பெண்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
- மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது, பெண்களின் பணியிடப் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
- இந்தக் கொலை தொடர்பாக மருத்துவமனை வளாகத்துக்குள் செயல்படும் காவல் நிலையத்தில் தன்னார்வலராக இருக்கும் சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சஞ்சய் ராயின் அரசியல் பின்னணியும் மருத்துவமனையில் அவருக்கு இருக்கும் செல்வாக்கும் கொலை தொடர்பான வேறு பல சந்தேகங்களை எழுப்புவதால், கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கேட்டும் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை வலியுறுத்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இந்த வழக்கைத் திரிணமூல் காங்கிரஸ் அரசு கையாளும் விதம் குறித்து, மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.
- மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையின் செவிலி அருணா ஷான்பாக், மருத்துவமனைத் தூய்மைப் பணியாளர் சோகன்லால் வால்மீகியால் 1973இல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தை இந்தப் படுகொலை நினைவூட்டுகிறது. கொல்கத்தா மருத்துவரும் அருணாவைப் போலவே மறுநாள் காலைதான் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். வால்மீகிக்கு 1974இல் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் ஓராண்டைக் காவல் நிலையத்திலேயே அவர் கழித்துவிட்டதால், 1980இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அருணாவோ கை, கால்கள் செயலிழந்து, பார்வை பாதிக்கப்பட்டு, காது கேளாத நிலையில் 42 கொடும் ஆண்டுகளைப் படுக்கையிலேயே கழித்து உயிர்நீத்தார்.
- குற்றவாளிகளுக்குத் தரப்படும் தண்டனை என்பது பாதிக்கப்பட்டவர்களின் இழப்பைச் சரிசெய்து விடாது என்கிறபோதும், சட்டத்தின் மீதான குறைந்தபட்ச நம்பிக்கையை அது அளிக்கும். கொல்கத்தா சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கும் எவ்விதப் பாரபட்சமும் இன்றி உடனடியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும். நீதி வழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் தீவிரமே பாலியல் குற்றங்களை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கும்.
- இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ், “இரவு நேரத்தில் கருத்தரங்குக் கூடத்துக்கு அந்தப் பெண் மருத்துவர் ஏன் தனியாகச் செல்ல வேண்டும்?” எனக் கேட்டிருப்பது அநாகரிகமானது; மனிதத்தன்மையற்றது. பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு இது. அவரது பேச்சுக்குக் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் பதவிவிலகியுள்ளாரே ஒழிய, தன் கருத்தைத் திரும்பப் பெறவில்லை. நிர்பயா கொலையில் தொடர்புடைய குற்றவாளியும் இதேபோன்ற கருத்தைத்தான் சொன்னார் என்பதும் கவனிக்கத்தக்கது.
- பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பொதுச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் மனநிலையின் வெளிப்பாடுதான் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துகள். பணியிடங்களிலும் பொதுவெளிகளிலும் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைத் தனிநபர் குற்றங்களாக மட்டுமே பார்க்கக் கூடாது.
- கொல்கத்தா மருத்துவரைக் கொன்றவர்கள் தண்டிக்கப்படுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பொதுச் சமூகத்தின் இந்த ஆணாதிக்க மனநிலையில் மாற்றங்களைக் கொண்டுவருவதும் அவசியம். கொல்கத்தா மருத்துவரின் மரணத்துக்கு நீதிகேட்டு ‘இரவுகளும் எங்களுக்குச் சொந்தம்’ என்கிற முழக்கங்களோடு நாடு முழுவதும் ஒலிக்கும் பெண்களின் குரல்களும் அதைத்தான் உணர்த்துகின்றன. 78ஆவது சுதந்திர நாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில்கூட, காந்தி கனவு கண்ட பெண் விடுதலையை நாம் அடைந்துவிடவில்லை என்பது வேதனைக்குரியது. சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்களின் பாதுகாப்பை எல்லா நிலைகளிலும் உறுதிசெய்வது அரசு, பொதுச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 08 – 2024)