TNPSC Thervupettagam

புலிவால் பிடித்த கதை

November 9 , 2023 429 days 228 0
  • மகாராஷ்டிரத்தில் முன்னேறிய வகுப்பினராகக் கருதப்படும் மராத்தா சமூகத்தினர் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடத்திவரும் போராட்டம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.
  • அந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 32 சதவீதம் உள்ள மராத்தா சமூகத்தினர் கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கோரி கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். இவர்களுக்கு மாநிலத்தின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றன.
  • மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசால் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் (2014), இயற்றப்பட்ட சட்டங்கள் (2014, 2018) மும்பை உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் (2014, 2021) ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பான சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
  • மகாராஷ்டிரத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும், கரும்பு அதிகம் விளைவதால் மேற்கு மாவட்டங்களும் ஓரளவு செழிப்பாக உள்ளன. இவற்றுடன் ஒப்பிடும்போது மராத்வாடா பிராந்தியம் சற்று பின்தங்கியே உள்ளது. உதாரணத்துக்கு 2021-22-இல் மேற்கு மாவட்டங்களின் சராசரி மொத்த உற்பத்தி ரூ.18.8 லட்சம் கோடி என்றால், மராத்வாடா பிராந்திய மாவட்டங்களின் சராசரி மொத்த உற்பத்தி ரூ.3.5 லட்சம் கோடி மட்டுமே ஆகும்.
  • மராத்வாடா பிராந்தியத்தில் அதிகமாக வசிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜரங்கே பாட்டீல் என்பவர் ஜால்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அந்தர்வாலி சராடியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
  • மராத்வாடாவில் உள்ள மராத்தாக்களுக்கு குன்பி சமூக சான்றிதழ் வழங்குவது தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்ததையடுத்து மனோஜ் ஜரங்கே பாட்டீல் உண்ணாவிரதத்தை செப்டம்பர் 14-ஆம் தேதி முடித்துக் கொண்டார்.
  • ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அவர் அக்டோபர் 25-ஆம் தேதி உண்ணாவிரதத்தை மீண்டும் தொடங்கினார். இந்த கொதிப்பான சூழலில், மனோஜ் ஜரங்கேயை விமர்சித்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கி பேசியதாகக் கூறப்படும் காணொலி சமூக ஊடகங்களில் வெளியானது.
  • இதையடுத்து பீட் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வன்முறை வெடித்தது. சோலங்கி வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ சந்தீப் க்ஷீர்சாகரின் வீடு, அலுவலகம், முன்னாள் மாநில அமைச்சர் ஜெய்தத் க்ஷீர்சாகரின் வீடு, நகராட்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கும் தீ வைத்தனர்.
  • போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டினார். அதில், தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒதுக்கீட்டை மராத்தா சமூகத்தினரும் பெறும் வகையில் அந்த வகுப்பில் இடம்பெற்றுள்ள குன்பி சமூக ஜாதி சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
  • இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நவம்பர் 2-ஆம் தேதி வாபஸ் பெற்ற மனோஜ் ஜரங்கே, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
  • மாநில, மத்திய பட்டியல்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடம்பெற்றுள்ள குன்பி சமூகத்தினர் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்றுள்ளனர். தங்கள் முன்னோர்கள் குன்பி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணங்களை வைத்திருக்கும் மராத்தாக்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மனோஜ் ஜரங்கே வலியுறுத்தி உள்ளார்.
  • நிஜாம் ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத் மாகாணத்தின் ஒரு பகுதியாக மராத்வாடா பிராந்தியம் இருந்தபோது மராத்தாக்கள் குன்பி சமூகத்தினராக வகைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த ஜாதி சான்றிதழுக்கான நிஜாம் கால ஆவணங்களை தெலங்கானா அரசிடம் கேட்டுப் பெற வேண்டியுள்ளது. அங்கு நவம்பர் 30-ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைக்கு இந்த ஆவணங்களைப் பெறுவது சாத்தியமில்லை.
  • ஒருவேளை ஆவணங்கள் கிடைத்து, மராத்தாக்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அதை இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஏற்கப் போவதில்லை. இப்போது கிடைத்து வரும் இடஒதுக்கீட்டில் அவர்களது பங்கு குறைந்துவிடும் என்பதால் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • இதுபோல நாடு முழுவதும் பல்வேறு சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை அவ்வப்போது முன்னெடுக்கின்றனர். அரசியல் கட்சியினரும் அந்த சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.
  • இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற நிபந்தனையால் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். பல ஆண்டுகள் போராடும் மக்கள் பொறுமை இழந்தால் வன்முறையாக மாறும் என்பது கட்சிகளுக்குத் தெரியாததல்ல.
  • இதற்கு முன் இல்லாத வகையில், பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளிவிவரங்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதனால், பெரும்பாலான கட்சிகள் தங்கள் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது முள் மீது கிடக்கும் துணி போன்றது. சரியாக கையாளவில்லை என்றால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.

நன்றி: தினமணி (09 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்