- பழந்தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் எனும் முப்பெரும் பேரரசுகளாகக் காண்பதே மரபு. ஆனால், தொண்டை நாட்டையும் கொங்கு நாட்டையும் உள்ளடக்கிய ஐந்நிலமாகவே பழந்தமிழ்நாடு இருந்தது என்கிறார் புலவர் செ.இராசு. தொண்டை நாடு, பல்லவப் பேரரசின் கீழ் இருந்தது. கொங்குநாட்டில் அப்படி எந்தப் பேரரசும் உருவாகவில்லை. எனினும் நில அமைப்பில், நிர்வாக அமைப்பில், பண்பாட்டுத் தனித்துவத்தில் கொங்கு தனிநாடாகச் சிறப்புற்று விளங்கியது என்பதை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தார்.
- தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி எனப் பல்வகைப்பட்ட வரலாற்று ஆதாரங்களையும் ஆவணங்
- களையும் ஆய்வுசெய்யும் திறன் கொண்ட, மிகவும் அரிதான வரலாற்றாசிரியர் செ.இராசு. எனவேதான் கொங்குநாட்டின் விரிவான காலநிரல் ஒன்றை அவரால் தனிநபராகவே எழுத முடிந்தது.
- புலவர் செ.இராசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் - கல்வெட்டியல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவரது ஆய்வுப் பணிகள் அவரது மாணவப் பருவத்திலிருந்தே தொடங்கிவிட்டன. அப்பணிகளை ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்துகொண்டிருந்தார்.
- பள்ளி நாள்களில் மகாவித்துவான் வே.ரா.தெய்வசிகா மணியிடம் தமிழ் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றவர் செ.இராசு. கொங்குநாட்டுப் புலவரென அழைக்கப்படும் தெய்வ சிகாமணியோடு சேர்ந்து ஓலைச்சுவடி தேடப்போன அவரது மாணவர் இராசுவையும் ஆய்வுலகம் தன்வசமாக்கிக் கொண்டது.
- திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று ஈரோட்டில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றிய
- இராசுவை தமிழ்ப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆக்கியவர் வ.அய்.சுப்பிரமணியம். காவிரிக் கரையில் அமைந்
- திருந்த கொடுமணல் நாகரிகத்தின் அகழாய்வுப் பணிகளில் செ.இராசுவின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் அவரது ஆய்வெல்லை கொங்குப் பகுதியைத் தாண்டி விரிந்து பரவியது. தஞ்சை மராட்டியர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள், புதுக்கோட்டை தொண்டைமான்கள், சிவகங்கை மன்னர்கள், பாளையக்காரர்கள் பற்றிய கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் அப்போது தொகுத்து வெளியிட்டார். எனினும் கொங்குப் பகுதியே இராசுவின் முக்கிய ஆய்வுக்களம். அதிலும் குறிப்பாக, 'கொங்கும் சமணமும்' (2005) என்கிற நூல் அவரது ஆய்வுகளில் மிக முக்கியமானது. இந்நூலை ஒரு தவமாகவும் வேள்வியாகவும் கருதி 25 ஆண்டுகள் உழைத்து உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
- பொ.ஆ.மு. (கி.மு.) 3ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் கர்நாடகத்தின் வழியாகக் கொங்கு நாட்டில் சமணம் பரவியது. பின்பு, பாண்டிய நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது சமணர்கள் கொங்குநாட்டிலேயே தஞ்சமடைந்தனர். எனவே, கொங்குப் பகுதிக்கும் சமணத்துக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. அப்பகுதியில்
- உள்ள சமணர் குகைகள், கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், சமணர்களின் தமிழ்ப் பணிகள் என மிக விரிவான ஆராய்ச்சி நூலாக ‘கொங்கும் சமணமும்’ அமைந்திருந்தது.
- கொங்கு மண்ணுக்கு வளம் சேர்க்கும் முக்கியமான பாசனத் திட்டங்களில் ஒன்று காலிங்கராயன் கால்வாய். பவானியாறு காவிரியுடன் கலக்கும் இடத்தில் 56½ மைல் நீளத்துக்கு வெட்டப்பட்ட கால்வாய் அது. 13ஆம் நூற்றாண்டில் 12 ஆண்டுகள் முயன்று அணையும் கால்வாயும் கட்டப்பட்டன. பாண்டியரின் அமைச்சராக இருந்த லிங்கையன் அதைக் கட்டிமுடித்தார். 'காலிங்கராயன் கால்வாய்' என்கிற அந்த நூலை உருவாக்கவும் செ.இராசு பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார்.
- புலவர் செ.இராசு எழுதிய ஈரோடு மாவட்ட வரலாறு (2007), ஆங்கிலேயர் காலத்தில் வெளிவந்த மாவட்ட விவரச் சுவடிகளுக்கு இணையாக எழுதப்பட்டது. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின்கீழ் இயங்கும் விவரச் சுவடித் துறை செய்ய வேண்டிய பணியைத் தனியொரு நபராக அவர் செய்திருக்கிறார். 'கொங்கு ஆய்வு மையம்' என்கிற பெயரில் பலரின் பொருளுதவி பெற்று அவர் நூல்களைப் பதிப்பித்தார். அரசு செய்ய வேண்டிய பணிகளை, செ.இராசு தன் முயற்சியில் எந்தப் பொருளாதார ஆதரவுமின்றிச் செய்தார் என்பது அவருக்கு பெருமை.
- பேராசிரியர்கள் உரிய வயது வந்ததும் பணி நிறைவுற்று ஓய்வெடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆய்வாளர்களுக்கோ ஓய்வு என்பதே இல்லை. வயதும் தடையல்ல. புலவர் செ.இராசு அதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்.
நன்றி: தி இந்து (13 – 08 – 2023)