TNPSC Thervupettagam

புலிகளும் சோளகர்களும்

February 17 , 2024 341 days 232 0
  • சோளகர்கள் உயர்ந்த மரங்களில் உள்ள தேனடைகளிலிருந்து தேன் சேகரிக்கும்போது, கொஞ்சம் தேனைத் தரையை ஒட்டியுள்ள கிளைகளில் வைத்துவிட்டு வருவது வழக்கம். புலிகளால் மரம் ஏற இயலாது என்பதால், அவர்கள் புலிகளுக்கு எட்டும்விதத்தில் இப்படித் தேன் வைக்கின்றனர். காட்டில் அவற்றுக்கு உள்ள உரிமைகளில் எதுவும் விட்டுப் போய்விடக் கூடாது என்பது சோளகர்கள் மனத்தில் ஆழப் பதிந்துள்ளது.
  • சோளகர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பிலிகிரி குன்றுகளுக்கு அருகில் உள்ள காட்டில் வசிக்கும் பழங்குடிகள். இவர்களைப் போலப் பல தலைமுறைகளாகக் காட்டில் வாழ்ந்துவரும் சமூகங்கள்தாம் புலிகளுக்கு அச்சுறுத்தலாக அரசு நிர்வாகங்களால் கருதப்படுகின்றனர். காடுவாழ் மக்கள் பலரை வெளியேற்றி விட்டுத்தான் புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சரிந்த புலிகளின் எண்ணிக்கை

  • இந்தியக் காடுகளில் புலிகளின் வாழ்க்கை, ஒருகாலத்தில் வருந்தத் தக்க நிலையில்தான் இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் 40,000 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 1970களில் 1900 என்கிற அளவுக்குக் குறைந்தது.
  • அதையடுத்து மத்திய அரசால் உருவாக்கப்பட்ட புலி பாதுகாப்புப் படை-1 (Tiger Task Force), காட்டில் மனிதக் குறுக்கீடுகளே இல்லாத பகுதிகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு சில பரிந்துரைகளை அளித்தது. இந்த அணுகுமுறை, நடைமுறையில் காடுகளில் காலங்காலமாக வசித்துவந்த மக்களை வெளி யேற்றினால் மட்டுமே புலிகளைக் காப்பாற்ற முடியும் என்கிற முடிவுக்கு அரசு நிர்வாகத்தைத் தள்ளுவதாக இருந்தது.

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

  • புலி பாதுகாப்புப் படையின் பரிந்துரையின்பேரில், கானுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act) 1972இல் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில்புலிகளின் மைய வாழிடங்களாகச் (Critical Tiger Habitat) சில இடங்கள் வரையறுக்கப்பட்டன. புலிகள் காப்பகங்கள் தோன்றின. இந்தியக் கானுயிர் நிர்வாகத்தில் பெருமிதம் கொள்ளத்தக்க நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும்புலிகள் பாதுகாப்புத் திட்டம்’(Project Tiger) பிறந்த கதை இதுதான்.
  • இங்கெல்லாம் ஏற்கெனவே புலிகளோடு ஒத்திசைவாக வாழ்ந்துவந்த சோளகர் போன்ற பழங்குடிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். செறிவான காடுகளை அடுத்து, காடும் காடு அல்லாததுமான பகுதி இடைநிலை மண்டலமாக (Buffer Zone) அறிவிக்கப்பட்டது.
  • அங்கு சில தேவைகளுக்காகப் புழங்கிக்கொள்ளவும் அருகிலுள்ள சமவெளிப் பகுதிகளில் வசிக்கவும் காடுவாழ் மக்கள் அனுமதிக்கப் பட்டனர். காடுகளில் உள்ள நீரையும் காற்றையும் மட்டுமே துய்த்துப் பழகியஅம்மக்கள் இந்த உத்தரவால் திணறிப் போயினர்.

வெளியேற்றப்பட்ட குடும்பங்கள்

  • 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 18,493 குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய வாழிடங்களிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். மறுகுடியேற்றத்துக்கு உள்ளாகும் மக்களின் உரிமைகள் குறித்துக் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் பேசினாலும், அவற்றை அமல்படுத்தும் வகையில் உறுதிவாய்ந்த அடித்தளம் அதில் இல்லை என்பது பழங்குடி ஆர்வலர்கள் பலரது விமர்சனமாக இருந்தது. இதற்காகக் காடுவாழ் சமூகத்தினர், 2006 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
  • 2006இல் காட்டுயிர்ப் பாதுகாப்புச்சட்டம் திருத்தப்பட்டது. மறுகுடியேற்றம்செய்யப்படும் சூழலில் அவர்களுக்கு உள்ள உரிமைகள், நிவாரணங்கள் குறித்து அரசு அதிகாரிகள் கொஞ்சமாவது பொருள்படுத்த வேண்டிய நிலை அதனால் உருவானது. காட்டிலிருந்து இடம்பெயர மக்களின் ஒப்புதல் தேவை என்பதை இத்திருத்தம் அழுத்தமாகத் தெரிவித்தது.
  • எனினும், புலிகளைப் பாதுகாக்கும் தீவிரத்தில் மக்களைஅலைக்கழிக்கும் அரசு நிர்வாகங்களின் போக்கு பெரிதாக மாறவில்லை. ஒருபக்கம் புலிகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதி பன்மடங்கு அதிகரித்தவண்ணம் இருந்தது. ஆனால், மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்கள், தங்கள் மறுவாழ்வுக்காகப் பெறும் நிவாரணத் தொகை சொற்பமானதாகவே இருந்தது.

சோளகர்களின் சட்டப் போராட்டம்

  • அவநம்பிக்கை மிகுந்த சூழலில்,சோளகர்கள் நடத்திய சட்டப் போராட்டம், கானுயிர் நிர்வாக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. 2006இல் இடைநிலை மண்டலங்களுக்குள் சென்று தேன், கிழங்கு முதலானவை சேகரிக்கச் சோளகர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். சோளகர்கள் இதை எதிர்த்து 2008இல் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் சோளகர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியதுடன், ஏறக்குறைய 1,200 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உத்தரவிட்டு, காட்டில் அவர்களது உரிமையை நிலைநாட்டியது.
  • இம்மக்கள் மீண்டும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2011இல் பிலிகிரி குன்று அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதில் சோளகர்களின் வாழிடமும் இருந்தது. மறுகுடியேற்றம் செய்யப்பட அவர்களது ஒப்புதல் பெறப்படவில்லை. முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவும் இல்லை. சோளகர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
  • தாங்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகளை, ’சோளகர்கள் அபிவிருத்தி சங்கம்என்கிற பெயரில் ஒன்றிணைத்து, தங்களது உரிமைகளை வலியுறுத்திப் பரப்புரை செய்தனர். நீதிமன்றத் தீர்ப்பு, சோளகர்களின் பாரம்பரிய வாழ்விடம், விளைபொருள்களைச் சேகரித்தல், காட்டினுள் செல்லுதல், மீன் பிடித்தல், கால்நடைகளை மேய்த்தல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அவர்களுக்குத் திரும்ப அளித்தது.
  • சட்டம் காடுவாழ் மக்களின் உரிமைகளை அவ்வப்போது வலியுறுத்தி வந்தாலும், அரசு நிர்வாகங்கள் பிடித்திருக்கும் தராசு புலிகள் பக்கமே அதிகம் சாய்கிறது. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஐம்பதாம் ஆண்டைக் கடந்துவிட்டோம். தற்போது இந்தியா, 55 புலிகள் காப்பகங்களைக் கொண்டுள்ளது.
  • தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை உள்பட புலிகளுக்கென 5 காப்பகங்கள் உள்ளன. உலகில் உள்ள புலிகளில் 75 விழுக்காடு இன்று இந்தியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பெருமைக்குரிய மாற்றமே. காடுவாழ் சமூகத்தினரின் உரிமைகளைப் பறிக்காமல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடர வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்