- தொழிலாளர் என்று சொன்னதுமே உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடும் ஆண்கள்தான் பலரது மனக்கண்ணிலும் தோன்றுவார்கள். வீட்டிலும் வெளியிலும் நாள் முழுக்கப் பாடுபடும் பெண்களை ஒருபோதும் ‘தொழிலாளர்’ என்கிற வரையறைக்குள் வைப்பதற்குப் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. உழைப்பின் உன்னதத்தையும் தொழிலாளர்களின் பெருமையையும் உணர்த்தும் விதமாக மே 1 அன்று கொண்டாடப்படும் தொழிலாளர் நாளில்கூடப் பெண்களின் உழைப்பைப் பலரும் கணக்கில் கொள்வதில்லை.
- உழைப்பாளர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் 1959இல் நிறுவப்பட்ட உழைப்பாளர் சிலையில் ஒருவர்கூடப் பெண்ணில்லை. இது குறித்து ‘2018இல் பெண் இன்று’வில் வெளியான கட்டுரையில் கவனப்படுத்தியிருந்தோம். கடந்த சில ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்தன. சிலை அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த பிறகும் ஆண்கள் மட்டுமே அந்தச் சிலையில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று சமூகத்தில் ஆணுக்கு நிகராகவோ சில நேரம் ஆணைவிட அதிகமாகவோ பெண்கள் உழைத்தாலும் உழைப்பாளர் சிலையில் பெண்ணுக்கு இடமளிக்கக்கூட நம் சமூகத்துக்கு மனம் இருப்பதில்லை. இவையெல்லாம் பெண்களின் பிரச்சினையாக மட்டுமே சுருக்கப்பட்டுவிடுகின்றன.
- எட்டு மணிநேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் போன்றவற்றை முன்னிறுத்திப் பெண்கள் நடத்திய போராட்டங்களின் வரலாறு நெடியது. அன்றைய ரஷ்யாவில் குழந்தைகளின் பசியாற்றக்கூட உணவின்றித் தவித்த பஞ்சாலைப் பெண் தொழிலாளர்கள் 1917 மார்ச் 8இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடில் திரண்ட பெண் தொழிலாளர்கள், ஆண்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைத்தனர். உணவுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், வரலாற்றையே மாற்றி அமைத்தனர்.
- நியூயார்க்கில் இருந்த ஆடைத் தொழிற்சாலையில் 1911இல் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டுபோன 146 தொழிலாளர்களில் 123 பேர் பெண்கள். பணியிடத்தில் தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு வேண்டும் என்கிற முழக்கத்தோடு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் மிகப் பெரிய சங்கமான ஆடைத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்தில் பெண்கள் பெருவாரியாகச் சேர்ந்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கவும் அந்தப் போராட்டம் வித்திட்டது. ஊதிய உயர்வு கேட்டு லண்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 1949இல் போராட்டத்தில் ஈடுபட்டதும் பாலின அடிப்படையிலான ஊதியப் பாகுபாட்டுக்கு எதிராக ஐஸ்லாந்து பெண்கள் 1975இல் போராடியதும் பெண் தொழிலாளர்களின் சமூகப் பங்களிப்பைப் பறைசாற்றுகின்றன. கேரளத்தில் ஊதிய உயர்வுக்காகப் போராடிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் நாற்காலியில் அமரும் உரிமையைப் போராடிப் பெற்றதும் பெண் தொழிலாளர்களின் போராட்டக் குணத்துக்கு அண்மைச் சான்றுகள். இருந்தபோதும் ’தொழிலாளர்’ என்கிற பட்டியலுக்குள் பெண்களைச் சேர்ப்பதில் உலகம் முழுவதுமே பெரும் மனத்தடை இருக்கிறது. பெண்களை உழைப்பாளர்கள் என்று அங்கீகரிக்கும் சிந்தனை மாற்றத்தோடு ஊதியத்திலும் சமூக நிலைகளிலும் பெண்களுக்குச் சமத்துவம் கிடைக்கப்பெறுவதுதான் மே தினக் கொண்டாட்டத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 05 – 2024)