TNPSC Thervupettagam

பெண்ணறம் பேணுவோம்

September 7 , 2019 1908 days 1143 0
  • இன்றைய சமூகமானது கடுமையான ஏற்றத் தாழ்வைக் கொண்டு வளர்ந்து வருகிறது. மனிதர்களுக்கிடையே, மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள், மானுட மாண்பிற்கு எதிரானது. மனித நாகரிகம் முன்னோக்கிச் செல்வதாக தோன்றினாலும், சமத்துவமின்மைகளும், பாகுபாடுகளும் பல்வேறு வடிவங்களில் கொடூரமாகத் தொடர்கின்றன.

பெண்கள்

  • அதிலும் குறிப்பாக, அனைத்துத் துன்பங்களும்  பெண்கள் மீதே விழுகின்றன.  உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.  நாட்டின் வளர்ச்சிப் போக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் அவர்கள் உயிர் வாழ்தலையே கேள்விக்குறியாக்குகிறது என்றார் பொருளாதார மேதை அமர்த்தியா சென்.
    மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற கவிமணியின் வரிகள் பெண்களாய் பிறந்தவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆனால், இதிகாசக் காலத்திலும், புராண காலத்திலும், இன்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் தீர்ந்தபாடில்லை.  
  • லண்டனிலிருந்து வெளியாகும் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் என்ற அறக்கட்டளை கடந்த 2018-ஆம் ஆண்டு  வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலகிலேயே பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியாவை சுட்டிக்காட்டியிருந்தது.  2012-இல் புது தில்லியில் நடந்த நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்கள் துன்பங்கள் குறித்தும் மக்களிடைய விழிப்புணர்வு ஏற்பட்டது என்றாலும், அது இன்று கானல்நீராகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு...

  • நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுப்படுத்தப்பட்டது. 2013-இல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது.  இந்தச் சட்டப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 376-ஏ பிரிவின் கீழ் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.  
  • இந்தச் சட்டம் கொண்டு வந்த பிறகு, 2013-இல் பதிவு செய்யப்பட்ட, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்தது. இந்த வலுவற்ற சட்டங்களால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.  உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னிடம் வேலைக்காக பரிந்துரை கேட்டு வந்த பெண்ணிடம்  தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் இன்று நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்காக வெகுண்டெழுந்து  போராடி வருகிறார். 
  • தாங்கள் கொடுத்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததால் அவரது தந்தை, காவல் துறையை அணுகியபோது, அவர் மீதே பொய் வழக்குப் போட்டு, கைது செய்யப்பட்டு, அவரையும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். தனது இரண்டு சித்திகள் மற்றும் வழக்குரைஞருடன் ரே பரேலியில் சிறையில் அடைபட்டிருக்கும், தனக்கு ஆதரவாக இருந்த மாமாவை சிறையில் சென்று  பார்க்க காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் இரண்டு சித்திகளும் உயிரிழந்ததுடன், வழக்குரைஞரும், அந்தப் பெண்ணும் உயிருக்குப் போராடி வருகிறார்கள்.  ஊடகங்களின் அயராத முயற்சியால் இப்போதுதான் இந்தச் சம்பவம் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது; நீதிமன்றமும் கவனத்தில் கொண்டுள்ளது.

உதாரணம்

  • மேற்கு வங்கத்தில் கீதாஞ்சலி ஏழை, எளிய மக்களுக்கு வீடுகட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்த ஒரு பெண்ணிடம்,  ஆளும் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கையூட்டுப் பெற்று, பின் தனக்கு வீடு ஏதும் வழங்கப்படாததால், அப்பெண்மணி அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஆத்திரமடைந்த அந்தப் பஞ்சாயத்து உறுப்பினரும், அவரது அடியாள்களும் அந்தப் பெண்ணை வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
  • முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் பெண்கள் நிலை மேன்மேலும் தாழ்ந்து வருகிறது.  
  • பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீருவது முயற்கொம்பே என்கிறார் கவிஞர் பாரதிதாசன்.  சமுதாயம் என்னும் மனிதனுக்கு அமைந்த இரு கண்களே ஆண், பெண் எனும் பாகுபாடு.  
  • ஆணுக்குப் பெண் சமம் என்ற எண்ணம் வளர்ந்தோங்கி மண் முதல் விண் வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வெற்றி நடைபோட்டு வரும் இந்த வேளையில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது நம் நாட்டையே அழிப்பதற்கு ஒப்பாகும்.  
  • நம் மண்ணை தாய் மண் என்றும், நாட்டை தாய் நாடு என்றும், மொழியை தாய் மொழி என்றும் போற்றி மகிழ்கிறோம். ஆறுகளையும் நதிகளையும் பெண் பெயரிட்டு புனிதமாகக் கருதி வணங்குகிறோம்.  மகா சக்தி, ஆற்றலின் உறைவிடம், கருணை, அமைதி, பொறுமை ஆகியவற்றின் உறைவிடம் என்று கருதப்படும் பெண்கள் இன்று தன் சக்தியை உணராமல், தன் உயர்விழந்து, உணர்விழந்து, சமத்துவம் இழந்து, தன் மதிப்பை இழந்து, சில நேரங்களில், சில இடங்களில் தன்மானத்தையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு

  • புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையடுத்து, அவரது கணவர் இழப்பீடு கோரி தொடந்த வழக்கில்,  ஒரு பெண் என்பவர் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல அவர்தான் அந்தக் குடும்பத்தின் சமையலாளர், பணியாளர்,  நிதியமைச்சர், கணக்காளர், அதற்கும் மேல் எத்தனையோ பணிகள் அவருக்கு உள்ளன; உலக அளவில் குடும்பத் தலைவி என்பவரது சம்பளமற்ற வேலை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பது விவாதத்துக்குரியது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு வழங்கியது.
    உலகில் முதல் தொழிற்சாலையை நிறுவியவரும் ஒரு பெண்தான். அவர்தான் குடும்பம் எனும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் குறிப்பாக  ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்பதுபோல் நாளும் பணியாற்றி உழைப்பின் மகத்துவத்தை ஊருக்கு உலகுக்கு உணர்த்துகிறார்.  
  • ஒரு  வீட்டில் பெண்ணின்றி  ஒளி இல்லை, ஒழுங்கு இல்லை, மகிழ்ச்சியில்லை எதுவுமே இல்லை. ஒருவர் எவ்வளவுதான் ஒப்புயர்வற்றவராக இருந்தாலும், ஒரு பெண் ஆற்றும் பணியை எத்தனை வேலைக்காரர்களைக் கொண்டும் நிரப்ப முடியாது. அந்தப் பெண்ணின் அன்பும், ஆசையும், பக்தியும் கலந்த உழைப்பும் இன்றி எந்தப் பண்டிகை நாளும் சிறக்காது.
  • அதனால்தான் நாம் பெண்களை குடும்ப விளக்கு, குங்குமச் சிலை,  குலமகள், மங்கலச் செல்வி,  குடும்பம் எனும் கோயிலில் வாழும் காவல் தெய்வம் என்கிறோம். நம் பெண்களாலேயே வளரும் வீடும், வாழும் நாடும், மணம் பெருகுகிறது.
    ஒரு பெண் தாயான பின்பு, தன் குழந்தை அறியாமை இருளில் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காகக் கல்வியூட்டி, அறிவொளி அளித்து, வீட்டில், நாட்டில் தலை நிமிர்ந்து வாழச் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு ஆக்கம் சேர்க்கிறார்.  
  • நற்பண்புகளைப் போதிக்கிறார். தவறு செய்தால் திருத்துகிறார். அச்சம் அகற்றும் அருந்துணையாக எப்போதும் இருக்கிறார். ஆபத்து நேர்ந்தால் காக்கும் பாதுகாவலராக விளங்குகிறார். தன்னையே தியாகம் செய்யவும் துணிகிறார். இத்தகைய தாய்மைப் பண்புதான் உலகிலேயே தலையாய தலைமைப் பண்பு.  ஒரு நாட்டின் செல்வம், கல்வி, நாகரிகம் முதலியவற்றின் வளர்ச்சிக்கு அந்த நாட்டுப் பெண்களின் அறிவே கருவியாகும்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி

பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்ணுக்குள்ளே சில மூடர்- நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்

                              என்றார் மகாகவி பாரதியார்.

  • மேலும், அவர் அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்/அவலமெய்திக் கலையின்றி/வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டீரோ? என்றும் அவர் உரைக்கிறார்.
  • பெண்கள் விரும்பாத எந்தச் சடங்குகளையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது.  அணிகலன்களையும் அணிய வற்புறுத்தக் கூடாது.  இவை அவர்களின் அறியாமையின்  அடையாளமாகவே இன்றும் உள்ளன.

அறிவு மற்றும் ஆற்றல் 

  • அறிவும், ஆற்றலும் ஒருவருக்கு மட்டுமே சொந்தமல்ல. அது அனைவருக்கும் சமம். எந்த நாட்டில் பெண்கள் அமைதியின்றி போராடுகிறார்களோ, அந்த நாடு முன்னேறியதாக சரித்திரம் இல்லை.  அறிவு ஒளியைப் பாய்ச்சி, சரியான கல்வி முறை அவர்களுக்கு அளிக்கப்படுமாயின் இந்தியப் பெண்கள் உலகத்திலேயே மிகச் சிறந்த லட்சியப் பெண்களாக உருவாவார்கள் என்றார் சுவாமி விவேகானந்தர்.
    ஒரு தாய், ஓர் ஊர்த் தலைவனுக்குச்  சமம் என்பார்கள்.  ஒரு குடும்பம், ஒழுக்க நெறியில் உய்து, உயர்வடையவும் காரணம் பெண்தான்.  
  • பெண்கள் இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது. அது புலி, சிங்கம் போன்ற கொடுமையான விலங்குகள்  வாழும் காடாகவும், ஆள், அரவம், புல், பூண்டற்ற பாலைவனமாகவும் ஆகிவிடும்.
  • எந்த நாடு பெண்மையைப் போற்றுகிறதோ, அதுவே நாடு முன்னேறுவதற்குமான   முதல் படி. பெண்களைப் போற்றாத நாடு என்றும் ஏற்றம் பெறாது  என்பது தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் அமுத மொழி.  வீடு உயர்வடைய, நாடு நலம் பெற,  உலகம் உய்ய,  ஊக்கம் ஊட்டி  பெண்ணறம் பேண உறுதி ஏற்போம்.

நன்றி: தினமணி (07-09-2019)  

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்