- இந்த ஆண்டும் தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசித் தேதி ஒரு மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. ஜூலை 31-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரிக் கணக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித் துறை அறிவித்திருக்கிறது. எதார்த்த நிலை புரியாமலும் தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ்) செயல்படுகிறது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
வரவு-செலவு கணக்குகள்
- வரவு-செலவு கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாதவர்கள் ஜூலை 31-க்குள்ளும், வரவு-செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டியவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள்ளும் ஒவ்வொரு நிதியாண்டும் தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள், நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டனர். ஜூன் 30-ஆம் தேதிக்குள் மாத வருவாய்ப் பிரிவினர், ஜூலை 31-ஆம் தேதிக்குள் சுயதொழில் செய்பவர்கள், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தனி உரிமையாளர் நிறுவனங்கள், கூட்டு உரிமையாளர் நிறுவனங்கள், நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் (பப்ளிக் லிமிடெட்) ஆகியவற்றின் கணக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- 2013-14 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3.5 கோடியாக இருந்தது. அதுவே கடந்த 2017 - 18 நிதியாண்டில் 6.44 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதன் விளைவாக, வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
வருமான வரி தாக்கல்
- இந்த அளவுக்கு வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை எதிர்கொள்ளும் அளவுக்கு வருமான வரித் துறையின் தொழில்நுட்பக் கட்டமைப்பு அதிகரிக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் வருமான வரித் துறையின் இணையதளத்தில் தங்களது கணக்குகளை தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இணைய வசதி மேம்படுத்தப்படவில்லை.
- கடந்த 2017-18 நிதியாண்டிலிருந்து நிதியமைச்சகம் மிகக் கடுமையான ஒரு செயல்பாட்டைக் கையாளத் தொடங்கியிருக்கிறது. குறித்த காலத்தில் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் அபராதம் செலுத்தியாக வேண்டும் என்பதுதான் அது. வருமான வரித் துறையின் இணைய தள தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாத நிலையில், காலதாமதத்தின் பழியை வருமான வரி தாக்கல் செய்பவர்கள் மீது சுமத்துவது நேர்மையான அணுகுமுறை அல்ல.
- நேரடி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று அரசு விரும்பும் நிலையில், தாமதமானாலும்கூட வருமான வரி தாக்கல் செய்வதை ஊக்குவிக்காமல் இருப்பது சிறு, குறு தொழில்களையும், புதிதாக வரி செலுத்த விரும்புபவரையும் பாதிக்கிறது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். முத்ரா கடன் வழங்குவதற்குக்கூட இரண்டு வருட வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா என்று வங்கிகள் கேள்வி கேட்கின்றன.
- புதிய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காகவாவது, தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக அரசு நீட்டிக்க வேண்டும்.
மற்ற நாடுகளில்
- மேலை நாடுகளில் மக்கள்தொகை குறைவு. வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் குறைவு. முறையான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. அதனால், வெளிநாடுகளையும், வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளையும் ஒப்பிட்டு இந்திய அரசு தன்னுடைய சட்ட திட்டங்களை இயற்றக் கூடாது.
- வரி வருவாய்க்குள் கொண்டுவரப்பட வேண்டியவர்கள் இன்னும் பல கோடிப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிற நாடுகளின் பாணியைப் பின்பற்றி இந்தியாவின் நிதி நிர்வாகம் நடத்தப்பட்டால் அது விபரீதத்தில்தான் முடியும்.
நாம் இன்னொரு முக்கியமான உண்மையையும் உணர வேண்டும். அதிகரித்து வரும் இந்தியாவின் தொழில் வளர்ச்சியையும், வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையையும் எதிர்கொள்ளும் அளவிலான பட்டயக் கணக்காளர்கள் (சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ்) இந்தியாவில் இல்லை. இந்தியாவில் இருக்கும் மொத்த பட்டயக் கணக்காளரின் எண்ணிக்கை 1.32 லட்சம்தான். அவர்களது உதவியில்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யக்கூடிய மாத வருவாய்ப் பிரிவினர், வருமான வரி தாக்கல் செய்வோரில் 36% மட்டுமே.
- ஏனைய 4.11 கோடி வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு பட்டயக் கணக்காளர்களின் உதவி தேவை. அதாவது, சராசரியாக ஒவ்வொரு பட்டயக் கணக்காளரும் 300-க்கும் அதிகமான கணக்குகளை தணிக்கை செய்தாக வேண்டும். முறையாகவும், தவறில்லாமலும் குறுகிய காலஅவகாசத்தில் அவர்களால் கணக்குகளைத் தணிக்கை செய்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துவிட முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளப் பேரறிவு ஒன்றும் தேவையில்லை.
- ஆண்டுதோறும் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசத்தை வேறுவழியில்லாமல் நீட்டிப்பதை விட்டுவிட்டு, எதார்த்த நிலையை உணர்ந்து பழைய முறைக்கே திரும்புவதுதான் மத்திய நேரடி வரிகள் ஆணையம் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கை.
நன்றி: தினமணி(25-07-2019)