TNPSC Thervupettagam

புற்றுநோய்க்குக் காரணமாகும் வைட்டமின் மாத்திரை

November 20 , 2022 629 days 440 0
  • புற்றுநோய் சிகிச்சையின் விளைவுகளைத் தடுக்க உதவும் ஒரு வைட்டமின் மாத்திரையே புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவது ஓர் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 
  • அதன்படி, வைட்டமின் பி3-இன் ஒரு வடிவமான 'நிகோடினமைடு ரைபோசைட்' (Nicotinamide Riboside -NR- B3) புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாக இந்த புதிய ஆய்வு கூறுகிறது. 
  • இப்போதெல்லாம் உடல் ஆரோக்கியமாக இல்லை, மெலிவாக இருக்கிறார்கள், பலவீனமாக உள்ளார்கள், உணவு சரியாகச் சாப்பிடுவதில்லை என பல்வேறு காரணங்களுக்காக மருத்துவரிடம் செல்கின்றனர். நீங்கள் உங்களின் உடல்நிலையைச் கூறும்போது அதற்கேற்றவாறு மருத்துவரும் மருந்துகளைத் தருகிறார். அதில், உணவுக்கு மாற்றாக அல்லது உணவுடன் கூடிய வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரை செய்வார். 
  • அப்படிப்பட்ட பிரபலமான ஒரு வைட்டமின் மாத்திரை புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்ற தகவல்மூளையில் புற்றுநோய் பல இடங்களில் பரவியதை யொட்டி ஆராயப்பட்டுள்ளது.
  • மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) என்ற புற்றுநோய் பரவுதல் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மிசோரி-கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்ட  மிகவும் புதிய கண்டுபிடிப்பு. மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பும்கூட.
  • இதற்கு முந்தைய ஆய்வுகள், வைட்டமின் B3-இன் வடிவமான நிகோடினமைடு ரைபோசைட் (Nicotinamide Riboside -NR) போன்ற வைட்டமின் மாத்திரைகள் இதயம், வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பியல் ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளுடன் இணைந்திருப்பதை தெரிவித்துள்ளன. ஆனாலும் நிகோடினமைடு ரைபோசைட் உண்மையில் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று இந்த புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • நிகோடினமைடு ரைபோசைட் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஒருவருக்கு ட்ரிபிள்-நெகட்டிவ் மார்பகப் புற்றுநோய்  (Triple-Negative Breast Cancer) என்ற புற்று நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயை உடலின் வேறு இடங்களுக்கு அல்லது மூளைக்கு பரவச் செய்யலாம் என்று மிசோரி பலகலைக்கழகத்தின்  வேதியியல் இணைப் பேராசிரியரான எலினா கவுன் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. 
  • மேலும்புற்றுநோய் மூளையில் பரவினால் முடிவுகள் மிகவும் ஆபத்தானவை என்றும் பெரும்பாலும் இறப்பு ஏற்படும் என்றும் இந்த நேரத்தில் சாத்தியமான சிகிச்சை ஏதும் செய்ய இயலாது என்றும் ஆய்வாளர் கவுன் தெரிவிக்கிறார். 
  • 'சிலர் உடல் தேவையையொட்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில் வைட்டமின்கள் நேர்மறையான ஆரோக்கிய நன்மைகளை மட்டுமே கொண்டிருப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால் அவை உண்மையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் உடலில் வைட்டமின்கள் மருந்துகள்/மாத்திரைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதற்காக இந்த சோதனைகளைச் செய்தோம்' என்றும் கூறினார். 
  • பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்ட மூன்று மாதங்களில் 59 வயதான தனது தந்தை இறந்ததைத் தொடர்ந்து, புற்றுநோய் வளர்சிதை மாற்றம் அல்லது உடலில் புற்றுநோய் பரவுவதைப் பற்றி தெரிந்துகொள்ள கவுன் உந்தப்பட்டார். 
  • நிகோடினமைடு ரைபோசைட்உடல் செல்லின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும். அதிகரித்த வளர்சிதை மாற்றத்துடன் இந்த ஆற்றலை புற்றுநோய் செல்கள் உண்பதால் புற்றுநோயின் வளர்ச்சி, பரவலில் நிகோடினமைடு ரைபோசைட்டின் பங்கு என்ன என்பதை  ஆராய கவுன் விரும்பினார்.
  • ஏனெனில், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையின் பக்க விளைவுகளைத் தணிக்க நிகோடினமைடு ரைபோசைட் பயன்படுத்தப்படுகிறது. 
  • புற்றுநோய் செல்கள் மற்றும் உடலுக்கு வரும் நோயை எதிர்க்கும் டி செல்கள் என்ற ரத்த வெள்ளையணு மற்றும் ஆரோக்கியமான திசுக்களில் எவ்வளவு நிகோடினமைடு ரைபோசைட் அளவுகள் உள்ளன என்பதை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 
  • 'நிகோடினமைடு ரைபோசைட் ஏற்கனவே மக்களிடம்  பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் பயன்பாடுகளுக்காக பல மருத்துவப் பரிசோதனைகளிலும் இதன் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிகோடினமைடு ரைபோசைட் எவ்வாறு செயல்படுகிறது என்பது ஒரு கருப்புப் பெட்டி போன்ற நிலையிலே உள்ளது.
  • ஏனெனில்  இது பற்றிய முழுமையான புரிதல் இன்னும் தெளிவாகவில்லை, புரியவில்லை. எனவே, அல்ட்ராசென்சிட்டிவ் பயோலுமினசென்ட் இமேஜிங்கை(ultrasensitive bioluminescent imaging) அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய இமேஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்க இந்த நிகோடினமைடு ரைபோசைட் நிலைமை எங்களைத் தூண்டியது. மேலும் புற்றுநோய் செல்கள் ஆக்கிரமிப்பு இல்லாத இடத்தில் அந்த நேரத்தில் நிகோடினமைடு ரைபோசைட் அளவை/செயல்பாட்டை  எவ்வளவு அனுமதிக்கிறது என்பது குறித்து தெரிய வேண்டியுள்ளது. 
  • பல்வேறு வகையான உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களிடம் நிகோடினமைடு ரைபோசைட் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றின் சாத்தியமான பக்க விளைவுகளை கவனமாக ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை ஆய்வின் கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன.
  • எதிர்காலத்தில், புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் சில நோய் தடுப்பான்களின் வளர்ச்சிக்கு இவை வழிவகுக்கும்என்றும் கவுன் கூறியுள்ளார்.
  • அதேநேரத்தில் அனைத்து புற்றுநோய்களும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும் குறிப்பாக ஒவ்வொருவரின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் நிலைப்பாட்டில் இருந்து புற்றுநோய் நிலையும் அதன் செயல்பாடும் சிகிச்சை முறையும் வேறுபடும் என்றும்  பெரும்பாலும் புற்றுநோய்கள் கீமோதெரபிக்கு முன்னும் பின்னும்கூட தங்கள் வளர்சிதை மாற்றத்தை மாற்றக்கூடும் என்றும் தெரிவித்தார். 
  • பயோலுமினசென்ட் அடிப்படையிலான இந்த ஆய்வானது உடலில்  நிகோடினமைடு ரைபோசைட் ஊடுருவாத ஆக்கிரமிப்பு கண்காணிப்புக்கான மெட்டாஸ்டாசிஸ் மற்றும் என்ஏடி + வளர்சிதை மாற்றத்திற்கு (NAD+ metabolism) இடையேயான தொடர்பை வெளிப்படுத்துவதாக பயோசென்சர்ஸ் மற்றும் பயோ எலக்ட்ரானிக்ஸ் இதழில் (Journal of Biosensors and Bioelectronics) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
  • மனித உயிருக்குத் தேவையான இந்த ஐரோப்பிய ஆராய்ச்சி கவுன்சில், சுவிஸ் தேசிய அறக்கட்டளை மற்றும் என்சிசிஆர் வேதியியல் உயிரியல் அமைப்பு ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த ஆயில் ஏராளமான புற்றுநோய் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இது மனித உயிர் காப்பதற்கான முக்கியமான ஆய்வாகும்.

நன்றி: தினமணி (20 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்