TNPSC Thervupettagam

பூமியைக் காக்கும் புவி நேரம்

March 26 , 2023 492 days 298 0
  • 2007 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை ’புவி நேரம்’ (Earth Hour) கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம். உலக இயற்கை நிதியத்தின் முன்னெடுப்பில் உருவான இந்த 'புவி நேரம்’ காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலக மக்களை ஒருங்கிணைக்கும் பெரும் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறது.
  • 2008-ல் 35 நாடுகள் மட்டுமே இதைக் கடைப்பிடித்தன. தற்போது, 190 நாடுகளில் உள்ள மக்கள் ’புவி நேர’த்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில், அத்தியாவசியத் தேவை அல்லாத பிற மின்விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்துவைப்பதன் மூலம் மக்கள் பங்கேற்கலாம். இதன் மூலம், மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எரி ஆற்றலைப் பாதுகாப்பது எனத் தங்கள் பங்குக்கு, இந்தப் பூமிக்கு ஆற்ற வேண்டிய கடமையை மக்கள் நிறைவேற்ற முடியும்.
  • 2023ஆம் ஆண்டுக்கான 'புவி நேரம்’ வரும் சனிக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டின் ’புவி நேர’த்தை மிகப்பெரிய அளவில் மக்களிடம் எடுத்துச்செல்லும் நோக்கில், ரிக்கி கேஜ் எனும் இசையமைப்பாளரை அதன் பிரச்சார முகமாக உலக இயற்கை நிதியம் அறிவித்து இருக்கிறது. ரிக்கி கேஜ், மூன்று முறை கிராமி விருது பெற்ற ஒரே இந்தியர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரர். இதை விட முக்கியமாக, அவர் ஒரு நன்கு அறியப்பட்ட சுற்றுச்சூழலியலாளர்.
  • இது குறித்து ரிக்கி கேஜ் பேசும்போது ”ஆரோக்கியமான உலகத்துக்காக ஒரு மணிநேரத்தின் ஆற்றலைச் சேமித்து, அதன் மூலம் கிடைக்கும் முழு உலகத்துக்கான கூட்டு நன்மையை மக்களுக்கும் பூமிக்கும் திருப்பித் தருவதற்கு நாம் அனைவரும் இணைந்து மக்களை அணிதிரட்டுவோம். ’புவி நேர’த்தில் நமது மின் உபகரணங்களை 60 நிமிடங்கள் அணைத்துப் பங்கேற்கும் போது, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வழக்கமான அன்றாட நிகழ்விலிருந்து விலகி, நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் நாம் வாழும் இந்தப் பூமிக்கும் சாதகமான ஒன்றைச் செய்யும் அசாத்திய முயற்சியில் இணைகிறோம். இந்நாளில் நீங்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தேவையற்ற மின் உபகரணங்களை அணைக்க வேண்டும்” என்று கூறினார்.
  • புவியைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்ற ’புவி நேரம்’ போன்ற முன்னெடுப்புகள் உதவி வருகின்றன. இதில் உளபூர்வமான அக்கறையுடன் பங்கேற்பது நம்மை மட்டுமல்லாமல்; நம் எதிர்காலத்தையும் பாதுகாக்கும்.

நன்றி: தி இந்து (26 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்