TNPSC Thervupettagam

புற்றுநோய்: அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்

June 25 , 2023 567 days 382 0
  • தொற்றா நோய்களில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாகப் புற்றுநோய் உள்ளது. உலக அளவில் நிகழும் மரணங்களுக்குப் புற்றுநோயே முக்கியக் காரணம். குறிப்பாக, இந்த நூற்றாண்டில். ஒருவருக்கு 60 வயதுவரை மாரடைப்பு ஏற்படவில்லை என்றால், அதற்குப் பின்னர் அது ஏற்படும் சாத்தியம் குறைவு என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது.
  • அதேபோல், 80 வயதுக்கு மேல் வாழ்பவர்களின் மரணத்துக்கு ஏதோ ஒருவகை புற்றுநோயே காரணமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. 2020இல் மட்டும் புற்றுநோயின் காரணமாக ஒரு கோடிக்கும் மேலான மரணங்கள் உலக அளவில் நிகழ்ந்துள்ளன. அதாவது, உலக அளவில் நிகழும் மரணங்களில் ஆறில் ஒன்று புற்றுநோயால் ஏற்படுகிறது.

கட்டுப்படுத்த முடியாத பெருக்கம்

  • பொதுவாக, நம் உடலின் செல்கள் வளர்ந்த பின்னர் ’செல் பிரிதல்’ முறை மூலம் இரட்டிப்பாகி உடலுக்குத் தேவையான புதிய செல்களாக உருவாகின்றன. இந்தப் புதிய செல்கள் காலப்போக்கில் முதிர்ந்து அல்லது சிதைந்து இறந்துவிடும். அவற்றின் இடங்களில் புதிய செல்கள் உருவாகும். நம் உடலில் இவ்வாறு புதிய செல்கள் உருவாவதும் அழிவதும் இயல்பான நிகழ்வே.
  • ஆனால், புற்றுநோய் பாதிப்பில் உடலுறுப்புகளில் உள்ள சிலவகை செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து பெருகும். இது விரைவில் அருகிலுள்ள இடங்களுக்கும் பரவத் தொடங்கும். இந்தப் பரவல், அங்கிருக்கும் செல்களின் இயல்பான ‘செல் பிரிதல்’ நிகழ்வைத் தடுத்து நிறுத்தும். அதாவது, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள செல்களின் இயல்பான செல் பெருக்கம் தடுக்கப்பட்டு, அந்த இடத்தில் புற்றுநோய் செல்கள் வேகமாகப் பரவத் தொடங்கும். இவ்வாறு உடலில் செல்கள் ஏதோ ஒரு பகுதியில் அபரிமிதமாக உடைந்து, உருவாகி, பல்கிப் பெருகி, உடலின் பிற பகுதிகளுக்குக் கட்டுப்படுத்த முடியாதபடி பரவும் நிலையே புற்றுநோய்.

எங்கு ஏற்படும்?

  • நம் உடலில் புதிய செல்கள் உருவாவதும் முதிர்ந்த செல்கள் அழிவதும் ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு. சிலருக்குச் சில காரணிகளால் இந்தத் தொடர் சங்கிலி அறுந்துவிடும். அவர்களுக்கு ஒரு செல் உருவாக வேண்டிய இடத்தில் பல்லாயிரக்கணக்கான செல்கள் தோன்றி பெருகும். இவ்வாறு பெருகும் செல்கள் திசுக்கட்டிகள் (Lumps) எனப்படும். இந்தத் திசுக்கட்டிகளின் பரவும் தன்மையின் அடிப்படையில், புற்றுக்கட்டி (Malignant), தீமை விளைவிக்காத கட்டி (Benign) என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. உடலின் பிற உறுப்புகளுக்குப் புற்றுக்கட்டி பரவும். தீமை விளைவிக்காத கட்டி பிற இடங்களுக்குப் பரவாது.
  • புற்றுநோய்க் கட்டிகள் உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். வாய், மூக்கு, தொண்டை, இரைப்பை, உணவுக்குழாய், குடல், கல்லீரல், நுரையீரல், கருப்பை வாய், சினைப்பை, மூளை, ரத்தம், சருமம் என உடலின் எந்தப் பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல. மார்பகப் புற்று (Breast cancer), கருப்பை வாய்ப் புற்று (Cervical cancer), வாய்ப்புற்று (Oral cancer), மலக்குடல் ஆசனவாய்ப் புற்று (Colorectal cancer) ஆகியவை அதிகம் ஏற்படுபவை.

காரணிகள்

  • மரபுவழிக் கடத்தலே புற்றுநோய்க்கானமுதன்மைக் காரணி. இதற்கு அடுத்த படியாகப் புகையிலை, புகைபிடித்தல், மது அருந்துதல், பான் - குட்கா போன்ற போதைப்பொருள்கள், புகையிலையுடன் கூடிய வெற்றிலைப் பழக்கம் போன்றவை உள்ளன.
  • ஆஸ்பெஸ்டாஸ் கூரை, ஆர்சனிக் வேதிப்பொருள், கதிர்வீச்சு, மிதமிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் புற்றுநோய் ஏற்படலாம். ஒருமுறை கொதிக்க வைத்த எண்ணெய்யை மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்தி னாலும் புற்றுநோய் வரக்கூடும்.
  • வைரஸ் தொற்றினாலும் புற்றுநோய் உருவாகக்கூடும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய்க்கு ஹியூமன் பாபிலோமா வைரஸ் காரணம். குழந்தைகளின் பல்வேறு புற்றுநோய்களுக்கு எப்ஸ்ட்டீயின் பார் வைரஸ் காரணம்.
  • உணவுப்பொருளில் உள்ள வேதிப்பொருள்கள், மைக்ரோ வேவ் ஓவனில் தயாரிக்கப்படும் உணவு, நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள டெஃப்லான் பூச்சு, ஞெகிழி டப்பாக்கள் போன்றவற்றாலும் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. முகப்பூச்சுகள், ஹேர்டை, பவுடர்கள், சன்ஸ்கிரீன் லோஷன்கள் போன்றவையும் ஆபத்தானவையே.

அறிகுறிகள்

  • நீண்ட நாள்களாக நீடிக்கும் காய்ச்சல்
  • உடல் பலவீனம்
  • தாங்க முடியாத களைப்பு
  • உடலில் உருவாகும் கட்டி
  • காரணமின்றி எடை குறைதல்
  • தொடர் ரத்தசோகை
  • தொடர் வயிற்றுப்போக்கு
  • சிறுநீர், மலத்தில் ரத்தம் வெளியேறுதல்
  • மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுதல்
  • நீண்ட கால அஜீரணம்
  • உணவை விழுங்குவதில் சிரமம்

சிகிச்சை

  • கதிர்வீச்சு சிகிச்சை
  • கீமோதெரபி
  • இலக்கு சார்ந்த மருந்து சிகிச்சை (Targeted therapy)
  • அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்றுதல்.
  • அறுவை சிகிச்சைக்குப் பின் கீழே உள்ள சிகிச்சைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை:
  • ஹார்மோன் சிகிச்சை
  • இம்யூனோதெரபி
  • எலும்பு மஜ்ஜை அல்லது ஸ்டெம் செல் சிகிச்சை
  • கதிர்வீச்சு சிகிச்சை
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உடலிலிருந்து புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அகற்ற மேலே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம். ஒவ்வொரு புற்றுநோய் சிகிச்சைக்கும் ஆபத்துகளும் பக்க விளைவுகளும் உண்டு. சிகிச்சையைத் தொடங்கும் முன்னர் அவற்றை மருத்துவரிடமிருந்து முழுமையாகக் கேட்டு அறிந்துகொள்வது நல்லது.

என்ன செய்ய வேண்டும்?

  • தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
  • தினமும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்களைத் தவறாமல் சாப்பிடுங்கள்
  • உடல் பருமனைக் குறையுங்கள்
  • கடுமையான வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது
  • புகையிலைப் பொருள்களைத் தவிர்த்துவிடுங்கள்
  • மதுப்பழக்கத்தை நிறுத்துங்கள்
  • புற்றுநோய் ஏற்பட்ட உடனே, நம் உயிரைப் பறித்து விடுவதில்லை. அது தொடர்ந்து பல அறிகுறிகளை வெளிப் படுத்தி நம்மை எச்சரிக்கும். நாம் இந்த அறிகுறிகளை உதாசீனப்படுத்தினால் மட்டுமே, அது தீவிரமடைந்து ஆபத்தில் முடியும். உடனடி சிகிச்சையைப் பெற்றால் புற்றுநோயின் ஆபத்தை தடுத்துவிட முடியும். உயிரிழப்பையும் தடுத்துவிடலாம்.

நன்றி: தி இந்து (25 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்