TNPSC Thervupettagam

பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்

April 1 , 2024 109 days 120 0
  • ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியலில் - குறிப்பாகத் தேர்தல் அரசியலில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்துப் பேசுவது அவசியம். பெண்கள் இல்லாமல் இங்கு தேர்தல்களே இல்லை. ‘தாய்மார்களே’ என்றழைத்துதான் எல்லா கட்சியினரும் வாக்கு கேட்டு வருவார்கள். வாக்குரிமையின் மதிப்பை அறிந்து எதற்கும் விலை போய்விடாமல், தங்கள் மதிப்புமிக்க வாக்கை வீணடித்து விடாமல், பெண்கள் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும். ஏனெனில், எளிதில் கிடைத்ததல்ல பெண்களின் வாக்குரிமை... நீண்ட நெடிய போராட்டங்கள் அதன் பின்னணியில் இருக்கின்றன.

சுக்கா, மிளகா பெண்கள் வாக்குரிமை

  • 1893இல் நியூசிலாந்திலும் 1902இல் ஆஸ்திரேலியாவிலும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. பிற நாடுகளில் அதிகாரபூர்வமாகப் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமென்ற கோரிக்கையானது, மகளிர் தினம் உருவாக்கப்பட்டபோதே வலுவாக முன்வைக்கப்பட்டது.
  • 1907இல் உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டபோது, பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது பல நாடுகளில் யாருக்குமே வாக்குரிமை இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், மாநாட்டில் பங்கேற்ற ஆஸ்திரிய நாட்டுப் பிரதிநிதிகளும் மற்றும் சிலரும் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம் என்றும் வாதிட்டார்கள்.
  • அதை மறுத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை அவசியம் என முழங்கியவர் தொழிற்சங்கவாதியான கிளாரா ஜெட்கின் (அவர் காலத்தில் பெண்ணியம் என்ற கருத்தாக்கம் வலுப்பெறவில்லை). அவரது ஆழமான வாதத்தின் அடிப்படையில், ஆண்–பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வேண்டும் என்னும் தீர்மானம் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
  • பெண்கள் வாக்குரிமை கோரிக்கைக்கு ஆதரவாக 1909 பிப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்து, அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் இணைந்து 28ஆம் தேதியன்று அவ்வாறே நடத்தினார்கள்.
  • 1910 ஆகஸ்ட் 26, 27 இரு நாட்கள் உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு மீண்டும் கூடியது. கிளாரா ஜெட்கின் தலைமையில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். நீண்டவிவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதுவும் ஒன்று.
  • 1848 இல் பிரஷ்யாவில் (ஜெர்மனியின் அப்போதைய பெயர்) மக்கள் புரட்சிக்குப் பணிந்த மன்னர், பெண்களுக்கும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். அந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1911 மார்ச் 11 அன்று ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் தொழிலாளி வர்க்கப் பெண்களின் உலக ஒற்றுமைக்கான நாள் முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
  • ‘மேலை நாட்டுப் பெண்கள் இவ்வாறு எழுச்சியுற்றுப் போராடியதன் விளைவாக 18-19ஆம் நூற்றாண்டில் வாக்குரிமையைப் பெற்றார்கள். பின்னர், படிப்படியாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெண்களுக்கும் வாக்குரிமை கிடைத்தது’ என ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகைக்கு 1905இல் எழுதிய கட்டுரை ஒன்றில் மகாகவி பாரதி குறிப்பிடுகிறார்.
  • உலகளாவிய அளவில் நீண்ட நெடிய போராட்டங்கள் வழியாகவே பெண்கள் தங்களின் வாக்குரிமையைப் பெற்றார்கள். ஆரம்ப காலத்தில் அனைத்து நாடுகளிலுமே – ஆணோ பெண்ணோ - பொருளாதாரரீதியில் வளமானவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்த நிலை இப்போது இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • ஆனால், இத்தகைய போராட்டங்கள் எதுவுமின்றி இந்தியாவில் 1950இல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதனால்தான் வாக்குரிமையின் அருமை உணரப்படாமல் இருக்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது. இப்போதும் உலகில் பெண்களுக்கு வாக்குரிமையற்ற நாடு வாடிகன் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியக் கோரிக்கைகள்

  • அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு தயாரித்த ‘தேர்தல் கோரிக்கை சாசனம் 2024’, சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கிறது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் (2013) அமலில் இருந்தபோதும் அதைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
  • அவை களையப்பட வேண்டும். பெண் தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும். தனியார் - அரசு நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையைக் கைவிட்டு, அவர்கள் நிரந்தர ஊழியர்களாக்கப்பட வேண்டும். மாநில அளவிலும் போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்துத் துறைப் பெண்களுக்கும் பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
  • அமைப்புசாராப் பெண் தொழிலாளர்கள் குறிப்பாக, அப்பளத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், பீடி சுற்றுபவர்கள் என எந்தச் சமூகப் பாதுகாப்பும் அற்ற இவர்களின் நலன் குறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ராஜஸ்தான் மாநிலம் சட்டம்இயற்றியதைப் போல் நாடு முழுவதும் சட்டம் இயற்ற வேண்டும்.
  • ஏற்கெனவே உள்ள பெண்களுக்கான சட்டங்கள் மீறப்படுவதைக் கண்காணித்து அதைத் தடுக்க வேண்டும். (உ.ம்) வரதட்சிணைத் தடைச்சட்டம், பெண் கருக்கொலைத் தடைச்சட்டம் - இப்படியான கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் செவிமடுக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும்.

அதிகரிக்கப்படாத பெண் வேட்பாளர்கள்

  • 2024 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டுக்காக 27 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து போராடிக் குரலெழுப்பியதன் விளைவாகப் பெண்கள் இடஒதுக்கீடு பெயரளவுக்கு நிறைவேற்றப்பட்டாலும், புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என்ற காரணிகளை முன்வைத்துப் பெண்கள் இடஒதுக்கீட்டை மேலும் பல ஆண்டுகளுக்கு முடக்கி வைத்திருக்கிறது மத்திய அரசு.
  • எந்த அரசியல் கட்சியும் பெண்கள் இடஒதுக்கீட்டையோ, பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ விரும்பவில்லை (நாம் தமிழர் ஒரு நல்ல விதிவிலக்கு) என்று தோன்றுகிறது. மக்கள்தொகையில் ஏறக்குறைய சரிபாதியாக இருக்கும் பெண்கள், கௌரவமானதோர் எண்ணிக்கையில் அரசியலில் பங்குபெற வேண்டும்.
  • வாக்களிப்பது மட்டுமல்ல பெண்களின் கடமை... அவர்கள் ஆட்சியாளர்களாகவும் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாகவும் மாற வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பெண்களை நிறுத்திக் காக்கவைத்திருப்பது?

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்