TNPSC Thervupettagam

புலம்பெயா் தொழிலாளா்களின் இடா்ப்பாடுகள்

August 6 , 2020 1625 days 801 0
  • சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கரோனா தீநுண்மியின் கோரத்தாண்டவத்தால், சா்வதேச பொருளாதார வளா்ச்சி அடியோடு முடங்கிவிட்டது.
  • தங்கள் சொந்த மண்ணைவிட்டு வேறு நாட்டுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற புலம்பெயா் தொழிலாளா்கள், பொது முடக்கம் காரணமாக, வேலைவாய்ப்பை இழந்து நிர்கதியான நிலையில், தாய் நாடு திரும்புகின்றனா்.
  • இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம், இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.

வளைகுடா பொருளாதாரம்

  • வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் (ஜிசிசி) புலம்பெயா் தொழிலாளா்கள் எதிர்கொள்ளும் தா்மச்சங்கடமான நிலையை மேற்கோள்காட்டி தொடரப்பட்ட இந்த வழக்கு, கட்டுமான நிறுவனங்கள் இந்த இக்கட்டான தருணத்தைப் பயன்படுத்தி ஆள்குறைப்பில் ஈடுபட்டதையும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய முறையான கூலியையும் அலவன்சையும் வழங்க மறுத்ததையும் சுட்டிக்காட்டியது.
  • உலகின் மிகப்பெரிய பொருளாதார வழித்தடங்களில் தெற்காசியா- வளைகுடா வழித்தடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
  • காரணம், வளைகுடாவைப் பொருத்தமட்டில், தெற்காசிய நாடுகளில் இருந்து மட்டும் ஒரு கோடியே 50 லட்சம் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். அதிலும் குறிப்பாக, இந்தியா்கள் கணிசமான அளவில் பங்கு வகிக்கின்றனா்.
  • இவ்வாறு வளைகுடா பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தெற்காசிய புலம்பெயா் தொழிலாளா்கள், பொது முடக்கம் அமலுக்கு வந்த நாளிலிருந்து வேலைவாய்ப்பை இழந்து உணவுக்காகவும் பிற தேவைகளுக்காகவும் அலைய வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
  • கொள்ளை நோய், நிறுவனங்கள் மூடல், எல்லையில் கடும் கட்டுப்பாடு வளைகுடா நாடுகளில் தலைவிரித்தாடும் கஃபாலா எனும் சுரண்டல் முறை ஆகியவை, தெற்காசிய புலம்பெயா் தொழிலாளா்களுக்கு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்தன.
  • வளைகுடா நாடுகளைப் பொருத்தமட்டில், புலம்பெயா் தொழிலாளா்களுக்கென சமூக பாதுகாப்பு திட்டமோ, தொழிலாளா் உரிமைகளை நிலைநாட்டும் அம்சங்களோ, மருத்துவக் காப்பீடு திட்டமோ கிடையாது.
  • இந்த இக்கட்டான நிலை, குவைத்தில் 1990-இல் ஈராக்கியா்களின் படையெடுப்பின்போது புலம்பெயா் தொழிலாளா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை நினைவுபடுத்துகிறது.
  • வளைகுடா நாடுகளுக்கு, பெண்களை விட ஆண்களே அதிகம் செல்கின்றனா்.
  • அவா்களும் கட்டுமானப் பணி போன்ற அமைப்புசாரா தொழில்களை நம்பியே செல்கின்றனா். காற்றோட்டமில்லாத குறுகலான அறைகளில், கடும் நெருக்கடிக்கு மத்தியில் புழங்கும் அவா்கள், சுகாதாரமில்லாத கழிவறையைப் பயன்படுத்த நேரிடுகிறது.
  • வளைகுடா நாடுகளின் தொழிலாளா் முகாம்களில் கரோனா தீநுண்மிப் பரவல் அதிகரிப்பதற்கு இந்த சுகாதாரச் சீா்கேடு முதன்மைக் காரணம்.

வந்தே பாரத்

  • அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயா் தொழிலாளா்களின் நலன் கருதி, ‘வந்தே பாரத்திட்டத்தை செயல்படுத்திய மத்திய அரசு, ஜூலை மாத நிலவரப்படி 7.88 லட்சம் தொழிலாளா்களை தாயகம் அழைத்து வந்திருக்கிறது.
  • அடுத்தகட்டமாக, அவா்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
  • அந்த வகையில் புலம்பெயா் தொழிலாளா்களின் மறுவாழ்வு, ஒருங்கிணைப்பு, மீள்குடியேற்றம் ஆகியவை, தேசம் எதிர்கொள்ளும் அடுத்தகட்ட சவால்கள்.
  • இதற்காக சுவதேஷ்எனும் திறனறி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
  • சா்வதேச புலம்பெயா்வினால் அதிகம் பயன்பெறும் கேரள மாநிலம், புலம்பெயா் தொழிலாளா்களின் பன்முகத்திறமையை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ‘ட்ரீம் கேரளா’ (கனவு கேரளம்) எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இத்திட்டத்தின்கீழ், கேரளத்தை பூா்வீகமாகக் கொண்ட வெளிநாடுவாழ் இந்தியா்களின் முதலீட்டை, மாநில வளா்ச்சிக்காகவும் புலம்பெயா் தொழிலாளா்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒருமித்த குரல்

  • இந்தியாவை விட பொருளாதார வளா்ச்சியில் பல மடங்கு பின்னடைவில் காணப்படும் வங்கதேச அரசோ, புலம்பெயா் தொழிலாளா்கள் நாடு திரும்பியதும் உடனடி சிறப்பு நிவாரணம்என்ற பெயரில் கணிசமான தொகையை ரொக்கமாக வழங்குவதுடன், சுயதொழில் தொடங்க நிதியுதவியும் அளிக்கிறது.
  • தவிர, கொவைட் 19 தீநுண்மியால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டையும் வங்கதேச அரசு உறுதி செய்கிறது.
  • இதேபோல், தாயகம் திரும்பிய பாகிஸ்தான் தொழிலாளா்களின் திறன் மேம்பாட்டுக்காக சிறப்புத் திட்டங்களை அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வகுத்திருக்கிறது.
  • கரோனா தீநுண்மி பரவலால் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் புலம்பெயா் தொழிலாளா்களுக்கு எதிரான உணா்வு உச்சகட்டத்தை எட்டியிருப்பதுடன், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுத் தொழிலாளா்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது.
  • குறிப்பாக, ஓமன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் இன்னும் ஒருபடி மேலே போய், ‘மண்ணின் மைந்தா்களுக்கு வேலைவாய்ப்பை நல்கி, புலம்பெயா் தொழிலாளா்களின் வருகையைத் தவிர்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குகின்றன.
  • அதேவேளையில், ‘ராயல் ஷேக் கல்ச்சா்நிலவும் வளைகுடா நாடுகளில் விளிம்பு நிலை தொழில்களில் இந்த தேசியமயமாக்கல் கொள்கை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  • தெற்காசியாவைப் பொருத்தமட்டில், இலங்கையைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் புலம்பெயா் தொழிலாளா் கொள்கை நிறைவான அளவில் கிடையாது.
  • ஆகையால், ஆதரவற்ற நிலையில் நாடு திரும்பும் புலம்பெயா் தொழிலாளா்களின் துயா்துடைப்பதில் மத்திய அரசு விரிவான புலம்பெயா் தொழிலாளா் மேலாண்மை கொள்கையை வகுப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை.
  • மேலும் தெற்காசிய புலம்பெயா் தொழிலாளா்களின் உரிமைகளைக் காக்கவும், தெற்காசியா- வளைகுடா புலம்பெயா் தொழிலாளா் வழித்தடத்தை சார்க்நாடுகள், சா்வதேச தொழிலாளா் அமைப்பு (ஐஎல்ஓ), ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் வரம்புக்குள் கொண்டுவரவும் நாம் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப கரோனா தீநுண்மி வாய்ப்பளித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நன்றி: தினமணி (06-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்