TNPSC Thervupettagam

புரட்சிகர தொழில்நுட்பங்கள், காலத்தின் கட்டாயம்!

July 10 , 2019 1945 days 1065 0
நான்காம் தொழில்நுட்ப வளர்ச்சி
  • மனிதனுக்கு மாற்றுச் சக்தியாக இயந்திரங்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது எந்திரன்கள் (ரோபோட்ஸ்) பேசுகின்றன; கேட்கின்றன. மேலும், அவை தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் நிலைமைக்கு வந்துவிட்டன.
  • ஒரு திரைப்படத்தை 5 ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 3 விநாடிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
  • நான்காம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் (4-ஆவது தொழில் புரட்சி) மற்ற புதிய தொழில்நுட்பங்களான செயற்கை அறிவுத்திறன், 5ஜி அதிவேக செல்லிடப்பேசி இணைப்புகள், மேக தொழில்நுட்பங்கள் (கிளவுட் டெக்னாலஜிஸ்), உயிரி தொழில்நுட்பங்கள் போன்ற புரட்சிகர தொழில்நுட்பங்கள் இந்த உலகை புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளன.
செயற்கை அறிவுத்திறன்
  • ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அறிக்கையின்படி, எந்த நாடு செயற்கை அறிவுத்திறனில் சிறந்து விளங்கப் போகிறதோ, அதுவே இந்த உலகை ஆளும் திறமை படைத்த நாடாக உருவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • புரட்சிகர தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் சீனாவும் அமெரிக்காவும் மிகவும் சிறந்து விளங்குகின்றன. 21-ஆம் நூற்றாண்டின் அடிப்படை தொழில்நுட்பமாக செயற்கை அறிவுத்திறனை சீனா அறிவித்துள்ளது.
  • இந்தப் புரட்சிகர தொழில்நுட்பங்கள் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் முழுவதுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து வருகின்றன.
  • செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பமானது, 2030-ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் என பிரைஸ் வாட்டர் கூப்பர் கூறுகிறது.
  • இதில் 7 ட்ரில்லியன் அளவுக்கான வளர்ச்சி சீனாவிலும் 5 ட்ரில்லியன் அளவுக்கான வளர்ச்சி அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளிலும் ஏற்பட உள்ளது என அறிக்கைகள் கூறுகின்றன.
  • இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் சமூக, கல்வி, பொருளாதார, தொழில் மற்றும் அரசியல் மாற்றங்களை மாபெரும் அளவில் கொண்டு வர உள்ளது.
  • மின்சாரம் கண்டுபிடிப்பு, 19-ஆம் நூற்றாண்டில் எப்படி உலகை புரட்டிப் போட்டதோ, அவ்வாறே இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் உலகை புரட்டிப்போட உள்ளன.
இந்தியாவில் செயற்கை அறிவுத்திறன்
  • சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், இந்தத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இந்தியாவில் சற்று குறைவாகவே உள்ளது.
  • 2018-19-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பம் என்ற தேசிய வரைவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி, சுகாதாரம், வேளாண்மை அடிப்படை கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து ஆகியவற்றில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில், செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப வளர்ச்சி 2035-ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை (ரூபாயில் 60 லட்சம் கோடிக்கும் மேல்) அடையும் எனக் கூறப்படுகிறது.
  • எதிர்காலத்தில் கனரக வாகனங்களிலும், கப்பல்களிலும், ரயில் போக்குவரத்துகளிலும் தானியங்கி ட்ரோன்கள் (ட்ரோன்ஸ்) சரக்குகளை ஏற்றி இறக்கும்.
  • பல்வேறு தொழிற்சாலைகளும் எந்திரன் மூலம் இயக்கப்படும். காட்டுத் தீயை அணைக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
  • மேலும் புயல், பூகம்பம், வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்குப் பிறகு மனிதர்களையும் பொருள்களையும் தேடிக் கண்டுபிடிக்க இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
  • தற்போது அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி பழங்களானது, எந்திரன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. மேலும், எதிர்வரும் காலங்களில் தானியங்கி கிடங்குகளும், பங்குச் சந்தை ஆய்வுகளும், பல்வேறு பொருள்களின் தரக் கட்டுப்பாடும், வாகனம் ஓட்டுதலும், ஊடுகதிர் மருத்துவர்களின் வேலைகளும், பல்வேறு சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தில் காசாளர் வேலைகளும் மற்றும் பல வேலைகளும் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தின் மூலம் கையாளப்படும்.
  • ஆனால், தற்போது செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் மெதுவாகவும், குறிப்பிட்ட அளவிலும் மட்டுமே இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பமானது 22% மட்டுமே வணிகத்திலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இந்தத் தொழில்நுட்பம் 78% நடைமுறையில் உள்ளது.
தொழில்நுட்பமும் பொருளாதார ஏற்ற தாழ்வும்
  • இந்தத் தொழில்நுட்பங்கள் சமூகத்தில் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
  • மேலும், இந்தத் தொழில்நுட்பங்களின் மூலம் அதிகம் பேர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட உள்ளது. செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பமானது 40 -50 % வரை வேலை இழப்பினை ( 3 கோடி-4 கோடி தொழிலாளர்கள்) அடுத்த 15 ஆண்டுக்குள் அமெரிக்காவில் ஏற்படுத்தும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
  • மெக்கன்சி நிறுவனத்தின் அறிக்கையின் படி உலக அளவில் 50% வேலைகள், தானியங்கி இயந்திரங்களின் மூலம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் உலக அளவில் 20-25 சதவீதம் வரை தொழிலாளர்களின் தேவை குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\
  • நாஸ்காம்-இந்தியா நிறுவன அறிக்கையின்படி, இந்தியாவில் 46 சதவீத தொழிலாளிகள் 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்று தேர்ச்சி பெற வேண்டும்.
  • மேலும், செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பங்கள், இயந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களும் 60 சதவீதம் அதிகமாக இந்தியாவுக்கு தேவைப்படும் என அறிக்கைகள் கூறுகின்றன.
  • இந்தியாவிற்கு 2020-ஆம் ஆண்டுக்குள், 2 லட்சம் புள்ளியியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், கணினி பார்வைப் பொறியாளர்களும், இயந்திரங்களை இயக்கும் பொறியாளர்களும், புதிய
  • தொழில்நுட்பங்களை கட்டமைக்கும் மேகப் பொறியாளர்களும், மொழிகளை கணினி மொழியாக்கம் செய்யும் நிபுணர்களும், 3டி மாதிரி பொறியாளர்களும் இந்தியாவிற்கு அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்.
  • ஆனால், இன்று 80% பொறியாளர்களுக்கு இந்தத் தொழில்நுட்பங்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அதற்கான தகுந்த கல்வியும் வழங்கப்படவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகம் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் படித்து 6 மில்லியன் பொறியாளர்கள் உள்ளார்கள்; இவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே புதிய தொழில்நுட்பங்களை அறிந்தவர்களாக உள்ளனர்.
  • மேலும், செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்திற்கான தரவுகளில் 1% மட்டுமே இதுவரை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தில் உலகில் 22,000 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
  • இவர்களில் 386 முனைவர்கள் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதைப் பற்றிய ஆராய்ச்சி இந்தியாவில் மிகவும் பின்தங்கி உள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் உள்ள 750 பல்கலைக்கழகங்களில், 50 ஆராய்ச்சிகள் மட்டுமே இது குறித்து நடந்துள்ளன என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
  • ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மூலம் இங்கிலாந்து செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீனாவானது பல்கலைக்கழகங்களில் இந்தத் தொழில்நுட்பத்திற்கான ஐந்து ஆண்டுகள் படிப்பினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இதன் மூலம் இந்த 500 ஆசிரியர்களையும், 5000 தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கிக் கொண்டுள்ளது.
  • அமெரிக்காவில் தனியார் துறையும், சீனாவில் அரசுத் துறையும் இந்தத் தொழில்நுட்பத்திற்கான வளர்ச்சியில் அதிக பங்களிப்பினைத் தருகின்றன. உலகின் மிகப் பெரிய செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையத்தை ஜெர்மனி உருவாக்கியுள்ளது.
  • தொழிலதிபர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் கூட்டு முயற்சியுடன் பிரான்ஸ், உலக அளவிலான ஆய்வு மையத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாடும் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாபெரும் சாதனைகளை படைத்துக் கொண்டு வருகின்றது. அரபு நாடுகளின் கூட்டமைப்பு செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது.
  • இங்கிலாந்தும் அவ்வாறு செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதற்கான வளர்ச்சி மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சி, இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களிலும், இந்திய அறிவியல் பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே நடைபெறுகின்றன.
  • மேலும், சீனாவில் பிக்கிங் பல்கலைக்கழகம், அங்கு இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த நிறுவனங்களான பெய்து, அலிபாபா முதலானவற்றுடன் சேர்ந்து கூட்டு ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சிகள் அறிவியல், மருத்துவம், சட்டம், போக்குவரத்து முதலிய துறைகளில் நடைபெறுகின்றன.
  • இந்த நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியாவில் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகளும், விழிப்புணர்வும் குறைவாக இருக்கின்றன.
தொழில்நுட்ப கல்வியின் முக்கியத்துவம்
  • எனவே, இன்று வழக்கத்தில் இருக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வியுடன், இந்தப் புதிய புரட்சிகர தொழில்நுட்பத்துக்கான மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் இங்கு அரசு, கல்வியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிலதிபர்கள், வர்த்தக அமைப்புகள், முதலீட்டாளர்கள் முதலானவர்களுடன் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.
  • மேலும், இந்தியாவில் அரசின் உதவியுடன் இந்தத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருபவர்களை மாபெரும் அளவில் ஊக்கப்படுத்த வேண்டும்.
  • மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தத் தொழில்நுட்பங்களை பாடத்திட்டங்களாக இடம்பெறச் செய்து, மாணவர்களுக்கு ஆராய்ச்சியுடன் பயிற்றுவிக்க வேண்டும்.
  • இந்தப் புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும், திறமையாகவும் இந்தியாவில் கையாளப்பட வேண்டும். இல்லையெனில், சமூகத்தில் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
  • இதற்கு சமூகத்தில் மாபெரும் கண்டுபிடிப்புகளும், அதிக தொழில் வளர்ச்சியும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். எனவே, மத்திய அரசும் மாநில அரசுகளும் இதற்கான கொள்கைகளை துரிதமாக வகுத்துச் செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி (10-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்