புலி வண்டு நாள்!
- புலி, யானைகளுக்குச் சிறப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இப்படிப் பரவலாக அறியப்பட்ட உயிரினங்களுக்கு நாள்கள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம், அவற்றைக் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவே. அதுபோல் அதிகம் அறியப்படாத பொறிவண்டு வகைகளில் ஒன்று புலி வண்டு. இது மற்ற பூச்சிகளைப் பிடித்துண்ணும் வண்ணமயமான இரைகொல்லிப் பூச்சி.
- இந்த வண்டு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நவ. 11 அன்று உலக புலி வண்டு நாள் கொண்டாடப்பட்டது. புகழ்பெற்ற புலி வண்டு ஆராய்ச்சியாளர் டேவிட் பியர்சனின் பிறந்த நாளே புலி வண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் இணையவழியாகப் பங்கேற்ற டேவிட் பியர்சன், புலி வண்டுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
- உலகிலேயே அதிகப் புலி வண்டு வகைகளைக் (241) கொண்ட மூன்றாவது நாடு இந்தியா. இதில் 122 வகைகள் இந்தியாவில் மட்டுமே வாழ்பவை. இவற்றில் 46 சதவீதம் அழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தோட்டப்பயிர்கள், கனிமச் சுரங்கம் தோண்டுதல், சுற்றுலா, நகரமயமாக்கம் போன்றவையே இவற்றின் அழிவுக்குக் காரணங்கள்.
- நிகழ்வில், ராஜபாளையத்தை ROAR அமைப்பு ஐந்து இந்தியப் புலி வண்டுகளின் படங்கள் பொறித்த ஆடையில் குத்திக்கொள்ளும் முத்திரைகளை வெளியிட்டது. தெற்காசிய முதுகெலும்பற்ற உயிரினங்களின் சிறப்புக் குழு, ஸூ அவுட்ரீச் அமைப்பு, சஞ்சய் மோளூர் ஆகியோரால் இந்த நிகழ்வு கோவையில் ஒருங்கிணைக்கப்பட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 11 – 2024)