TNPSC Thervupettagam

புல்வெளியின் புலி பூனைப்பருந்து

September 23 , 2023 462 days 295 0
  • வேட்டையாடி உண்ணும் பருந்து வகையைச் சேர்ந்தவை பூனைப்பருந்துகள். ஆந்தை போன்ற வட்ட முகவெட்டுடன், பொதுவாக வெளிறிய சாம்பல் நிறம் அல்லது பழுப்பு வண்ணத்தில் நீண்ட கால்கள், நீண்ட இறக்கைகளைக் கொண்டவை. பூனையின் கண்களை ஒத்த தோற்றத்தைப் பெற்றிருப்பதாலும், சத்தமின்றி இரையைப் பிடிப்பதாலும் பூனைப்பருந்து என்கிற பெயர் வந்திருக்கலாம்.
  • நடுத்தர அளவிலான இவை தன்னைவிட அளவில் சிறிய பறவைகளைத் தாழப் பறந்து வேட்டையாடும். குறைந்த ஒலியைக்கூட துல்லியமாக கேட்கும் திறனும், சத்தமின்றி மெதுவாகச் சிறகடிக்கும் பண்பும் இரையை எதிர்பாராத நேரத்தில் தாக்கிப் பிடிக்க இவற்றுக்குப் பயன்படுகின்றன.
  • இவை கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் வாழ்பவை. அங்கு நிலவும் தொடர் பனி, குறைந்த பகல் பொழுது, உணவுப் பற்றாக்குறை காரணமாக 3000 முதல் 5000 கிலோமீட்டா் தூரம் வரை பயணித்து இந்தியாவிற்கு வலசை வருகின்றன. குறிப்பாக தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழைக்கு முன்பு, அதாவது செப்டம்பர் மாத இறுதியில் வரத் தொடங்குகின்றன. இங்கு நிலவும் காலநிலை, வாழிடச்சூழல் ஏதுவாக இருப்பதோடு, அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியடைய புல்வெளி, சதுப்பு நிலப்பரப்புகள் காரணமாக இருக்கின்றன.
  • மார்ச் மாத இறுதி வரை தங்கியிருந்து, இனப்பெருக்கத்திற்காக, தாம் பிறந்த நாட்டிற்கே திரும்பச் செல்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் பூனைப்பருந்தின் வலசைப்பாதையைப் பற்றி அசோகா சூழலியல் - சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் (ATREE) சார்ந்த மூத்த அறிவியலாளர்தி.
  • கணேஷ் தலைமையில் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக (1985- 2015) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளில் இருந்து பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில்கூட பூனைப்பருந்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவருகிறது எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டுக்கு வருபவை

  • உலகில் மொத்தம் 16 வகை பூனைப் பருந்துகள் உள்ளன. அவற்றில் இந்தியாவிற்கு ஆறு வகையான பூனைப்பருந்துகள் வலசை வருகின்றன. அவற்றில் ஐந்து வகை தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இரண்டு வகையான சதுப்புநிலப் பூனைப்பருந்துகள் (Western Marsh Harrier, Eastern Marsh Harrier) நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளிலும், வெள்ளை பூனைப்பருந்து (Pallid Harrier), கறுப்பு வெள்ளை பூனைப்பருந்து (Pied Harrier), சாம்பல் பூனைப்பருந்து (Montagu’s Harrier) ஆகியவை புல்வெளிகளிலும் காணப்படும்.
  • சதுப்புநிலப் பூனைப்பருந்தானது மீன்கள், நீர்நிலவாழ்விகள், பூச்சிகள், ஊர்வன, சிறிய பாலூட்டிகளை முதன்மையாக உண்ணும். சில வேளை வாத்து போன்ற நீர்வாழ் பறவைகளையும் வேட்டையாடும். மிகவும் வேகமாகப் பறக்கும் திறன் கொண்ட வெள்ளைப் பூனைப்பருந்து பெரும்பாலும் சிறிய பூச்சிகள், பறவைகள், ஊர்வன போன்றவற்றை உண்ணும். கறுப்பு வெள்ளைப் பூனைப்பருந்தானது பல்லிகள், நீர்நிலவாழ்விகள், சிறிய பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். மெதுவாக நிலத்தை ஒட்டிப் பறக்கும் திறன் வாய்ந்த சாம்பல் பூனைப்பருந்து முதன்மையாக வெட்டுக்கிளி, குழிநாரிப் பூச்சிகளையும், கூடுதலாகச் சிறிய பறவைகள், ஊர்வன போன்றவற்றையும் உண்ணும்.

புல்வெளிகளின் முக்கியத்துவம்

  • வருமானம் ஈட்ட முடியாத, பயிர்கள் விளைவிக்க முடியாத நிலங்களாகக் கருதி ஆங்கிலேயா்களால் Waste lands என்று வரையறுக்கப்பட்ட புறம்போக்கு நிலம், பொட்டல் காடு, தாிசு நிலம், வானம் பார்த்த பூமி என்று பல்வேறு பெயா்களால் அழைக்கப்படும் வறண்ட புல்வெளிக் காடுகளை (Dry grassland) நம்பியே பூனைப்பருந்துகள் வலசைவருகின்றன.
  • இந்தப் புல்வெளிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது நாம் பலரும் அறிந்திராத ஒன்று. பூனைப்பருந்துகளைத் தவிர இத்தகைய சமவெளிக் காடுகள், குள்ளநாரி, முள்ளெலி, வெளிமான் போன்ற உயிரினங்களின் முதன்மையான வாழிடம். தமிழ்நாட்டில் தற்போது முற்றிலுமாக அற்றுப்போன கானமயிலின் வாழிடமும் இது போன்ற பரந்த புல்வெளிகள்தாம்.
  • இந்நிலப்பரப்பிற்கே உரித்தான, அழிந்துவரும் நிலையில் உள்ள நீர்பிரம்மி வகை தாவரங்களான Lindernia minima போன்ற எண்ணிலடங்கா தாவரங்களையும் இவை கொண்டுள்ளன. மழைக்காலத்தில் தாவரங்கள் நிறைந்து பச்சைப்பசேலென்றும், கோடைக்காலத்தில் வறண்டு மஞ்சள் நிறத்திலும் காணப்படும் இப்புல்வெளிகளே வளிமண்டலத்திலுள்ள காியமில வாயுவை உள்வாங்கி நிலைப்படுத்துதலில் பசுமைமாறா அடா் காடுகளைவிடப் பெரும் பங்கு வகிக்கின்றன.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/23/16954321202006.jpg

ஓய்வெடுத்து கொண்டிருக்கும் சாம்பல் பூனைப்பருந்து

சூழலியல் சேவை

  • இவ்வாறு பல்வேறு உணவு ஆதாரங்களைக் கொண்ட வறண்ட புல்வெளிகளில் இருந்து இரையைப் பெறும் பூனைப்பருந்து அதற்கு நன்மையாற்றும் விதமாக, இரண்டாம் நிலை விதைப் பரப்புதலில் (Secondary seed dispersal) ஈடுபடுகிறது. பூனைப்பருந்தின் இரைப்பையில், அது வேட்டையாடி உண்ட சிறிய பறவைகள் உட்கொண்ட தானிய விதைகள் சொரிப்பதில்லை.
  • உட்கொண்ட இரையின் தசைகள் போன்ற மிருதுவான பகுதிகள் சொிக்கப்பட்ட பின் சொரிக்கப்படாத இறக்கைகள், உரோமங்கள், எலும்புகள் ஆகியவற்றை உருண்டையாக உமிழ் திரளைகளை (Pellet) வாய் வழியாக வெளித்தள்ளும். இவற்றில் விதைகளும் அடங்கும். மற்ற வேட்டையாடி பறவைகளைப் போல் உயா்ந்த மரங்கள், மலை முகடுகளில் தங்காமல், அந்தி வேளையில் புல்வெளியின் மீது வட்டமிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின் பூனைப்பருந்துகள் கூட்டமாக புல்தரைகளில் தங்கும்.
  • இவை தங்கிச் சென்ற நிலப்பரப்பில் உமிழ் திரள்களைச் சேகாித்து ஆய்விற்கு உட்படுத்தியபோது, அவற்றில் சுமார் 200க்கும் மேற்பட்ட வகையான விதைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் மதங்கைப் புல் (Dactyloctenium aegyptium), சாணப் புல் (Brachiaria ramosa), அரிசிப் புல் (Paspalidium flavidum), வரகு (Paspalum scrobiculatum), கொழுக்கட்டை புல் (Cenchrus setigerus), மேலும் ஓரிடவாழ் தாவரமான போதைப் புல் (Themeda cymbaria), கால்நடை தீவனமான குதிரைவாலிப் புல் (Echinochloa colonum), செவ்வருகுப் புல் (Chloris barbata) எனப் பல புல் வகைகளும், இருவித்திலை தாவரங்களான தொய்யா கீரை (Digera muricata), கீழாநெல்லி (Phyllanthus niruri), நாரிப் பயறு (Vigna stipulacea) ஆகியவற்றின் விதைகளும் இருப்பது தெரியவந்தது. இவற்றில் ஒரு வித்திலைத் தாவரங்களைக் காட்டிலும் இருவித்திலை தாவர விதைகள் அதிக எண்ணிக்கையில் பூனைப்பருந்துகளால் பரப்பப்படுகின்றன.
  • பூனைப்பருந்துகளின் மூலம் பரப்பப்படும் இவ்விதைகள் வறண்ட புல்வெளிகளில் தாவரப் பன்மயம் நிலைத்திருக்க உதவுகின்றன. பூச்சிகள் முதல் சிறு பாலூட்டிகள் வரை பல்வேறு உயிரினங்களை வேட்டையாடி புல்வெளிகளின் உயிர் பன்மயத்தைச் சமநிலையில் வைத்திருக்கவும் இது உதவுகிறது. கானகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க விதை பரப்பும் யானையைப் போலவும் வேட்டையாடும் புலியைப் போலவும் புல்வெளியின் யானைகளாக, புலிகளாக பூனைப்பருந்துகள் வலம் வருகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்