெற்றோரிடம் சேர்க்கும் பணியினைத்   தீவிரமாகச் செய்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட மாதத்தினை "புன்னகை மீட்டெடுப்பு மாதமாக' அறிவித்து, காவல் துறையின் மூலம்  நடத்துகிறது; இந்த ஒரு மாதம் முழுவதும், பல மாநிலங்களிலும்  தேர்ந்தெடுக்கப்பட்ட  காவல் துறையினருக்கு, பிற மாநில காவல் துறை, சிறார் சீர்திருத்தப் பள்ளி ஆகியவற்றோடு ஒருங்கிணைப்புத்  தொடர்பான சிறப்புப் பயிற்சி அளிக்கப் படுகிறது.
  • கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர்  மீட்கப் பட்டிருக்கின்றனர்; அதன் மூலம் அவர்களது மட்டுமல்ல,  அவர்கள் பெற்றோர் முகத்திலும் புன்னகையை திரும்பச் சேர்த்திருக்கிறது என்பது பாராட்டுக்குரியது.
  • உண்மையில் புன்னகை ஒன்றே உலகப் பொதுமொழி என்று கூறலாம்; நிற-மத -நாடு -மொழி-கல்வி வேறுபாடுகளைக் கடந்தும் பரிமாறிக்கொள்ளக் கூடிய ஒரே மொழி புன்னகை மட்டுமே.
  • இந்தப் பின்னணியில், புன்னகை என்னும் மொழி தெரிந்த நாம், சிறு புன்னகையின் மதிப்பினை உணர்ந்து, "புன்னகைப்  பூக்களை' ஏராளமாக மலரச் செய்வோம்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்