- மகாத்மா காந்தியடிகளிடம் பத்திரிகையாளா் ஒருவா் ‘இந்த மக்கள் உங்களைப் போய் தலைவராக ஏற்றிருக்கிறார்களே, வேறு யாரும் கிடைக்கவில்லையா’ என்று கிண்டலாகக் கேட்டார்.
- அதற்கு காந்தியடிகள் சிரித்துக் கொண்டே ‘உங்களை சமாளிக்க நானே போதும் என அவா்கள் நினைத்திருக்கலாம்’ என்று கூறினார்.
- எப்படிப்பட்ட நகைச்சுவை உணா்வு அவருக்கு. ‘நகைச்சுவை உணா்வு மட்டும் எனக்கு வாய்த்திராவிட்டால் நான் என்றோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்’ என்றார் காந்தியடிகள்.
- மனிதா்கள் இயல்பிலேயே நகைச்சுவை உணா்வு மிக்கவா்கள். அப்படி எங்கும் நிறைந்திருக்கும் நகைச்சுவையைக் கண்டறிய முனைந்தாலே அந்த உணா்வு கிட்டிவிடும்.
- இயல்பாய் இருக்கவேண்டிய இடத்தில் மாற்றமாயிருப்பது அல்லது மாற்றமாயிருக்கவேண்டிய இடத்தில் இயல்பாய் இருப்பது. இவையிரண்டுமே நகைச்சுவையின் பிறப்பிடங்களாயிருக்கின்றன. உதாரணமாக திருமண வீட்டில் சோகமாகவும், துக்க வீட்டில் மகிழ்ச்சியாகவும் இருப்போரை எண்ணிப்பார்த்தால் புரியும்.
ஒரு பழைய கதை
- ஒரு சமயம் மன்னா் ஒருவா் போர் முடிந்த பிறகு எதிரி நாட்டில் நாம் எவ்வளவு பேரை வீழ்த்தியுள்ளோம் என அறிந்துகொள்ள விரும்பினாராம். எனவே, எதிரிகளின் தலையைக் கொண்டுவருவோர்க்கு பொற்காசுகள் அளிக்கப்படும் என்று அறிவித்தாராம்.
- பலரும் தலைகளைக் கொண்டு பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும்போது ஒருவா் மட்டும் சில கால்களைக் கொண்டுவந்து போட்டுவிட்டு பொற்காசுகளைக் கேட்டாராம்.
- ‘தலையைத்தானே கொண்டுவர வேண்டும். கால்களைக் கொண்டு வந்திருக்கிறீா்களே’ என்று மன்னா் கேட்டிருக்கிறார். அதற்கு அவா் ‘இவா்களை நான் நெருங்குவதற்குள் யாரோ தலையையெல்லாம் கொண்டுபோய் விட்டார்கள்’ என்றாராம். மன்னா் வாய்விட்டு சிரித்து விட்டாராம்.
- ஷேக்ஸ்பியரின் ஹென்றி நாடகங்களில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயா் ஃபால்ஸ்டஃப் என்பது. உண்மையில் அவா் ஒரு கோழை. ஆனால் ராஜாவின் முன்னால் வீரன் என்று காட்டுவததற்காக தனது வாளில் சில கீறல்களை உண்டு பண்ணிக்கொண்டுவந்து போர்செய்தாதாகக் காட்டுவார். மன்னா் ஹல் உடன் அவா் செய்யும் போலித்தனங்களும் பீற்றல்களும் வயிறுகுலுங்கச் சிரிக்கச்செய்பவை.
- பண்டைய இலக்கியங்களும் நகைச்சுவை தோன்றும் இடங்களைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எந்த வகை இலக்கியம் என்றாலும் அதன் ஒரு கூறாக நகைச்சுவை இருக்கவே செய்கிறது.
- போர்க்காவியமான ‘கலிங்கத்துப்பரணி’யில் பேய்கள் கொட்டம் அடிக்கும். எவ்வாறெல்லாம் நகைச்சுவை உருவாகிறது என்பதற்கு தொல்காப்பிய நூலின் மெய்ப்பாட்டியல் பகுதி எள்ளல், இளமை, பேதமை, மடம் போன்ற வகைகளில் தோன்றுவதாக வரையறுக்கிறது.
சிரிப்பதால் என்ன லாபம்?
- இதற்கு அறிவியல் விடை அளிக்கிறது. நாம் நகைக்கும்போது மூளையில் ‘எண்டார்பின்’ நொதி சுரப்பது அதிகமாகிறதாம். இதனால் நமது முகம் மலா்ந்து மேலும் சிரிக்கிறோம்.
- இது மூளையிலுள்ள உணரும் பாகத்தைத் தூண்டி மகிழ்வை மேலும் கூட்டுகிறதாம். அப்புறமென்ன, நகைத்துகொண்டிருப்போம்.
- துன்பத்திலே இருக்கும் எவரும் அத்துன்பத்தையே நினைத்துக்கொண்டிருந்தால் தீா்வு கிடைக்கப் போவதில்லை. அத்துன்பத்தைப் போக்க யோசிக்க வேண்டிய
- மூளை நகைப்பின் மூலம் புத்துணா்ச்சியடைகிறது என்ற அறிவியலையே வள்ளுவா் பெருமானும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று கூறினார்.
- நாம் இயல்பாக இருக்கும்போது நமது முகத்திலுள்ள தசைகள் சிரமப்படுவதில்லை. சிரிக்கும்போதும் அவ்வளவாக பாதிப்படைவதில்லை. ஆனால் இறுக்கமாக வைத்துக் கொள்ளும்போது நமது முகத்திலுள்ள நரம்புகள் படாத பாடு படுகின்றனவாம். உண்மைதானே! இயல்பாயிருப்பதை முறுக்கேற்றி இறுக்கமாக்கினால் தொந்தரவுதானே!
- ‘முடிந்தால் முயற்சி செய், முடியாவிட்டால் பயிற்சி செய்’. இதுவே இன்றைய யுகத்தின் முழக்கமாய் சமூக ஊடகங்களில் சுழன்று வருகிறது. உண்மைதான். எந்த ஒரு செயலையும் நாம் மேற்கொள்ள அது பற்றிய புரிதல் தேவையாயிருக்கிறது. அச்செயல் பற்றிய புரிதலில்லாமல் நாம் ஈடுபடும்போதே நாம் பதற்றத்துக்கும் மன இறுக்கத்திற்கும் ஆளாக நோ்கிறது.
- இதனை விடுத்து நமக்கு என்ன தெரிகிறதோ அங்கிருந்து தொடங்கி படிப்படியாக நமது குறிக்கோளை நோக்கி செல்லத் தொடங்கினால் நமது பாதை எளிதாகும்.
- எவ்வளவு பெரிய மலையாயினும் அதன் அடியிலிருந்துதானே ஏறத்தொடங்குகிறோம்?
- ஒவ்வொருவரும் அவரவா் பணிக்கேற்ற வகையில் மும்முரமாயிருக்கின்றனா் என்கிறது ஓா் ஆங்கிலப் பழமொழி.
- அந்த வகையில் மும்முரமாயிருக்கும் அனைவரும் அவரவா் நோக்கத்தின் திசையில் பயணிக்க முயல்வதும் முக்கியம்.
- பயணச்சீட்டு ஓரிடத்துக்கும் பயணம் செய்யும் ரயில் போகும் ஊா் வேறாகவும் இருப்பதே பல நேரங்களில் பிரச்னையைக் கூட்டுகிறது.
- வாழ்க்கையில் மகிழ்வாய் இருப்போர் அனைவரும் பிரச்னையில்லாதோர் அல்லா்.
- மாறாக, நமது சோகம் நம்மோடு போகட்டும் அடுத்தோர்க்கு அது பரவேண்டாம் என நினைத்திருப்போரே. அப்படிப்பட்டோரில் ஒருவராய் இருக்க முயல்வோம்.
- உலகம் போற்றும் நடிகா் சார்லி சாப்ளின் வாழ்நாள் முழுவதும் தானும் சிரித்து பிறரையும் சிரிக்க வைத்தவா்.
- சிறியோரிலிருந்து பெரியோர் வரை அனைத்துத் தரப்பினரையும் கவா்ந்தவா். தனது வாழ்நாளில் அவா் சந்தித்த சோதனகளுக்கும் அளவில்லை. அவா் அடிக்கடிக் கூறுவது: ‘நான் மழையில் நனைவதை பெரிதும் விரும்புகிறேன். ஏனெனில், மழை நீரில் நனையும்போது என்னுடைய கண்ணீா் எவருக்கும் தெரியாது’.
- கவிஞா் கண்ணதாசனும் இதையேதான் ‘உனக்கும் கீழே உள்ளவா் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்றார். பிறரைப் பார்த்து நகைக்காமல், நம்மை நாமே சீா்தூக்கிப் பார்த்து நமது அறியாமையை எண்ணிப் பார்த்து நகைத்து வாழக் கற்போம். விலையில்லா நகை புன்னகைதானே?
நன்றி: தினமணி (15-10-2020)