- ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரிகளைக் குறைத்துக்கொள்வது குறித்துப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும், மாநில அரசுகளும் தங்களது மதிப்புக் கூட்டு வரிகளைக் குறைக்க வேண்டும் என்றும் ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் குறிப்பிட்டிருப்பது, இவ்விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதையே உணர்த்துகிறது.
- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமாக ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குள் மாறி மாறிக் கைகாட்டிக்கொண்டிருந்தாலும் இரண்டுமே தங்களது வரிகளைக் குறைத்துக்கொள்ள முன்வரவில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது.
- இந்நிலை தொடரும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து சாமானிய மக்கள் திணற வேண்டியிருக்கும்.
- இந்நிலை, பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளிலிருந்து அடித்தட்டு மக்கள் விரைவில் மீண்டெழுவதற்குப் பெருந்தடையாகிவிடக்கூடும். அதற்கு ஒன்றிய, மாநில அரசுகளே காரணமாக அமைந்துவிடக் கூடாது.
- பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரிகளின் கீழ் கொண்டுவருவது குறித்தும் ஒன்றிய அரசு இதே வகையிலான மழுப்பலான பதிலையே அளித்துவருகிறது.
- ஜிஎஸ்டி கவுன்சில்தான் அத்தகைய முடிவை எடுக்க முடியும் என்றும் மாநிலங்களின் தரப்பிலிருந்து அவ்வகையான கோரிக்கைகள் கவுன்சிலில் முன்வைக்கப்படவில்லை என்பதும் பதிலாகக் கூறப்படுகிறது.
- அருண் ஜேட்லி நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்திலேயே பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் கொண்டுவருவது குறித்து உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
- பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக ஒன்றிய மாநில அரசுகள் தங்களது வரிகளைக் குறைத்துக்கொள்வதைப் பற்றி ஆலோசிக்குமாறு கடந்த பிப்ரவரியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார்.
- அதன் பிறகும்கூட, ஒன்றிய அரசு அதற்கான முன்முயற்சிகளை எடுக்கவில்லை. மாநில அரசுகளுடன் கலந்து பேசி அவர்களையும் வரிகளைக் குறைக்கச் செய்ய முனையவில்லை.
- எரிபொருள் செலவுகளைக் குறைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும், சராசரி வருமானம் உயர்ந்து பணப் புழக்கம் அதிகரிக்கவும் செய்யும்.
- எரிபொருட்களின் மீதான அதிகபட்ச வரிச் சுமை எதிர்மறை விளைவுகளுக்கே இட்டுச்செல்லும். வரிக் குறைப்புக்கான முன்னெடுப்பை மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் வகையில் ஒன்றிய அரசே தொடங்கிவைக்கட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 - 03 - 2021)