TNPSC Thervupettagam

புயல் எப்படி உருவாகிறது

December 13 , 2023 221 days 440 0
  • மிக்ஜாம் புயல் தாக்கி சென்னையே ஸ்தம்பித்துவிட்டது. புயலால் ஏற்பட்ட பாதிப்பால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான புயல்கள் உலகமெங்கும் உருவாகி, நிலத்தைத் தாக்கிவருகின்றன. இந்தப் புயல்கள் எங்கிருந்து உருவாகின்றன? இதற்குப் பின் இருக்கும் அறிவியல் என்ன?
  • புயல் உருவாவதற்கு இரண்டு விஷயங்கள் அவசியம். ஒன்று வெப்பம், மற்றொன்று காற்று. காற்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிரம்பி இருக்கிறது. சூரியனின் வெப்பம் பூமியில் விழும்போது காற்றின் மூலக்கூறுகள் (Air Molecules) அடர்த்தி இழந்து மேல் நோக்கி நகர்கின்றன. அதனால், அங்கு குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது.
  • காற்றின் மூலக்கூறுகள் மேலே சென்றவுடன், அந்த இடத்தை நிரப்புவதற்கு அழுத்தம் அதிகமாக உள்ளபகுதியில் இருக்கும் காற்றின் மூலக்கூறுகள் தானாக இடம்பெயர் கின்றன. இந்த விசையைத்தான் நாம் காற்று வீசுவதாகக் (Wind) கருதுகிறோம். இந்தக் காற்று பூமியின் சுழற்சியால் சுழல ஆரம்பிக்கிறது. இதை ‘கோரியாலிஸ்’ விளைவு என்கிறோம்.
  • பூமி கோள வடிவத்தில் இருப்பதால் பூமத்திய ரேகைக்கு (Equator) அருகே அவற்றின் சுழற்சி அதிகமாகவும் துருவங்களுக்கு அருகே பூமியின் சுழற்சி குறைவானதாகவும் இருக்கும். பூமி எதிர்க்கடிகார (Anti-Clockwise) திசையில் சுழல்வதால் பூமத்திய ரேகைக்குக் கீழே உருவாகும் காற்று கடிகாரத் திசையிலும், பூமத்திய ரேகைக்கு மேலே உருவாகும் காற்று கடிகார எதிர்த்திசையிலும் சுழலும். ஆனால், இந்தக் காற்று உடனே புயலாக உருமாறிவிடாது. அதற்கு வேண்டிய மற்றொரு விஷயம் வெப்பம்.
  • நீர்தான் புயலுக்குத் தேவையான அதிகபட்ச வெப்பத்தை வழங்குகிறது. இதனால்தான் கடல் போன்ற பெரிய நீர்ப்பரப்பு கொண்ட பகுதிகளில் மட்டும் புயல் உருவாகிறது. கடல்மட்டத்தின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருக்கும்போது, அந்தப் பகுதியில் காற்று வெப்பமடைந்து அதிக அளவில் மேல் எழும்புகிறது. இது குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்து மேகங்களாகின்றன. இந்த மேகங்கள் காற்றுடன் சேர்ந்து சுழலத் தொடங்குகின்றன.
  • நீர் ஆவியாகும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்போது அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு நாம் மேலே பார்த்ததுபோல பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகும். இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதியை நிரப்புவதற்கு வலிமையான காற்று அதிவேகத்துடன் சுழன்று வருகிறது. இவ்வாறு காற்றின் வலிமை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இப்படித்தான் புயல் உருவாகிறது.
  • கடலில் உருவாகும் புயல் ஏன் கரையை நோக்கி வர வேண்டும்? புயலுக்குத் தேவையான வெப்பம் நீரிலிருந்து கிடைக்கிறது அல்லவா? பொதுவாக நிலப்பரப்பிற்கு அருகே உள்ள கடல்பகுதிகளில்தாம் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவேதான் எல்லாப் புயல்களும் கரையை நோக்கி நகர்கின்றன. பொதுவாக மேகங்கள் சுழல ஆரம்பிக்கும்போது கடினமான பகுதிகள் ஓரத்துக்குச் சென்றுவிடுகின்றன, நடுப்பகுதி காலியாகிவிடுகிறது. இதனால் புயலின் மையம் நிலத்தை அடையும்போது நாம் எந்தவிதத் தாக்கத்தையும் உணர்வதில்லை. ஆனால், முனைப் பகுதி நிலத்தை அடையும்போது அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அப்போதுதான் புயல் காற்று வழியில் பார்க்கும் அனைத்தையும் சுருட்டி எறிந்துவிடுகிறது.
  • புயலின் தலைப்பகுதி கரையைக் கடக்கும்போது எந்தத் திசையில் காற்று வீசியதோ அதற்கு எதிர்த்திசையில் முனைப்பகுதி கடக்கும்போது காற்று வீசும். புயல் எந்தத் திசையில் நம்மைத் தாக்கப் போகிறது என்பதை நாம் வெப்பநிலையை வைத்து அறிந்துகொள்ளலாம். கடலில் எங்கெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாம் கண்டுவிட முடியும். அதை அடிப்படையாக வைத்து எந்தப் பகுதியில் புயல் பயணிக்கும், எங்கே தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதையும் சொல்லிவிட முடியும்.
  • பொதுவாகப் புயல் கரையை நோக்கி நகரும்போது நிலத்திலிருந்து செல்லும் வெப்பம் வறண்ட காற்றாக உருமாறி அதனுடன் சேர்கிறது. அது மேலே இருக்கும் மேகங்களைக் கீழ் நோக்கி இழுப்பதால் மழையாகப் பொழிகிறது. சரி, காற்றும் வெப்பமும் எப்போதும் இருக்கின்றன. ஆனால், புயல் எப்போதும் ஏன் உருவாவதில்லை? உண்மையில், காற்று புயலாக உருவாவதற்குக் கடலில் எப்போதும் வெப்பநிலை வேறுபாடு இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
  • அதேபோல கடலிலிருந்து மேலே செல்லும் நீராவியும் மேகக்கூட்டங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காதபட்சத்தில் புயல் தானாகவே வலுவிழந்துவிடும். இதனால்தான் சில நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, பிறகு புயலாக மாறுவதற்கு முன்பே வலுவிழந்துவிட்டதாகச் செய்தியில் சொல்கிறார்கள்.
  • கடந்த காலங்களைவிட இன்றைய காலகட்டத்தில் புயலால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதற்குக் காரணம் காலநிலை மாற்றம். காடுகள் அழிப்பு, அதிக அளவு புதைபடிம எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் புவி வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வெப்பம்தான் புயலுக்கு வேண்டிய எரிபொருள் அல்லவா?
  • இதனால்தான் பேரழிவை ஏற்படுத்தும் புயல்கள் அடிக்கடி உருவாகி கடும் சேதத்தை விளைவிக்கின்றன. எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர்களைச் சமாளிக்க நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டும் போதாது. வரும்முன் காப்போம் என்கிற அடிப்படையில் புயல்கள் ஏற்படாமல் தடுக்கச் சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாப்பது அவசியம் என்பதும் புரிகிறது.

நன்றி: தி இந்து (13 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்