TNPSC Thervupettagam

புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்

November 3 , 2024 66 days 109 0

புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்

  • ‘பொதுவான இல்லம்’ எனும் பொருளில் அமைந்த பொதியில் என்ற சொல் சங்ககால இறையகங்​களைக் குறிக்​கும். எழுத்தணி கடவுளுடன் பொதியில், கந்துடைப் பொதியில், மண்டகப் பொதியில் முதலிய சங்க இலக்கியச் சொல்வழக்​கு​களும், ‘இட்டிகை நெடுஞ்​சுவர் விட்டம் வீழ்ந்​தென’, ‘மரஞ்சோர் மாடம்’ எனும் சங்கத் தொடர்​களும் அந்த இறையகங்​களின் கட்டுமான அமைப்பைக் கண்முன் நிறுத்து​கின்றன. நகர் என்றும் அழைக்​கப்பட்ட அவற்றின் காலநிரலான அமைப்பு மாற்றங்​களையும் அதற்கேற்ப உருவான பெயர்​களையும் கோட்டம், கோயில் உள்ளிட்ட சிலப்​ப​தி​காரச் சொல்வழக்​கு​களால் அறிய முடிகிறது.
  • சங்க இலக்கி​யங்​களில் இடம்பெறாத இறையகச் சொல்வழக்​கொன்றைப் பத்திமை இலக்கியங்கள் முன்வைக்​கின்றன. ‘மாடக்​கோ​யில்’ என்ற அந்தச் சொல்லைக் கோச்செங்​கணான் என்ற சோழவேந்​தருடன் இணைத்துப் பேசும் பாங்கை மங்கை​யாழ்​வாரின் திருநறையூர்ப் பாசுரத்​திலும் ஞானசம்​பந்​தரின் வைகல் பதிகத்​திலும் காண முடிகிறது. அதைப் பெருங்​கோயில் என்றும் அறிமுகப்​படுத்துவார் சம்பந்தர். இத்தகு கோயில்கள் எழுபது இருந்​த​தாகவும் அவற்றைக் கட்டமைத்தவர் திருக்​குலத்து வளச்சோழரான கோச்செங்​கணானே என்றும் மங்கை​யாழ்வார் உறுதிபடப் பாடியுள்​ளார். தம் காலத்தே தமிழ்​நாட்​டிலிருந்த கோயில் கட்டமைப்பு வகைகளைச் சுட்டுமிடத்து, அவற்றைப் பெயரளவில் மட்டுமே குறிப்​பிடும் அப்பர் பெருமான் அவற்றுள் ஒன்றான பெருங்​கோயிலை மட்டும் எழுபத்​தெட்டு என்று எண்ணிக்கையுடன் சொல்வார்.
  • கோச்செங்​கணான் எனும் சோழ அரசரின் பெருவீரம் மங்கை​யாழ்​வாரின் திருநறையூர்ப் பாசுரத்தில் பலபடப் பேசப்​பட்​டுள்ளது. வெண்ணியில் விறல் மன்னரையும் விளந்​தையில் அதன் வேளையும் அழுந்​தையில் படை மன்னர்​களையும் போரில் வெற்றிகண்டு உலகமாண்ட தென்னாட​ராக கோச்செங்​கணானைப் பாடிப் பரவுகிறார் மங்கை​யாழ்​வார். இம்மன்னன் மீது பொய்கை​யாழ்​வாரால் பாடப்​பெற்ற களவழிநாற்பது எனும் கீழ்க்​கணக்கு நூலொன்றும் மன்னரின் வீரம், அவருக்கும் சேர அரசர் ஒருவருக்கும் நிகழ்ந்த போர், அப்போரில் சேர அரசர் உயிரிழந்தமை முதலிய பல வரலாற்றுத் தரவுகளை முன்வைக்​கிறது.
  • சோழர் காலச் செப்பேடுகள் சிலவற்றில் சோழர் மரபுவழி கூறுமிடத்துச் சுட்டப்​படும் இக்கோச்​செங்​கணானின் காலம் குறித்துப் பல கருத்துகள் முன்வைக்​கப்​பட்​டாலும், நெடிய ஆய்வு​களுக்குப் பின் டாக்டர் மா.இராச​மாணிக்​கனார் செங்கணான் காலத்தைப் பொதுக்​காலம் 5ஆம் நூற்றாண்​டாகச் சுட்டி​யுள்ளமை பொருந்​து​வ​தாகவே உள்ளது.
  • சைவம், வைணவம் எனும் இருவேறு சமயஞ்சார் இலக்கியச் சான்றுகளால் கோச்செங்​கணானோடு தொடர்​புபடுத்​தப்​படும் மாடக்​கோ​யில்கள் கட்டமைப்பில் புதியவை. அதனாலேயே, எத்தனையோ கோயில்​களைப் பாடியுள்ள தேவார மூவரில் இருவரும் மங்கை​யாழ்​வாரும் மாடக்​கோ​யில்​களைப் பாடுமிடத்து அவற்றை எழுப்​பிய​வரையும் மறவாது அடையாளப்​படுத்​தி​யுள்​ளனர். அதுநாள்வரை இருந்த கட்டமைப்பு​களி​லிருந்து மாடக்​கோயில் மாறுபட்டு அமைந்​த​தாலேயே அதற்குப் புதிய பெயரும் கிடைத்தது. அதைக் கட்டிய​வருக்குப் பாடல் புகழும் அமைந்தது.
  • தமிழ்​நாட்டில் இன்றும் பார்வைக்குக் கிடைக்கும் இம்மாடக்​கோ​யில்​களில் பெரும்​பாலானவை நாகப்​பட்​டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்​டங்​களிலேயே அமைந்​துள்ளன. அவற்றைக் கண்டறிந்து விரிவான அளவில் ஆய்வுசெய்து, ‘மலைக்​கவைக்கும் மாடக்​கோ​யில்கள்’ என்றொரு நூலையும் வெளியிட்​டுள்ள டாக்டர் மா.இராச​மாணிக்​கனார் வரலாற்​றாய்வு மைய ஆய்வர்கள் வெற்றுத்​தளத்தின் மீது கட்டப்​பெற்ற இறையகமே மாடக்​கோயில் என்று வரையறை செய்துள்ளனர்.
  • தளம் என்பது கட்டு​மானம் சார்ந்த கலைச்​சொல். இது தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று உறுப்புகள் கொண்ட அமைப்​பாகும். இத்தளம் ஒரு மேடைபோல, உள்ளீடின்றி அமையும்போது வெற்றுத்​தள​மாகிறது. இறையகங்கள் பொதுவாக நிலத்​திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமையு​மாறுபோல, மாடக்​கோ​யில்கள் மூன்று உறுப்புகள் பெற்ற வெற்றுத்​தளத்தின் மீது கட்டப்​பெற்றன. இந்த வெற்றுத்தளமே பிற கோயில் வகைகளி​லிருந்து மாடக்​கோயிலை வேறுபடுத்தி, அதைப் பெருங்​கோயி​லாகவும் வடிவமைத்தது. வெற்றுத்​தளத்தின் உயரமும் கட்டமைப்புத் திறனும் கோயிலுக்குக் கோயில் மாறுபட்​டாலும், அதன் மீதிருக்கும் இறையகத்தை அடைய அனைத்து மாடக்​கோ​யில்​களும் படிவரிசை பெற்றுள்ளன. இப்படிவரிசையின் அமைப்பு, உயரம், படிகளின் எண்ணிக்கை என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபட்​டுள்ளன.
  • பெரிய கோயில் என்றழைக்​கப்​படும் சிராப்​பள்ளி மாவட்டத் திருவெள்​ளறைத் தாமரைக்​கண்ணர் கோயில் ஒரே திசையில் இரு படிவரிசைகள் பெற்ற மாடக்​கோயி​லாகும். அதன் வெற்றுத்தளக் கீழ்ப்​பகு​தியில் பிற்பல்லவர் காலச் சிற்பங்கள் தொடராக அமைந்​துள்ளமை குறிப்​பிடத்தக்க சிறப்பு. அதுபோலவே திருப்பேர் நகரிலுள்ள அப்பக்​குடத்தான் மாடக்​கோ​யிலும் முன்புறமொன்றும் பின்புறமொன்​றுமாய் இரண்டு படிவரிசைகள் கொண்டுள்ளன. பாபநாசத்​திற்கு அருகில் உள்ள திருநல்லூர் மணவழகர் மாடக்​கோயிலின் இறையகமும் அதன் மேற்றளமும் இன்றும் பல்லவச் சுவடு​களுடன் மின்னுகின்றன. திருப்​பணி​களுக்கு ஆட்பட்டுத் தண்டலை நீள்நெறி போன்ற சில மாடக்​கோ​யில்கள் உருமாறி​யிருந்​தா​லும், சில கால வெள்ளத்தில் கரைந்​து​போ​யிருந்​தாலும் கோச்செங்​கணான் பெயர் சொல்ல நாம் அறிந்​தவரையில் 37 கோயில்கள் எஞ்சி​யுள்ளன.
  • இயல்பான இறையகங்​களுக்கு மாற்றாக ஏன் இந்த வெற்றுத்தள மாடக்​கோ​யில்கள் என்ற கேள்விக்கு விடைகாண முயன்ற​வர்கள், தொன்மங்​களையும் பலவாய்க் காரணங்​களையும் முன்வைத்த​போதும், பெருமழைக்கால வெள்ளப் பெருக்கில் அக்கால இறையகங்கள் கரைந்து மறைந்தமை கண்ட சூழலில், அந்நிலை​யி​லிருந்து கட்டு​மானங்​களைக் காப்ப​தற்​காகவே ஒரு தடுப்புச்​சுவர் போல கோச்செங்​கணான் காலக் கட்டுமான அறிஞர்​களால் இந்த வெற்றுத்தள அமைப்பு உருவாக்​கப்​பட்டது என்ற அறிவியல் பார்வை ஏற்புடையதாக உள்ளது.
  • இம்மாடக்​கோ​யில்களை உருவாக்கிய கோச்செங்​கணானை நாயன்​மார்​களுள் ஒருவராக்கிச் சைவம் கொண்டாட, பன்னிரு ஆழ்வார்​களில் ஒருவரான மங்கை​யாழ்வாரோ நறையூர்ப் பாசுரப் பாடல்கள் அனைத்​திலும் அவரைப் பல்வேறு சிறப்புச் சொற்களால் போற்றி மகிழ்ந்​துள்ளார். கட்டு​மானங்​களுக்​காகப் பாடலடிகளில் இப்படி இரு சமயப் பெரிய​வர்​களின் போற்றல் பெற்ற ஒரே தமிழ் மன்னர் கோச்செங்​கணான்​தான்.
  • வழக்கமான, இயல்பான முறைகளி​லிருந்து மாறுபட்டுப் புதிய கோணங்களை நோக்கிப் பயணிப்பது புரட்சி என்றால், கோச்செங்​கணானின் மாடக்​கோ​யில்​களும் கலையுலகப் புரட்​சி​தான். தமிழ் மண்ணில் இதுபோல் தங்கள் கட்டுமான அமைப்பு​களால் புதிய கண்ணோட்​டங்​களுக்கான வாயில்​களைத் திறந்த முதலாம் மகேந்​திரர், ராஜசிம்மப் பல்லவர், முதல் ராஜராஜர் என்ற புரட்சிக் கலைஞர்​களின் வரிசையில் முதலடி எடுத்து​வைத்​தவரும் கோச்செங்கணான்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்