TNPSC Thervupettagam

பூமியைக் காப்பவர்களின் எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்?

January 27 , 2025 4 days 61 0

பூமியைக் காப்பவர்களின் எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்?

  • நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக உலகில் நுகர்வுக் கலாச்சாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் நுகர்வு பெரிதும் அதிகரித்துள்ளது. இது அதிகக் கழிவு உருவாக வழிவகுக்கிறது. மறுபுறம், மறுசுழற்சிக் கழிவுகளும் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. இப்படியான சூழலில், கழிவு மேலாண்மைத் துறையின் வளர்ச்சி அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமாக வளரவில்லை.
  • தெருக்​கள், சாலைகள், சந்திப்பு​கள், ஆற்றங்​கரைகள் உள்ளிட்ட இடங்​களில் மறுசுழற்சிக் கழிவு​களோடு சேர்த்து சட்ட​விரோத​மாகக் குப்​பைகள் கொட்​டப்​படு​கின்றன. இதனால் பூமிக்கு உண்டாகும் பாதிப்பை அறிவதற்​குக்​கூட மக்கள் தயாராக இல்லை. முறை​சா​ராக் குப்பை பொறுக்​குபவர்​களின் (Informal waste pickers அல்லது rag pickers) பங்களிப்பு காரண​மாகவே திடக்​கழிவு மேலாண்​மைத் துறை ஓரளவு தப்பிப்​பிழைக்​கிறது.
  • இவர்கள் செய்​யும் இந்தப் பொதுச் சேவை​யின் காரணமாக அதிகம் பாதிக்​கப்​படக்​கூடிய தொழிலாளர்களும் இவர்​கள்​தான். குப்பை உருவாக்​கம், அதன் பாதிப்பு​களைப் பற்றிக் கவலைப்​படாத பெரும்​பான்​மையான நுகர்​வோரின் ஞெகிழி, இதர மறுசுழற்சிக் குப்​பைகளை குப்பை பொறுக்​கும் பணியில் ஈடுபட்​டுள்ள இவர்கள் கவனித்​துக்​கொள்​கிறார்​கள். உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை வாழ்க்கை முறை உத்தர​வாதம் இல்லாத​தால் இத்தொழிலா​ளர்கள் பெரிதும் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

கடுமையான உழைப்பு:

  • இந்தியா​வில் ஆண்டு​தோறும் உருவாகும் 6.2 கோடி மெட்​ரிக் டன் திடக்​கழி​வு​களில் பிளாஸ்​டிக் கழிவு மட்டுமே 56 லட்சம் மெட்​ரிக் டன். மத்திய மாசுக் கட்டுப்​பாட்டு வாரியம் (CPCB), இந்தியா​வில் வருடாந்திர திடக்​கழிவு உற்பத்தி 2030க்​குள் 16.5 கோடி மெட்​ரிக் டன்னாக அதிகரிக்​கும் என்று அண்மை​யில் கணித்​துள்ளது. மறுசுழற்சிக் குப்​பைகளைக் கையாள்​வ​தில் முறை​சாராத குப்பை பொறுக்​குபவர்கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். வீதி​கள், சாலைகள், குப்பை கொட்டும் இடங்​களில் இருந்து மறுசுழற்சி செய்​யக்​கூடிய பொருள்​களைச் சேகரிக்​கும் பொறுப்பான பணியை இத்தொழிலா​ளர்கள் செய்​து​வரு​கின்​றனர்.
  • இவர்​களின் வாழ்க்கை சவால்கள் நிறைந்​தது. தெருக்​கள், சாலைகள், பெரிய குப்​பைக் கிடங்​கு​களி​லுள்ள மறுசுழற்சிக் குப்​பைகளைச் சேகரிப்​ப​திலிருந்து தொடங்​கு​கிறது இவர்​களது ஒரு நாள். நண்பகல் வரை உழைத்து, பிறகு சேகரிக்​கப்​பட்ட மறுசுழற்சிக் குப்​பைகளைத் தங்கள் பட்டறி​வின் அடிப்​படை​யில் பிரித்​தெடுக்​கின்​றனர். தரம் பிரித்து, பி‌ன்ன‌ர் மறுசுழற்சிக் குப்​பைகளை வாங்​கும் வியா​பாரி​களிடம் ஒப்படைத்து, சிறு தொகை​யைப் பெறுகின்​றனர்.

தொடரும் இன்னல்கள்:

  • பெரும்​பாலும் வாக்ரி (நரிக்​குறவர்), இருளர் பழங்​குடிகள், புலம்​பெயர்ந்​தோர், கைவிடப்​பட்ட தனிநபர்கள் இந்த மறுசுழற்சிக் குப்பை பொறுக்​கும் பணியில் ஈடுபடு​கின்​றனர். மறுசுழற்சி, திடக்​கழிவு மேலாண்​மைப் பணியில் அவர்கள் குறிப்​பிடத்​தக்க பங்காற்றி வருகின்​றனர். மேலும், திடக்​கழிவு மேலாண்மை அமைப்பு​களுக்​கும் இவர்கள் பெரும்​பங்​காற்றி வருவது குறிப்​பிடத்​தக்​கது.
  • இப்படிப்​பட்ட சூழலில் ‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தன்னார்வத் தொண்டு நிறு​வனம் நடத்திய சமீபத்திய ஆய்வு​களின்​படி, முறை​சா​ராக் குப்பை பொறுக்​குபவர்​களில் 48% பேர் மட்டுமே சொந்​த​மாகச் சிறு வீடுகளை வைத்​திருக்​கிறார்​கள், 10% மக்கள் தெருக்​களி​லும், 10% மக்கள் அரசாங்​கத்​தால் வழங்​கப்​பட்ட வீடு​களி​லும் வசிக்​கின்​றனர். குப்பை பொறுக்​குபவர்​களில் 82% மக்கள் தனிக்​குடித்​தனம் செய்​பவர்​களே. ஆண்களை​விடப் பெண்களே (55%க்கு மேல்) இந்தப் பணியில் தங்களை அதிகம் ஈடுபடுத்​திக்​கொண்​டுள்​ளனர்.
  • இவர்​களில் 68% பேர் கல்வி அறிவற்​றவர்​கள். குழந்தைகள் பெரும்​பாலும் பள்ளி செல்ல வாய்ப்பு கிடைக்​காமல் கல்வியை இழக்​கிறார்​கள். குழந்தை​களும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்​தப்​படு​கின்​றனர் என்பது கசப்பான உண்மை. இவர்கள் தினமும் சராசரியாக 100 முதல் 500 ரூபாய் வரை சம்பா​திக்​கிறார்​கள், பெரிய குப்பை கொட்டும் கிடங்​கு​களில் (Dump yard) இருந்து மறுசுழற்சிக் குப்​பைகளைச் சேகரிப்​பவர்கள் சற்று அதிகம் சம்பா​திக்​கிறார்​கள். மறுசுழற்சிக் குப்பை பொறுக்​குபவர்கள் பெரும்​பாலும் வருமானம் உறுதி​யற்ற தன்மை​யால் ஒவ்வொரு நாளும் சிரமப்​படு​கிறார்​கள். இதனாலேயே சுமார் 40% பேர் தங்கள் அடிப்​படைத் தேவை​களைப் பூர்த்தி​செய்யக் கடன் வாங்​கு​கின்​றனர்.

என்ன செய்ய வேண்​டும்?

  • ஆதார் அட்டை, வாக்​காளர் அட்டை, குடும்ப அட்டைகள் போன்ற அரசு வழங்கிய அத்தி​யா​வசிய அடையாள ஆவணங்களை வைத்​திருந்​தா​லும், 34% பேர் மட்டுமே பான் அட்டைகளை (PAN Card) வைத்​துள்ளனர். 32% பேர் சாதிச் சான்​றிதழ்​களை​யும், 16% பேர் நலத்​திட்ட அட்டைகளை​யும் வைத்​திருக்​கிறார்​கள். இவர்​களில் 88% பேருக்கு அடிப்​படையான அரசு நலத்​திட்​டங்​களைப் பற்றிய விவரங்கள் தெரிய​வில்லை.
  • பலரும் பாது​காப்​புக் கருவிகள் இல்லாமல் பணி செய்​து​வரு​கின்​றனர். இதனால் அடிக்கடி காயங்​களுக்​கும், நோய்​களுக்​கும் ஆளாகிறார்​கள். விபத்து​களை​யும் சந்திக்​கின்​றனர். மழை நாள்​களில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படு​கிறது. இது நிதி நிலை​மையை மேலும் சிக்​கலாக்கு​கிறது. இவர்​களுக்கான அடிப்​படைப் பாது​காப்பு நடவடிக்கைகள், வாழ்​வா​தா​ரத்தை உறுதி​செய்வதை வலியுறுத்தி தமிழகத்​தின் 14 கடலோர மாவட்​டங்​களில் இந்தியா​வின் கடற்​கரைச் சுற்​றோட்டத் திட்டம் (Coastal Circularity Project) செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது. கடலோர மாவட்​டங்​களில் உள்ள முறை​சா​ராக் குப்பை பொறுக்​குபவர்​களின் குடும்ப உறுப்​பினர்​களின் வாழ்க்கையை மேம்​படுத்து​வ​தில் இது குறிப்​பிடத்​தக்க பங்காற்றிவரு​கிறது.
  • அரசின் ‘நமஸ்தே’ (NAMASTE) திட்டம் போன்ற திட்​டங்​களுடன் இணைந்து, குப்பை பொறுக்​குபவர்​களின் பாது​காப்பு, வருமானத்தை உயர்த்​துதல், அவர்​களுக்கான உரிமைகள் அடங்கிய கண்ணி​யமான வாழ்க்கையை உறுதி​செய்​ய​வும் இந்தத் திட்டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. முறை​சா​ராக் குப்பை பொறுக்​குபவர்கள் எதிர்​கொள்​ளும் பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காணும் வகையில், விரி​வாக்​கப்​பட்ட உற்பத்​தி​யாளர் பொறுப்பு (The Extended Producer Responsibility-EPR) விதி​களில் உரிய விதிகளைச் சேர்ப்பது அவசி​யம்.
  • அவர்கள் வளர்ந்​து​வரும் சுற்று​வட்டப் பொருளா​தா​ரத்​தின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதி​செய்ய வேண்​டும். இவர்களை மறுசுழற்​சிப் பாது​காவலர்கள் என்று அடையாளப்​படுத்தி, Fast-moving consumer goods (FMCG), பிளாஸ்​டிக் உற்​பத்​தி​யாளர்​கள் மூலம் நிதி உதவி, ​பாது​காப்​புக் கருவி​கள், ப​யிற்சி வழங்​கு​வதன் மூல​மும் இவர்​களின் ​வாழ்​வா​தா​ரத்தை உயர்த்த ​முடி​யும். அரசுடன் தனி​யார், தொண்டு நிறு​வனங்​கள் இணைந்து பணி​யாற்றி​னால் ஒரு நல்ல ​மாற்றத்தை இவர்​களுக்கு நம்​மால்​ உரு​வாக்​க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்