- “மீன்களுக்கு இரையாகிவிடக் கூடாது என்பதற்காகவே தண்ணீரில் தங்களைச் சுற்றிக் கூடு ஒன்றைக் கட்டிக் கொண்டு வாழும் திறனைக் கொண்டவை டிரிகாப்டெரா (trichoptera) பூச்சியினங்கள். சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்றுதான் ஆய்வுத் துறையில் இருப்பவர்கள் இந்தப் பூச்சியினங்களை அழைப்போம்” என்கிறார் மதுரை கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவருமான எஸ்.தினகரன். ஆய்வுப் பணிக்காக 25 ஆண்டுகளாகப் பூச்சியினங்களைத் தேடி காடுகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
- “சிறு வயதிலிருந்தே சுற்றுச்சூழலில் ஆர்வமும் அக்கறையும் இருந்ததால் இந்தத் துறையைத் தேர்வு செய்தேன். டிரிகாப்டெரா என்கிற பூச்சி இனத்தைப் பற்றித்தான் என் முனைவர் பட்ட ஆய்வும் அமைந்தது. எங்களது ஆய்வு பெரும்பாலும் நிலத்திலும் நீரிலும் வாழும் பூச்சியினங்களைப் பற்றியது (Semi Aquatic). உதாரணத்துக்கு கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள்.
- ரசாயனங்களைப் பயன்படுத்தாமலே இந்தப் பூச்சியினங்கள் மூலம் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா, மாசுபட்டு இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து விடலாம்” என்று கூறும் தினகரன் பெயரிலும் பூச்சியினம் ஒன்று உள்ளது.
- மேற்கு மலைத்தொடர், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு போன்ற பகுதிகளில் தினகரனும் அவரது ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். அங்குதான் நோய் பரப்பும் பூச்சிகளான சைமூலியம் (இவை ஆப்பிரிக்க கிராமங்களில் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தக் கூடியவை.) வகை பூச்சியினங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
- ஆனால், இங்குள்ள சைமூலியம் பூச்சிகள் நோய் பரப்பும் தன்மை கொண்டவையாக மாறவில்லை என்கிறார் தினகரன். ஆய்வின்போது இவர்கள் கண்டறிந்த சைமூலிய பூச்சி வகை ஒன்றுக்கு ஆராய்ச்சி மாணவர்கள், ‘சைமூலியம் தினகரனி’ என்று இவர் பெயரை வைத்து, கெளரவித்திருக்கிறார்கள்.
- இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில்தான் தண்ணீரில் வாழ்ந்த பூச்சியினங்கள் குறித்த ஆய்வுகள் அதிகம் நடைபெற்றதாகவும் இப்போதுள்ள வனப் பாதுகாப்பு சட்டங்கள் சிக்கலாகிவிட்டதால் முன்பு போல பரவலாக ஆய்வுகளை மேற்கொள்வது செலவு பிடித்ததாகவும் மாறிவிட்டது என்கிறார்.
- உயிரியல் துறை ஆய்வு சார்ந்து அரசு வழங்கும் நிதியும் குறைந்துவிட்ட நிலையில், சுற்றுச்சூழல் மீதான அக்கறை காரண மாகவே தினகரனும் அவரது மாணவர்களும் இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவி கொடுங்கள்
- சிலம்பாறு ஓடையில் முன் பெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், தற்போது சூழல் மாறிவிட்டது. தண்ணீர் ஓடுவது அரிதாகிவிட்டது. இந்த ஓடைத் தண்ணீரை நம்பியிருந்த பல பூச்சி வகைகள் தற்போது மறைந்துவிட்டன. அவை எங்கு சென்றன என்பதைக் கண்டறிவது அவசியம்.
- ஆனால், அரசுக்கு இது பெரிய பிரச்சினையாகத் தெரியாது. அந்தத் தேடலின் முக்கியத்துவத்தை அரசுக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நீர்வாழ் பூச்சி இனங்கள் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டனர் என்று கவலையுடன் கூறுகிறார் தினகரன்.
- இங்கு ஹைட்ராலஜி என்கிற நீரியல் துறை உள்ளது. ஆனால், ஹைட்ரோ பயாலஜி பொறியாளர்கள் இருக்க மாட்டார்கள். உயிரியல் ஆய்வுகள் தேவையில்லை என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே ஹைட்ரோ பயாலஜியில் ஈடுபடுகிறவர்கள் மிகச் சொற்பமாகவே இருக்கிறார்கள். தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் உயிரித் தொழில்நுட்பவியல், மரபணுக்கள் சார்ந்த படிப்புகளின் பக்கம் திரும்பிவிட்டார்கள்.
- பாரம்பரியமான படிப்புகள் பக்கம் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை. கண்மாயில் எத்தனை சதவீதம் பூச்சிகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்குக்கூட நம்மிடம் ஆள்கள் இல்லை என்பதுதான் உண்மை. வெளிநாடுகளில் எல்லாம் மாதத்திற்கு ஒருமுறை இம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஆனால், இந்தியாவில் அந்தப் பழக்கமே இல்லை. சுற்றுச்சூழல் மிக மோசமாகிக் கொண்டிருக் கும் இந்தக் காலக்கட்டத் தில் இம்மாதிரியான ஆய்வு கள் எல்லாம் மிகவும் அவசிய மானவை என்கிறார் தினகரன்.
பூச்சிகளைக் காப்போம்
- பூச்சிகளை அறிந்து கொள்வதன் மூலமாகவே நம்மால் சுற்றுச்சூழலை அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக மலை சார்ந்த பகுதிகள் குறித்த புரிதலை பூச்சிகள் தாம் நமக்குக் கற்றுத் தருகின்றன.
- “மலைகள், சிற்றோடை களைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. புலி களைக் காப்போம், யானைகளைக் காப்போம் என்று குரல் எழுப்புவதுபோல், ‘பூச்சிகளைக் காப்போம்’ என்றும் குரல் எழுப்புவது அவசியம். உலகில் 80% பூச்சிகள்தாம் உள்ளன. பூச்சிகளால்தாம் நாம் ஆளப்படுகிறோம்.
- இதனை எல்லாம் கவனத்தில் கொண்டு மேலை நாடுகளைப் போல் உயிரியல் துறையில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குறிப்பாக, பாரம்பரியமிக்க ஆராய்ச்சிகளுக்கு நம் நாட்டிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக்காக காட்டுக்குள் செல்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
- கட்டணங்களை அரசு குறைக்க வேண்டும். எங்கள் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். இல்லை என்றால் ஆய்வுத் துறைகள் காலப்போக்கில் அழியும் அபாயத்தை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என்று அக்கறையோடு சொல்கிறார் தினகரன்.
நன்றி: தி இந்து (03 – 09 – 2023)