TNPSC Thervupettagam

புலம்பெயர் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற...

June 30 , 2020 1661 days 787 0
  • சீனாவின் வூஹானில் தொடங்கிய கரோனா தீநுண்மியால் இன்றைக்கு சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி அடியோடு முடங்கியுள்ளது. 

  • சீனாவுக்கு அடுத்தபடியாக 137 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நம் நாட்டில், கரோனா தீநுண்மி பரவல் உச்சகட்டத்தை எட்டியிருப்பதால் நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடிச் சென்ற தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மீண்டும் கிராமப்புறங்களுக்கே கடந்த 3 மாத காலமாக படையெடுத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

  • அந்த வகையில் பொருளாதார, பொது முடக்கத்தால் இந்தியாவில் சுமார 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  

கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் 

  • இக்கட்டான இந்தச் சூழலில் பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில், புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில், "கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்' எனும் வேலை உறுதியளிப்புத் திட்டம் அல்லது கிராமப்புற பொதுப் பணித் திட்டங்களை ரூ.50,000 கோடியில் மத்திய அரசு அண்மையில் தொடங்கியுள்ளது. 

  • 25 வகையான பணிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25,000 புலம்பெயர் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  

  • இந்தத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், குடிநீர் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். 

  • விரைவில் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பிகார் மாநிலத்தின் ககரியா மாவட்டத்தை மையப்படுத்தி பிரதமர் மோடி, அண்மையில் தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். 

கூட்டுறவுச் சங்கங்கள் 

  • இது ஒருபுறமிருக்க, நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்பிய தையல்காரர்கள், பிளம்பர்கள், சமையல் கலைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையான வருவாயைப் பெறும் பொருட்டு, தாங்களாகவே கூட்டுறவுச் சங்கங்களை நிறுவலாம்.  

  • ஏனெனில், தொழில்களை அபிவிருத்தி செய்யும் நிலையில், அவர்களின் சேவை அல்லது உற்பத்திப் பொருள்களை லாபகரமான விலையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய கூட்டுறவுச் சங்கங்கள் பெரிதும் உதவும். 

  • எடுத்துக்காட்டாக, ஒரு கிராமத்தில் தையல்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தையல்சார் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவும் நிலையில், உள்ளூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் பணி ஆணைகளை ஈர்க்க முடியும்.  

  • இது போன்ற கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு உதவ எண்ணற்ற அரசு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன; இது கட்டாயமும்கூட. மேலும், கூட்டுறவுச் சங்கத்துக்குக் கடன் கொடுத்து உதவ கூட்டுறவு வங்கிகளும் ஆங்காங்கே செயல்படுகின்றன. 

  • இந்திய கூட்டுறவுச் சங்க சட்டம் 1912- இன் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தது 10 நபர்கள் இணைந்து கூட்டுறவுச் சங்கத்தை நிறுவலாம்.  

  • நகர்ப்புறங்களில் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் பருவகால தொழில்களில், அதாவது திருமணம் போன்ற விழாக்களில் சமையல் வேலை, உணவு பரிமாறுதல், மேடை அலங்காரம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட ஏராளமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். 

  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அச்சுறுத்தலால் வேலைவாய்ப்பை இழந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய இதுபோன்ற முறைசாரா தொழிலாளர்களும் சேவை சார்ந்த கூட்டுறவுச் சங்கங்களையோ அல்லது யூனியன்களையோ தொடங்கலாம். 

  • கிராமப்புறங்களில் பணி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலும், இதன் வாயிலாக நகர்ப்புறங்களில் பணியாளர் கூட்டுறவுச் சங்கம் அல்லது யூனியன் என்ற அங்கீகாரத்துடன் மீண்டும் அடியெடுத்து வைத்து முறையான ஊதியம் மட்டுமின்றி, கண்ணியமான வாழ்வுக்குத் தேவையான வசதிகளையும் கேட்டுப் பெறலாம்.  

  • தேசிய கூட்டுறவு யூனியன், பணியாளர் யூனியன் உள்ளிட்ட கூட்டமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்து கொடுக்கலாம். 

  • இந்தியாவைப் பொருத்தவரை அபரிமிதமான வளர்ச்சியைக் கூட்டுறவுச் சங்கங்கள் பெற்றுள்ளன.  

  • இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கடந்த 1946- இல் தொடங்கப்பட்ட அமுல் பால் பொருள்கள் கூட்டுறவு சங்கத்தைக் குறிப்பிடலாம். 

  • இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில், இன்றைக்கு குஜராத்தின் 18,700 கிராமங்களிலிருந்து 35 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  

  • ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 கோடியே 30 லிட்டர் பால், நேரடியாகவே சங்க உறுப்பினர்களிடமிருந்து, அதாவது உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 

  • இதன் விளைவாக அமுல் பால் - பால் பொருள்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு கடந்த மார்ச் 31 நிலவரப்படி, 2019 - 20- இல் ரூ.38,550 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் சுமார் 80% தொகை, கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்குப் பால் கொள்முதல் விலையாகவும், "போனஸ்' என்ற பெயரிலும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. 

  • இன்றைக்கு நாட்டில் வறுமையை ஒழிக்க "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' போன்ற எண்ணற்ற திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தினாலும், இது குறுகிய கால வலி நிவாரணியாகத்தான் இருக்குமே தவிர, நீண்ட காலத்துக்கு உகந்தது அல்ல.  

  • எனவே, நகர்ப்புற தேவைகளை கிராமப்புறங்களிலிருந்து பூர்த்தி செய்யவும், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று போன்ற பேரிடர் காலங்களில் நகர்ப்புறங்களில் இட நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கூட்டுறவுச் சங்கம் போன்ற பொருளாதார முறை மிகவும் அவசியம். 

  • இதன்மூலம் தொழிலாளர்களின் சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்யப்படுவது மட்டுமின்றி, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் (ஜிடிபி) கணிசமான பங்களிப்பை நல்க முடியும்.  

  • மேலும், யூனியன் என்ற பெயரில் தொழிலாளர்கள் சட்ட அங்கீகாரத்துடன் இணைந்து செயல்படும் நிலையில், சுரண்டல் முறைகளிலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள முடியும். 

நன்றி: தினமணி (30-06-2020) 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்