- பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, தமிழக காவல் துறையால் "காவலன் எஸ்ஓஎஸ்' (KAVALAN SOS) என்ற அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள எஸ்ஓஎஸ் என்பது "எங்களைக் காப்பாற்றுங்கள்" என்ற பொருளில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேரும், சென்னையில் கடந்த 10 நாள்களில் 3.5 லட்சம் பேரும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
- பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள், தாங்கள் ஆட்டோவிலோ, பேருந்திலோ அல்லது மிதிவண்டியிலோ செல்லும்போது தங்களை யாரும் கண்காணிப்பதுபோல் இருந்தால் உடன் இருப்பவரிடம் கூறி இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், தவறான நோக்கத்துடன் வேறு எவராவது அவர்களின் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்தால் உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும். தங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ கூறவேண்டும்.
குற்றங்கள்
- சிறுமிகளை ஆபாசப் படமெடுப்பதும், அதனை சமூக வலைதளங்கள், இணைய தளங்களில் பகிர்வதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனாலேயே சிறுமிகள் அதிக அளவு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
- கல்லூரி, அலுவலகம் செல்வோர் என பெண்களில் அதிகமானோர் தங்கள் போக்குவரத்துக்கு பேருந்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பயணத்தின்போதுதான் அதிகளவு பாலியல் சீண்டல்களுக்கும், அதனால் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.
- பரபரப்பான காலை, மாலை நேரங்களில்,பேருந்தில் இருக்கும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் சில போக்கிரிகள் ஈடுபடுவதுண்டு. இதை வெளியே சொன்னால் அசிங்கம் என்றும், அவர்களுக்குப் பயந்தும் இனி சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தச் செயலியைப் பயன்படுத்தினால் போதும் அடுத்த ஐந்து நிமிஷங்களில் காவல் துறையினர் அந்தப் போக்கிரிகளை அள்ளிக் கொண்டு சென்று விடுவர்.
சில விநாடிகள்தானே, இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைக்காமல், இதுபோன்று வேறு எந்தப் பெண்ணுக்கும் தொடர்கதையாக நடக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு காவல் துறையைத் தொடர்புகொண்டு குற்றவாளிகளைத் துணிச்சலாக அடையாளம் காட்ட வேண்டும்.
- இதுபோல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் தனிமையாக நிற்கும்போதும், கூட்டம் அதிகமில்லாத நேரங்களில் ரயிலில் பயணிக்கும்போதும், அங்கு மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது தெரிந்தாலும், ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் உடனே தயங்காமல் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.
- பெண்கள் தனியாக நடந்து செல்லும்போது, இரு சக்கர வாகனங்களில் வேகமாக வந்து பெண்களின் உடலில் பின்னால் தட்டுவது, காதில் தவறான வார்த்தைகளைக் கூறி விட்டுச் செல்வது போன்றவையும் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால், அவர்கள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட நேரங்களிலும் காவலன் செயலியைப் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம்.
பெருநகரங்களில்...
- சென்னை போன்ற நகரங்களில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் இரவுப் பணி பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. பெரும்பாலும் நிறுவனத்திலிருந்து நியமிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் அவரவர் இருப்பிடத்துக்கு அருகே இறக்கி விடப்படுகின்றனர். ஆனால், வீடு இருக்கும் இடம் ஒரு குறுகிய பகுதி என்றால் அவர்கள் தெரு முனையிலேயே இறக்கி விடப்படுவார்கள். அது போன்ற சமயங்களிலும், வாடகை வாகனங்களில் வர வேண்டிய இக்கட்டான நிலையிலும் இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தயாராக வைத்திருங்கள்.
- பெண்களுக்காகவும், முதியோருக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியை எந்தவொரு ஆண்ட்ராய்டு அறிதிறன்பேசியிலும், ஐபோனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை நாம் பதிவு செய்து கொள்ள நமது தனிப்பட்ட தொலைபேசி எண், வீட்டு முகவரி, இ மெயில் முகவரி, பிறந்த தேதி, பாலினம், நமது வீட்டில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்கள் அல்லது நெருக்கமான நண்பர்கள் என நமக்கு ஆபத்து என்றால் தெரிவிக்கக் கூடிய அல்லது நமக்கு உதவக் கூடிய மூன்று நபர்களின் தொலைபேசி எண்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நாம் பதிவு செய்ததற்கு அத்தாட்சியாக ஒரு செயல்பாட்டுக்கான குறியீடு, நாம் பதிவு செய்த தனிப்பட்ட அறிதிறன்பேசி எண்ணுக்கு வரும்.
காவலன் செயலி
- காவலன் செயலி இனி உங்கள் அறிதிறன்பேசியில் செயல்படத் தொடங்கி விடும். இதைப் பயன்படுத்துவது எளிதானது.
- தங்களின் ஆபத்துக் காலங்களில், இந்தச் செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் பொத்தானை பெண்கள் ஒரு முறை அழுத்தினாலோ அல்லது மூன்று முறை உதறினாலோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அபாய மணியும், மற்ற மூன்று எண்களுக்கு அவசரச் செய்தியும் சென்று விடும்.
- காவல் துறையினரோடு பேச வேண்டும் என்ற அவசியமில்லை. இதைப் பயன்படுத்தும் பெண்ணின் அப்போதைய இருப்பிடத் தகவல்கள், அந்த இடத்தின் வரைபடம் போன்றவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தானாகவே பகிரப்படும்.
- மேலும், அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசியில் உள்ள ஒளிப்படக் கருவி தானாகவே 15 விநாடிகள் செயல்படத் தொடங்கி அங்குள்ள காட்சிகளைப் பதிவு செய்து காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி விடும். அலைவரிசை தொடர்பு (நெட்வொர்க்) இல்லாத இடங்களிலும் இது செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். எனவே, பெண்கள் அனைவரும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
நன்றி: தினமணி (19-12-2019)