TNPSC Thervupettagam

பூமியில் நெருப்பை உருவாக்கியது யார்

February 14 , 2024 342 days 316 0
  • பூமிக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. பூமியில் நீர் இருக்கிறது, உயிர் இருக்கிறது. இவற்றுடன் பூமியில் மட்டும்தான் நெருப்பு இருக்கிறது. இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். வேறு கோள்களில் எரிமலை இருக்கிறதே? மின்னல் வெட்டுகிறதே? அவை எல்லாம் நெருப்பு இல்லையா? ஏன் நமது நட்சத்திரமான சூரியன்கூட எந்நேரமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. அதுவும் நெருப்புதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவற்றில் எதுவும் நெருப்பு கிடையாது.
  • ஹைட்ரஜன் தனிமம் அணுச் சேர்க்கையில் ஈடுபடும்போது வெப்பமும் ஒளியும் வெளியாகின்றன. இதைத்தான் நாம் நட்சத்திரங்கள் என்கிறோம். ஆனால், அவை நெருப்பு கிடையாது. அதேபோல எரிமலையில் இருந்து வெளிவருவதும், மின்னல் வெட்டும்போது தோன்றுவதும் நெருப்பு கிடையாது. அங்கும் வெப்பம் வெவ்வேறு வடிவில் வெளியாகிறது அவ்வளவுதான். பிறகு நெருப்பு என்பது என்ன?
  • நெருப்பு என்பது எரிதல் (Combustion) எனும் வேதியியல் வினையால் உருவாவது. நெருப்பு உருவாவதற்கு இரண்டு பொருள்கள் தேவை. ஒன்று ஆக்சிஜன். இன்னொன்று எரிபொருள். எரிதல் நிகழும்போதும் ஆக்சிஜனும் எரிபொருளும் இணைந்து,ஆற்றல் வெப்பமாகவும் வெளிச்சமாகவும் வெளியாகும். இதைத்தான் நாம் நெருப்பு என்கிறோம்.
  • பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் தனித்த ஆக்சிஜன் கிடையாது. அதனால், நெருப்பும் கிடையாது. பிறகு முதல் நெருப்பை உருவாக்கியது யார்? அதைச் செய்தவை உயிர்கள். உயிர்கள் தோன்றிய பிறகுதான் பூமியில் ஆக்சிஜன் உருவானது.
  • ஆரம்பத்தில் சயனோ பாக்டீரியா என அழைக்கப்படும் ஒரு வகை பாக்டீரியாக்கள்தாம் கடலில் இருந்துகொண்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டு ஏராளமான ஆக்சிஜனை உருவாக்கின. இந்த ஆக்சிஜன் உயிர்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, நெருப்பு உருவாவதற்கும் காரணமாக அமைந்தது.
  • இந்த நிகழ்வை நாம் மாபெரும் ஆக்சிஜனேற்ற நிகழ்வு (The Great Oxygenation Event) என்கிறோம். ஆனால், ஆரம்பத்தில் உருவான ஆக்சிஜன் வளிமண்டலத்தில் தங்கவில்லை. பூமியின் மேலோட்டில் இருந்த இரும்பு, ஆக்சிஜனை உறிஞ்சிக்கொண்டது. பின் ஒருகட்டத்திற்கு மேல்தான் ஆக்சிஜன் வளிமண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கத் தொடங்கியது.
  • ஆனால், அப்போதும் நெருப்பு உருவாகவில்லை. காரணம் ஆக்சிஜனுடன் இணைந்து பற்றிக்கொள்ள எரிபொருள் வேண்டுமல்லவா? அதற்கு எங்கே செல்வது? இந்தச் சிக்கலையும் உயிர்கள்தாம் தீர்த்து வைத்தன.
  • எரிதல் நடைபெற எரிபொருள் தேவை. ஆனால், எல்லாப் பொருள்களும் எரிபொருளாகிவிட முடியாது. எரிதல் நடைபெற கார்பனும் ஹைட்ரஜனும் அதிக அளவில் பிணைந்த மூலக்கூறுகள் எரிபொருளில் இடம்பெற வேண்டும். இத்தகைய அமைப்பு தாவரங்களின் உடலில் உள்ள செல்லுலோஸ் எனும் சேர்மத்தில் அதிக அளவு இருக்கிறது. இதனால், தாவரங்கள்தாம் முதல் எரிபொருளாக அமைந்தன.
  • முதன் முதலில் உயிர்கள் பரிணாமம் அடைந்து பாசித் திட்டுகள்போல முதல் தாவரங்கள் தோன்றின. பின் 43 கோடி ஆண்டுகளுக்கு முன்பு குழாய் போன்ற வடிவத்தில் நெமடோபைட்டுகள் (Nematophytes), பசிதேகா (Pacytheca) போன்ற தாவரங்கள் தோன்றின. பிறகு 9 மீட்டர் உயரத்தில் வளரக்கூடிய புரோட்டோடாக்சைட் (Prototaxites) எனும் ஆதித் தாவரம் தோன்றியது. இந்தத் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடவில்லை. அவற்றுக்கு இலைகள், வேர்கள், விதைகள் என எதுவும் கிடையாது. ஆனால், அவை எளிதில் பற்றக்கூடியவையாக இருந்தன.
  • இந்த புரோட்டோடாக்சைட் தாவரங்களில் மின்னல் தாக்கியபோது அதன் தூண்டுகோலாக முதல் நெருப்பு உருவாகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். புரோட்டோடாக்சைட் தாவரங்களின் புதைபடிமங்கள்தாம் முதன்முதலில் எரிந்த நிலையில் நமக்குக் கிடைக்கின்றன.
  • பின் புவியில் ஏற்பட்ட மாற்றத்தால் பாஞ்சியா எனும் கண்டம் உருவாகி, வெவ்வேறு வகைத் தாவரங்கள் தோன்றிப் பரவின. இந்தக் காலகட்டத்தை நாம் கார்ஃபோனிபெரஸ் காலகட்டம் என்கிறோம். இந்தக் காலத்தில் உருவான தாவரங்களால் அதிகப்படியான ஒளிச்சேர்க்கை நடைபெற்றது. இதனால், ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகரித்தது. அந்தக் கட்டத்தில் வளிமண்டலத்தில் 30-35% ஆக்சிஜன் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதிகப்படியான ஆக்சிஜன் உருவானதால் அடிக்கடி நெருப்புப் பற்றியது. அந்தக் காலகட்டத்தில் நெருப்புச் சூறாவளி எல்லாம் சாதாரணமாக உருவாகின.
  • இதுபோன்ற சூழல், தாவரங்களை அதிக அளவில் பாதித்ததால் ஜுராசிக் காலகட்டத்தில் சில தாவரங்கள் நெருப்பு பற்றினாலும் அதன் உடல் பாதிக்காதவாறு அடர்த்தியான பட்டைகளோடும் நெருப்பு தரையிலிருந்து மேலே பரவாத வகையில் உயரத்தில் கிளைகளோடும் பரிணமிக்கத் தொடங்கின. அதன்பின் தோன்றிய புற்கள் நெருப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன.
  • புற்கள் இறந்தவுடன் அவை அகற்றப்படாமல் இருந்தால் புதிய தண்டுகள் முளைக்க முடியாது. இங்கே நெருப்புதான் இறந்த புற்களை எரித்து அகற்றுகிறது. சாம்பலான புற்களின் ஊட்டச்சத்து மீண்டும் நிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விதைகள் முளைக்க உதவுகின்றன. பசும்புற்கள் நெருப்பால் பாதிக்கப்பட்டாலும் அவற்றின் முக்கியப் பாகங்கள் நெருப்பு பாதிக்காத வகையில் பூமிக்கு அடியில் இருக்கும்படி பரிணமித்துள்ளன. இவ்வாறு நெருப்பு, புற்கள் வளர வழிவகுக்கிறது.
  • இப்படிப் புல்வெளிகள் பரவத் தொடங்கியதுதான் ஆப்ரிக்காவில் நமது மூதாதைக் குரங்குகள் (Hominin) உருவாக வழிவகுத்துக் கொடுத்தது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனால், மனிதர்கள் உருவாகவும் நெருப்பு மறைமுகப் பங்காற்றி இருக்கிறது.
  • இவ்வாறு முதலில் நெருப்பு உருவாக உயிர்களும், பிறகு உயிர்கள் பெருக நெருப்பும் மாற்றி மாற்றி உதவிக்கொண்டன. ஒருவேளை பூமியில் உயிர்கள் மட்டும் தோன்றாமல் இருந்திருந்தால் நெருப்பு உருவாகாமலேயே இருந்திருக்கும். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தில் நம்மால் ஒரு நொடியில் வீட்டில் நெருப்பை உருவாக்கிவிட முடியும். ஆனால், முதல் நெருப்பு உருவாக நாம் கோடிக்கணக்கான ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்