புளுஸ்கை அளவுகோல்
- குறும்பதிவு சேவையான ட்விட்டருக்குப் (எக்ஸ்) போட்டியாக விளங்கும் சேவைகளில் ஒன்றான புளுஸ்கை வேகமாக வளர்கிறது. அண்மையில் இது 2.4 கோடிப் பயனாளிகளை எட்டியது. அதிகரிக்கும் இந்தச் செல்வாக்கிற்கு ஈடு கொடுக்கும் வகையில், புளுஸ்கை மேடையில் பயனாளிகளின் செல்வாக்கைக் கணக்கிட உதவும் கெட் ப்ளு (https://goblue.playstudioapps.com/) எனும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் ஆகியுள்ளது.
- பின்தொடர்வோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை இந்தச் செயலி சார்ட் வடிவில் முன்வைக்கிறது. இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, இத்தகைய மூன்றாம் தரப்பு செயலிகளும் ட்விட்டர் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைவதை உணரலாம்.
ஏஐ அவர்கள் நண்பன்!
- பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்தும் விதம் தொடர்பாகப் பெற்றோர்களுக்கு எப்போதுமே ஒரு கவலை இருந்துகொண்டே இருக்கும். இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு பெற்றோர்களுக்குக் கூடுதல் கவலையைக் கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் அர்பனா பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, இக்கால பிள்ளைகள் ஏஐ சேவைகளைப் பயன்படுத்தும் விதம் தொடர்பாக பெற்றோர்கள் மத்தியில் பெரும் போதாமை இருப்பதாகத் தெரிவிக்கிறது.
- சாட்பாட் உள்ளிட்ட ஏஐ சேவைகளைப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்யவும், இணைய தேடல் வசதி போலவும் பயன்படுத்துவதாகப் பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஆனால் பிள்ளைகளோ, உணர்வு நோக்கிலான தொடர்புகளுக்கும் ஆலோசனைகள் வேண்டியும் ஏஐ சேவைகளை நாடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- இளம் பருவத்தினர் அதிகம் பயன்படுத்தும் ஸ்னாப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூகவலைதளச் சேவைகளில் ஏஐ வசதி அதிகம் ஒருங்கிணைக்கப்படும் நிலையில், இளம் பயனாளிகள் ஏஐ சேவை மீது உணர்வு நோக்கிலான பிடிப்பு கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அம்மா ஒருவர், தனது மகன் தற்கொலை செய்துகொண்டதற்கு ஏஐ சாட்பாட்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்த பின்னணியில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பது எச்சரிக்கையாகவே அமைகிறது.
கேள்வி கேட்கும் செயலி:
- கட்டுப்பாடில்லாத போன் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைக்க உதவும் நோக்கிலான செயலிகள் பல இருக்கின்றன. இந்த வகை செயலிகளில் ஒன்றான இன்டென்டி (https://play.google.com/store/apps/details?id=com.actureunlock) போனை ஒவ்வொரு முறை அன்லாக் செய்யும்போதும், அதற்கான காரணத்தைக் கேட்டே அனுமதி அளிக்கிறது. தொடக்கத்தில், இதற்கு சாட்பாட் உரையாடல் பாணியில் பதில் அளிக்க வேண்டியிருந்தாலும், இப்போது இதற்கான பதில்களைத் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது. பயனாளிகள் தங்கள் பயன்பாட்டின் வரலாற்று அம்சத்தையும் தெரிந்துகொள்ளலாம். இதேபோல இன்னும் சில செயலிகளும் இருக்கின்றன. உதாரணம் - https://one-sec.app/
வாட்ஸ்அப் எச்சரிக்கை!
- அடுத்த ஆண்டு மே மாதம் முதல் ஒரு சில பழைய போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்ரூமர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, ஐபோன் 5 உள்ளிட்ட ஐஓஎஸ் 15.1 வரிசைக்கு முந்தைய ஐபோன்களில் வாட்ஸ் அப் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எனவே இன்னமும் ஐபோன் 6 உள்ளிட்ட மாதிரிகள் வைத்திருந்தால் மேம்பட்ட மாதிரிகளுக்கு மாற வேண்டும். பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த பழைய மாதிரிகளைக் கைவிடுவதாக மெட்டாவிஸ் வாட்ஸ்அப் கருதுகிறது. ஆண்ட்ராய்டு பயனாளிகளைப் பொறுத்தவரை, 5.0 வெர்ஷன் அல்லது மேம்பட்ட வெர்ஷன்களில் இயங்கும் போன்களில் இப்போதைக்குப் பிரச்சினை இல்லை.
கிரியேட்டர்களுக்கு அழைப்பு!
- இணையத்தில் பொய் செய்திகளும் பிழை செய்திகளும் அதிகரித்து வரும் நிலையில், உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபடும் கிரியேட்டர்கள், செல்வாக்காளர்கள் தகவல் சரி பார்ப்பில் (fact-checking ) கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆனால், செல்வாக்காளர்களில் பெரும்பாலானோர் தகவல் சரி பார்ப்பின் தேவையை உணராமலே இருப்பது யுனெஸ்கோ நடத்திய சர்வதேச ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- தற்போதைய இளம் தலைமுறை சமூக ஊடகம் வாயிலாகவே செய்திகளைப் பெறும் நிலையில், இந்தப் போக்குப் பெரும் ஆபத்தானது என்பதை உணர்ந்துள்ள யுனெஸ்கோ, செல்வாக்களர்களுக்குத் தகவல் சரிபார்ப்பு அடிப்படைகளையும், அவசியத்தையும் கற்றுத்தரும் ஆன்லைன் பயிற்சியை அறிவித்துள்ளது. தகவல் சரிபார்ப்பின் முக்கியத்துவத்தை உணர இந்தப் பாடத்திட்டத்தை அணுகலாம்: https://journalismcourses.org/product/digital-content-creators-and-journalists-how-to-be-a-trusted-voice-online/
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2024)