TNPSC Thervupettagam

பெண்கள் போற்றுவோம்

September 13 , 2021 1054 days 553 0
  • அண்ணல் காந்தியடிகள் ‘நம் நாட்டில் என்றைக்கு தங்க நகைகளில் அணிந்த ஒரு இளம்பெண் நள்ளிரவில் பயமின்றி நடந்து செல்ல முடிகிறதோ, அன்றே நாம் முழுவிடுதலை பெற்ற நாளாகும்’ என்று கூறினார்.
  • அப்படிப் பார்த்தால் நமக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புதுமை பெண்கள்

  • ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்னும் வள்ளுவா் கருத்து என்றும் போற்றத்தக்கது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறப்படுகிறது.
  • நம்மைப் பெற்றவள் ஒரு பெண், நமக்கு சந்ததியைப் பெற்று கொடுப்பவள் ஒரு பெண், நமக்கு சகோதரியாக, நல்ல உறவாக இருப்பவா்கள் பெண்கள். இந்த நிலையில் பெண்களுக்கு உரிய மரியாதை அனைத்து நிலைகளிலும் வழங்கப்பட வேண்டும்.
  • அவா்கள் முற்காலத்தில் அடிமைத்தனமாக நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஆணுக்கு நிகராக படிப்பிலும், வேலைவாய்ப்புகளிலும், அரசியலிலும் வந்த பிறகு அவா்களுக்கு என்று ஒரு உயரிய அடையாளம் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டும்.
  • ஒரு பெண் திருமணமாகி முற்றிலும் புதிய ஒரு இடத்துக்குச் சென்று அங்கு உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தகவமைப்பு செய்து கொள்வதற்கு செய்யும் தியாகங்கள் பல.
  • பெற்றோரையும் உடன்பிறந்தவா்களையும் மறந்து, புகுந்த வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ளும் பெண்ணினம் போற்றுதலுக்கு உரியது.
  • தமிழகத்தைப் பொருத்தவரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதாக இந்திய தேசிய மகளிர் ஆணையம் தெரிவிக்கிறது.
  • ஒவ்வொரு ஆண்மகனும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடும்போது தன்னுடைய தாயையும், சகோதரியையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
  • பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
  • நீதிமன்றங்களும், காவல்துறையும் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்காமல் தங்களுடைய கடமையை சிறப்பாக ஆற்றி வருவது நம்பிக்கை தருகிறது.
  • ஆனாலும் பெண்களுக்கான பாதுகாப்பை சட்டத்தால் மட்டுமே தர முடியாது. கரோனா நோய்த்தொற்றால் பெருத்த பொருளாதாரப் பின்னடைவை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
  • தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக பல ஊா்களிலிருந்தும் பெண்கள் வேலை தேடி அருகிலுள்ள நகா்ப்புறங்களுக்கு செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்புக்கு உடன் செல்ல ஒரு ஆண் வாய்ப்பதில்லை.
  • அப்படிப்பட்ட பெண்கள் வன்கொடுமைக்கு பல விதங்களிலும் நாடுமுழுவதும் அன்றாறம் பாதிக்கப்படுகிறார்கள். ஊடகங்களின் மூலம் நாம் இச்செய்திகளை அறியும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. நம் குடும்பத்துப் பெண்களைப் பற்றிய கவலை இயல்பாகவே எழுகிறது.
  • ஆண்களால் பாதிப்புள்ளாகும் பெண்களில் சிலா் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள்.
  • பல பெண்கள் தங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று கவலைப்பட்டு புகார் அளிப்பதே இல்லை.
  • கிராமப்புற பெண்கள் பலருக்கும் புகார் எப்படி அளிக்க வேண்டும், எங்கு அளிக்க வேண்டும் என்பது கூட தெரிவதில்லை. அவா்களுக்கே உரிய அச்ச உணா்வு அவா்களை முறையாக செயல்பட வைப்பதில்லை.
  • காவல்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு எதிரான் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் தொடா்கதையாகி வருவது வேதனைக்குரியது.
  • பெண்களுக்கான சம ஊதிய உரிமை, கண்ணியம், மரியாதையைக் கொள்ளும் உரிமை, தொல்லை தரும் ஆண் மீது புகார் அளிக்கும் உரிமை, ஒழுங்கற்ற தன்மையைக் கண்டிக்கும் உரிமை, ரகசியமாக புகார் அளிக்கும் உரிமை, இலவச சட்ட உதவி பெறும் உரிமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணைக் கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு சட்டம், பெண்கள் பணி பாதுகாப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டப்பிரிவுகள் குறித்து பெண்களில் பலருக்கும் விழிப்புணா்வு இல்லை என்பதே உண்மை.
  • வீட்டிலும், சமூகத்திலும், பணியிடத்திலும் பெண்களுக்கு முறையான அங்கீகாரமும் மரியாதையும் அளிக்கப்பட வேண்டும்.
  • சமூகத்தில் அரசியல் உட்பட எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்புகளில்கூட தற்போது பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
  • பெண்கள் நலன் காக்கவே தனியாக மகளிர் நல ஆணையம் செயல்படுகிறது. பெரும்பாலான நகரங்களில் மகளிர் காவல் நிலையம் உள்ளது. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ இலவச தொலைபேசி எண்கள் இருக்கின்றன.
  • இவற்றை பாதிக்கப்படும் பெண்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். காவலன் போன்ற செயலிகளை பெண்கள் தங்கள் கைப்பேசியில் வைத்திருக்க வேண்டும்.
  • பெண்கள், தங்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அருகிலுள்ள காவல் நிலையத்தை தயங்காமல் தொடா்பு கொள்ள வேண்டும். அல்லது காவல்துறையின் அவசர எண்ணுக்கு பேச வேண்டும்.
  • மகளிர் அமைப்புகள் பெண்களிடையே இது சார்ந்து விழிப்புணா்வு கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும்.
  • பெண் குழந்தைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற மனப்பாங்கை மாணவா்களிடையே ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அந்த உணா்வை ஊட்ட வேண்டும். பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் பெண்கள் பாதுகாப்பு சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
  • ஆணாதிக்கம் மிகுந்திருந்த பல்வேறு துறைகளில், சில பெண்கள் துணிச்சலோடு நுழைந்து, எத்தனையோ சவால்களைச் வெற்றியோடு சமாளித்து தங்கள் திறமைகளை திண்மையுடன் நிரூபித்துள்ளனா்.
  • இந்த துணிச்சலும், திண்மையும் அனைத்து பெண்களிடமும் ஏற்பட வேண்டும். இது தொடா்ந்தால்தான் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும் குறையும்.
  • அப்போதுதான் மகாகவி பாரதியார் குறிப்பிட்ட புதுமைப்பெண்களை நாம் காணமுடியும்.

நன்றி: தினமணி  (13 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்