TNPSC Thervupettagam

பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் சுதந்திரம்

November 24 , 2024 6 days 23 0
  • சமீப காலமாகப் பெண்கள் தங்களுடைய விருப்பங் களைத் தெரிவிக்கும்போது அவர்களுக்கு நிகழக்கூடிய எதிர்வினைகள் பதற வைக்கின்றன. தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த ஒரே காரணத்திற்காக ஓர் ஆசிரியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் என்னை மிரள வைத்தது. அந்தக் கொலை நடந்தவிதம் மேலும் அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது. பள்ளி வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர் அந்தப் பெண்ணுடன் உரையாடல் நடத்தி அது வாக்குவாதம் ஆன பிறகு கத்தியால் குத்தியிருக்கிறார். அதைக்கூட அங்கிருந்த யாரும் உடனடியாகக் கவனிக்கவில்லை என்று சத்துணவில் வேலை பார்க்கிற பெண் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • வேலூரில் 14 வயதுப் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிராகப் பெருகிவரும் இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் கோரமான பக்கத்தின் அடையாளமாகத்தான் தெரிகின்றன. எத்தனையோ வேலைவாய்ப்புகள், எத்தனையோ பட்டப் படிப்புகள், எத்தனையோ விரிவான உரையாடல்கள்... இப்படி அனைத்தும் இருந்தும் இந்த நவீன உலகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடிதான் உள்ளன.

அறிவுறுத்தப்படும் பலவீனம்

  • ஒரு பெண்ணுக்கு எதிராக, குறிப்பாக ஒரு பெண்ணுடலுக்கு எதிராக எதனால் இவ்வளவு வன்முறை நிகழ்கிறது என்று யோசித்துப் பார்க்கும்போது அவளது பலவீனத்தை ஒரு கருவியாக இந்த உலகம் பயன்படுத்துகிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவளது பலவீனம் என்பது என்ன? அவளுடைய மனம் மட்டுமே. அந்த மனதில் அவள் ஒரு பலவீனமான பிறவி என்கிற எண்ணத்தைப் பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும் இந்தச் சமூகம் அவளுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் அவளும் அதை நம்பத் தொடங்கிவிடுகிறாள். அதற்குப் பிறகு எல்லா இடங்களிலும் தன்னை ஓர் இரண்டாம்கட்டப் பிரஜையாகவே முன்னிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறாள். எங்காவது அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அவள் தன்னைத் தானே சந்தேகிப்பதன் மூலமாக அதைப் புறந்தள்ளி தன்னை இரண்டாம்கட்டப் பிரஜையாக மீண்டும் அமர்த்திக்கொள்கிறாள். அதுவே அவளுக்கு நிறைந்த சௌகரியத்தைத் தருகிறது.

பெற்றோர் செய்யும் நல்லது

  • எத்தனை பெற்றோர் தங்கள் பெண்களின் வாழ்க்கைத் துணை சம்பந்தமான தேர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்? பெரும்பாலும் மதிப்பு கொடுப்பதில்லை. அவர்களாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ‘இதுதான் உனக்கு நல்லது’ என்று அறிவுறுத்துகிறார்கள். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் ‘பெற்றோர் நமக்கு நன்மைதானே செய்வார்கள்’ என்கிற எண்ணத்தில் அதை ஏற்றுக்கொள்கிறாள். அதனால் ஏற்படக்கூடிய எதிர்வினையான பிரதிபலன்களையும் அவளே அனுபவிக்கிறாள், சுமக்கிறாள். இது குறித்துப் பெரிதான குற்றவுணர்வு நிறைய பெற்றோரிடம் இருப்பதில்லை. அவர்களுக்கு எப்போதுமே தங்களை நியாயப்படுத்திக்கொள்ள ஒரு வாதம் இருக்கிறது. ‘எங்கள் பிள்ளைக்குப் பெற்றோராக நன்மையைத்தானே நாங்கள் செய்வோம்’ என்பதுதான் அது. சமூகம் அவர்களுக்கு கொடுத்த லைசென்ஸ் அது. ஆனால், நம்முடைய குழந்தைகள் தனிப்பட்ட நபர்கள் என்கிற ஒரு கருத்து நம்மிடையே பெரும்பாலும் இருப்பதில்லை.

பள்ளிகளில் விழிப்புணர்வு

  • ஒரு பெண்ணின் மனம் குறித்த புரிதல் எப்போதுமே நம்மிடம் இருந்ததில்லை. பெண்களையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறேன். இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்கிற ஒரு திட்டம் பெரும்பாலான பெண்ணிடம் இருப்பதில்லை. அதனால்தான், தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களைச் சுதந்திரமாக இருக்க ‘அனுமதித்திருப்பதாக’ நிறைய ஆண்கள் மார்தட்டி சொல்லிக்கொள்கிறார்கள். அப்படிச் சொல்லிக்கொள்ளும் ஒரு சுதந்திரத்தை நாம் ஆண்களுக்குக் கொடுத்திருக்கிறோம் என்பதைக்கூட அந்தப் பெண்கள் அறிவதில்லை.
  • இவையெல்லாம் மாற வேண்டும் என்றால் குறிப்பாகப் பள்ளிகளில் இது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அது தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்க வேண்டும். அப்படியான ஒரு சூழலில்தான் பத்தாண்டுகள் கழித்தாவது இங்கே சின்னதொரு மாறுதலாவது ஏற்படும். அதுவரை தஞ்சாவூர் இளம்பெண்ணின் கொலை குறித்தும் வேலூர் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும் வெளியாகும் கட்டுரையைப் படித்துவிட்டு அன்றைய தினம் மதிய உணவுக்கு என்ன ‘ஸ்பெஷல்’ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவோம். இதையெல்லாம் மீறி நமக்கு நாமே வேர்களில் நீரூற்றிக்கொள்வோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்