TNPSC Thervupettagam

புறாக்கள் செய்தி தருவதற்கா, நோய் தருவதற்கா புறாக்கள்

July 29 , 2023 477 days 300 0
  • சென்னை போன்ற பெருநகரங் களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எந்த அட்வான்ஸ் பணமும் தராமல், வாடகையும் தராமல் மனிதர்களுடன் சேர்ந்து வாழத் தொடங்கிவிடுகின்றன புறாக்கள். மன்னர்கள் காலத்தில் புறாக்கள் கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. 1946லிருந்து ஒடிசா மாநிலக் காவல் துறையில் தகவல்தொடர்பு இல்லாத, போகமுடியாத இடங்களுக்குச் செய்தி கொண்டு செல்ல புறாக்கள் உதவின. உலகப் போர்களின்போதும் புறாக்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • புறாக்களில் மணிப்புறா, மாடப்புறா என்று எத்தனையோ வகை இருந்தாலும், அவற்றைக் காட்டில் வாழும் புறா, நாட்டில் வாழும் புறா என்று பிரித்துக்கொள்ளலாம். புறாக்கள் விஷயத்தில் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து ஆரோக்கியத்தைப் பேண மறக்கக் கூடாது.

புறாக்களிலிருந்து நோய்கள் எப்படிப் பரவுகின்றன?

  • காட்டுப்புறாக்கள் அதிகக் கிருமிகளை உடலில் கொண்டி ருக்கும். நாட்டுப் புறாக்களுக்கு அவற்றைப் பரப்பவும் செய்யும். புறாக்களின் கழிவு, எச்சம், இறகு, சுரப்பு நீர் ஆகியவற்றின் மூலமாக மனிதர்களுக்குத் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாகக் கழிவு, எச்சம் ஆகியவை மனிதர்கள் வசிக்கும் பல்வேறு இடங்களிலும் விழுந்து, உலர்ந்து, காற்றில் துகள்களாக (Airborne) கலந்து பரவி இருக்கும். அதிலுள்ள கிருமிகள் இவற்றைச் சுவாசிக்கும் நபர்களின் நுரையீரலைச் சென்றடைவதால் தொற்று ஏற்பட்டுவிடுகிறது.

முக்கிய நோய்கள்:

சிட்டாகோசிஸ்:

  • இது கிளமிடியா சிட்டாசிஎன்கிற நுண் கிருமியால் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப் பட்டவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். நுரையீரல் பாதிப்புடன் இதயம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளும் ஏற்படச் சாத்தியம் உள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் நுரையீரல் பாதிப்பை அறியலாம். பிசிஆர் போன்ற நவீனப் பரிசோதனைகள் மூலம் தொற்றை உறுதிப்படுத்தவும் முடியும்.

ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனி டிஸ் (Bird/pigeon fancier’s lung)

  • புறாவின் எச்சம், சிறகுகளில் இருக்கும் பல்வேறு புரதப் பொருள்கள் (ஆன்டிஜென்கள்) நுரையீரலில் வினைகளைத் தூண்டுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படும். மருந்துகள், பூஞ்சை, பாக்டீரியா, வேதிப்பொருள்கள் என இந்தப் பாதிப்பு வருவதற்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். நோயாளிக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், எடை குறைதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
  • இவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள், ஒவ்வாமைக்கான பரிசோத னைகள், சுவாச / நுரையீரல் திறன் பரிசோதனை, மூச்சுக் குழல் உள்நோக்கிப் பரிசோதனை ஆகியவை தேவைப் படலாம்.
  • இவர்களுக்குப் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப ஸ்டீராய்டு மருந்துகள், பிற எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள், நாரிழை (ஃபைப்ரோஸிஸ்) உருவாகாமல் தடுக்கும் மருந்துகள், சுவாசப் பயிற்சிகள், ஆக்ஸிஜன் எனப் பன்முகச் சிகிச்சை தேவைப்படும்.
  • இந்தப் பாதிப்பு நாள்பட்ட நோயாக மாறும்போது, நுரையீரலில் நாரிழை மிகுவதால் அவர்களுக்கு நுரையீரலில் ஃபைப்ரோஸிஸ் ஏற்படும். இதன் காரணமாகச் சுவாசம் பெரிதும் பாதிக்கப்படும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகூட ஏற்படலாம்.
  • மும்பை, புனே ஆகிய நகரங்களில் புறாக்களால் இந்தப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால்தான், புறாக்களுக்கு உண வளிப்பவர்களுக்கு அங்கே ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ்: 

  • இந்தப் பாதிப்பு ஹிஸ்டோபிளாஸ்மா காப்சுலேட்டம் என்கிற பூஞ்சையால் ஏற்படும். தொற்று ஏற்பட்டவருக்குக் காய்ச்சல், இருமல், சோர்வு, தலைவலி, குளிர் ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். பெரும்பாலும் இரண்டு வாரங் களுக்குள் நோய் கட்டுப்பட்டுவிடும். சிலருக்கு இது நீண்ட கால நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்குத் தொற்று உடல் முழுவதும் பரவி மூளை, நரம்பு மண்டலம், அட்ரீனல் சுரப்பி, சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளையும் பாதிக்கலாம்.
  • நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே, சளி, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன் சிலருக்குத் திசுப் பரிசோதனையும் தேவைப்படலாம். ஆம்போ டெரிசின் பி, இட்ராகோனசோல் ஆகிய மருந்துகள் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன.

கிரிப்டோகாக்கோசிஸ்: 

  • இது கிரிப்டோகாக்கோசிஸ் நியோஃபார் மன்ஸ் என்கிற பூஞ்சையால் (ஈஸ்ட்) ஏற்படுகிறது. இவை புறாக்களின் எச்சத்தால் மண்ணில் அதிகமாக இருக்கும். இந்தக் கிருமிகள் நுரையீரலைப் பாதிப்பதுடன் தோல், எலும்புகள், மூட்டுகள், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், புராஸ்டேட் ஆகிய உறுப்புகளையும் பாதிக்கலாம்.
  • இவர்களுக்குக் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, தலைவலி, வாந்தி, குழப்பம் ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே, சளி, ரத்த, சிறுநீர் பரிசோதனைகளுடன் சிலருக்கு மூளைத் தண்டுவடத் திரவப் பகுப்பாய்வு பரிசோதனையும் தேவைப்படலாம். ஆம்போ டெரிசின் பி, ஃபுளூகனசோல், ஃபுளூசிட்டோசின் ஆகிய மருந்துகள் இந்தப் பாதிப்புக்குப் பயன்படுகின்றன.

யாரைப் பாதிக்கும்?

  • புறாக்களால் பரவும் தொற்று அரிதாகக் கருதப்பட்டாலும் முதியவர்கள், பல்வேறு உடல் பாதிப்புகளால் உடல்நலம் குன்றியவர்கள், எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டு அதன் பிறகு உடல் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு இந்தத் தொற்றுகள் ஏற்படச் சாத்தியம் அதிகம். ஏற் கெனவே உள்ள ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நீண்ட காலச் சுவாசச் சிரம நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் இது அதிகரிக்கச் செய்யும்.

எப்படித் தடுக்கலாம்?

  • புறா ஜன்னல் வழிவராமல் தடுக்கவும், பைப் செல்லும் பகுதிகளில் கூடுகள் கட்டாமல் தடுக்கவும் வலைகளை அமைக்க வேண்டும்.
  • புறாக்கள் வெளிப்புறமுள்ள ஏ.சி. பெட்டியின் பகுதிகளில் கூடு கட்டாமல் தடுக்க வலை அல்லது கம்பிகள் அமைக்க வேண்டும்.
  • புறாக்களின் எச்சம் விழுந்த பகுதியை கிருமி நாசினியைப் பயன்படுத்தி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். எச்சத்தைச் சுத்தம் செய்கிறபோது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்; கையுறைகளையும் பயன்படுத்த வேண்டும்; உடல் நோயெதிர்ப்புத் திறன் குன்றியவர்கள் இந்த வேலைகளில் ஈடுபடக் கூடாது.
  • புறாக்கள் அல்லது அவற்றின் கழிவுகள், இறகுகள் அல்லது அவற்றின் கூண்டுகளில் உள்ள பொருள்களைத் தொட்ட பிறகு, மறக்காமல் சோப்பு போட்டுக் கைகளை நன்கு கழுவுவது தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
  • புறா வளர்ப்பவர்கள், பறவை ஆர்வலர்கள், பறவைகளைக் கண்டுகளிப்பதைப் பொழுது போக்காகக் கொண்டவர்கள், பறவைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முதியோர், உடல்நலம் குன்றியோர், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாகக் கொண்டவர்கள் ஆகியோர் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு அவர்களைப் பாதுகாக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (29–07–2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்