TNPSC Thervupettagam

புவியரசியலின் புதிய எல்லைகளை வளர்த்தெடுக்கும் குவாட் சந்திப்பு

March 17 , 2021 1408 days 607 0
  • ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் (குவாட்) கடந்த வார இணையவழிக் கூட்டம், இந்தியாவின் புவியரசியலில் புதிய எல்லைகளை விரித்தெடுப்பதாக அமைந்துள்ளது.
  • இந்த நான்கு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள், வெறும் வார்த்தையளவில் மட்டுமே இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் இந்தக் கூட்டம் அமைந்துவிட்டது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சூகா ஆகியோர் கரோனா தடுப்பூசி, தொழில்நுட்பக் கூட்டுறவு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது, இந்தச் சந்திப்பை மேலும் முக்கியத்துவம் உள்ளதாக்கியிருக்கிறது.
  • 2022-ன் இறுதிக்குள் 100 கோடித் தடுப்பூசிகளுக்கான திட்டம் அவற்றில் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தொழில்நுட்பத்தின்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளுக்கு ஜப்பான் நிதியுதவி செய்யவும் வாய்ப்புள்ள ஆசிய - பசிபிக் நாடுகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவும் முடிவாகியுள்ளது.
  • பாரிஸ் உடன்படிக்கையின்படி பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு குவாட் நாடுகள் உறுதியளித்திருப்பதோடு 5ஜி, உயிரிதொழில் நுட்பம் உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளவும் சம்மதித்துள்ளன.
  • இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் இந்த நான்கு நாடுகளும் தொடர்ந்து சேர்ந்து இயங்குவதற்கான சமிக்ஞைகளும் இந்த மாநாட்டில் உணர்த்தப்பட்டிருக்கின்றன.
  • உலகளவிலான தலைமை, பிராந்தியக் கூட்டுறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துதல், சீனாவின் சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட அமெரிக்க அதிபரின் சமீபத்திய வாக்குறுதிகள் குவாட் சந்திப்பின் உடன்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
  • ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் கடல்வழிப் பாதை தொடர்பாகவும் வணிக, தொலைத்தொடர்புகள் விஷயத்திலும் சீனாவிடமிருந்து அழுத்தங்களைச் சந்தித்துவரும் நிலையில், குவாட் நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு இன்னும் பலப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரையில், ‘நடப்புக் கட்டுப்பாடு எல்லைக்கோ’ட்டில் பதற்றம் ஏற்பட்டதற்கு ஓராண்டுக்குப் பின், ராஜதந்திர அடிப்படையில் மிகவும் பரந்த ஆதரவைப் பெற்றிருக்கிறது.
  • மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகள், தொழில்நுட்பக் கூட்டுறவுக்கான வாய்ப்புகள், பிராந்திய அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்கள், நிதி உள்கட்டமைப்புகள் ஆகியவை இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சங்கள்.
  • இத்துறைகளில் தெற்காசிய அளவில் சீனா முதன்மை வகித்துவரும் நிலையில், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புதிய வாய்ப்புகள் பிராந்திய அரசியலிலும் இந்தியாவைப் பலப்படுத்தும் என்று நம்பலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்