TNPSC Thervupettagam

பெண்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

November 24 , 2020 1518 days 753 0
  • பல்வேறுபட்ட காரணங்களால் பெண்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வரும்போது பொருளாதாரரீதியில் தனித்தியங்க இயலாததால் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு முடிவுகட்டும் வகையில் முக்கியமான தீர்ப்பொன்றைச் சமீபத்தில் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
  • கைவிடப்பட்ட மனைவியும் குழந்தைகளும் ஜீவனாம்சம் கோரி புகார் அளித்த நாளிலிருந்தே அதைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என்கிறது இந்தத் தீர்ப்பு.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக எந்தவொரு சட்டத்தை இயற்றவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15(3) அனுமதிக்கிறது.
  • பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியமும் வாய்ப்புகளையும் வழங்குவதற்குக் கூறு 39 வலியுறுத்துகிறது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாப்பது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகளுள் மிகவும் முக்கியமானதாகும்.
  • மும்பையைச் சேர்ந்த தம்பதிக்கு இடையேயான மணவுறவுச் சிக்கலை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் இந்த இரண்டு கூறுகளையும் இதர சட்டங்களையும் சுட்டிக்காட்டி ஜீவனாம்சம் தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
  • நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி அடங்கிய அமர்வானது 67 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
  • மனைவி மற்றும் அவரைச் சார்ந்திருக்கும் குழந்தைகளின் ‘நியாயமான தேவைகள்’, அவரது கல்வித் தகுதி, அவர் தனக்கென்று தனியான வருமான வாய்ப்புகள் கொண்டவரா, அவ்வாறிருந்தால் அது போதுமானதா என்பனவற்றைக் குடும்ப நல நீதிமன்றங்களும், நீதித் துறை நடுவர்களும், கீழமை நீதிமன்றங்களும் ஜீவனாம்ச வழக்குகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்தத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • மணவுறவுச் சிக்கல்கள் சார்ந்த வழக்குகளில் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் வளர்ந்துவரும் நிலையில், சில தெளிவுகள் மிகவும் அவசியமானவை.
  • இத்தகைய வழக்குகள் பெரும்பாலும் இழுத்தடிக்கப்படுபவையாகவும் அச்சுறுத்துபவையாகவும் பாதிக்கப்பட்ட பெண்களை மிகவும் துயர நிலைக்கு ஆழ்த்துபவையாகவும் இருக்கின்றன.
  • குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - 2005, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125, இந்து திருமணச் சட்டம் - 1955 உள்ளிட்ட வெவ்வேறு சட்டங்களின் கீழாகப் பெண்கள் ஜீவனாம்சம் கேட்கும்போதே, முந்தைய தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு ‘ஒவ்வொரு விசாரணையின்போதும் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்’ என்று உரிமையியல் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்களை இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.
  • இந்தியாவெங்கும் நிலவிவரும் பாலின சமத்துவமின்மையைக் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 128 மற்றும் பிற சட்டங்களின் கீழ் ஜீவனாம்சம் வழங்குவதற்கான ஆணை எவ்வாறு பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
  • கணவனைச் சார்ந்திருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளை ‘வறுமையிலிருந்தும் திக்கற்ற நிலையிலிருந்தும்’ காப்பாற்றவில்லை என்றால், ஜீவனாம்சச் சட்டங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெண்களின் வாழ்வில் நம்பிக்கையின் வெளிச்சத்தை வழங்கியிருக்கிறது.

நன்றி : இந்து தமிழ் திசை (24-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்