TNPSC Thervupettagam

பெண்மை வெல்கென்று கூத்திடுவோம்

September 28 , 2023 471 days 470 0
  • மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடிய மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்து, பின்னர் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளதால் அம்மசோதா நிறைவேறியது. இதனால் அரசியலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். மகளிர் மசோதா கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
  • 1996-இல் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஐக்கிய முன்னணி அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது. மக்களவையில் நிறைவேறாததால் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து கீதா முகர்ஜி தலைமையிலான கூட்டு நாடாளுமன்றக் குழு பரிந்துரைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அதே ஆண்டு 1996 டிசம்பர் 9-ஆம் தேதி கீதா முகர்ஜி தலைமையிலான குழுவின் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், 1998-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் இந்த மசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால், அப்போதும் தோல்வியில்தான் முடிந்தது.
  • 1999-இல் மீண்டும் இந்த மசோதாவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிமுகம் செய்தது. ஆனாலும், நிறைவேற்றப்படவில்லை. 2002-இல் மக்களவையில் பெரும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதுவும் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் தொடர் முயற்சியின் விளைவாக 2003-இல் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் நிறைவேற்றப்படவில்லை.
  • 2008-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இம்மசோதாவை அறிமுகம் செய்தது. அதன் பின்னர் நிலைக்குழுவுக்கும் அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு 2010-இல் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இதனால் மசோதா அந்த முறையும் நிறைவேற்றப்படவில்லை.
  • பா.ஜ.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று கூறியது. அதன்படி தற்போது மசோதா நிறைவேறியிருக்கிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் நிகழ்வில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறியது.
  • அரசியலில் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும் பெண்களின் பங்களிப்பை இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா உறுதி செய்திருக்கிறது. மகளிருக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் ஆண்டாண்டு காலம் பெரும் பின்னடைவை மனிதகுலம் சந்தித்திருப்பது வேதனை அளிக்கக் கூடியது. வேட்டையாடுகிற ஆதிகாலத்தில் வேட்டைச் சமூகத்தின் தலைமைப் பீடமாக இருந்தவர்கள் பெண்களே. காலப்போக்கில் அவர்களின் உரிமைகளும், உணர்வுகளும் நசுக்கப்பட்டு அமுக்கப்பட்டு ஆணாதிக்கம் மேலோங்கியது.
  • மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அரசியல் சாசன 128-ஆவது திருத்த மசோதா என அழைக்கப்படுகிறது. இது அரசியல் சாசன திருத்தம் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களவையில் விவாதம் முடிந்த பிறகு, வாக்கெடுப்பில் 454 பேர் ஆதரவும், 2 பேர் மட்டுமே எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆகவே, இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியிருக்கிறது.
  • இருந்தபோதிலும், 2024 மக்களவைத் தேர்தலில் இது அமலுக்கு வராது. தேர்தலுக்குப் பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் தொகுதி வரையறை செய்து, அதன் பின்னர் நடைபெறும் தேர்தலில்தான் இந்த மசோதா நடைமுறைக்கு வரும்.
  • பெண்களைப் போற்ற வேண்டும். சங்ககாலப் பெண்கள் ஆண்கள் அளவுக்கு சமஉரிமை பெறவில்லை என்றாலும் அடிமைகளாக வாழவில்லை. சமயம், கல்வி, காதல் ஆகியவற்றில் உரிமை பெற்ற மகளிராய் திகழ்ந்தனர். சங்க காலத்தில் நச்செள்ளையார், நன்முல்லையார், நப்பசலையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளிவீதியார், ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பது தமிழர்கள் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.
  • இதன் தொடர்ச்சிதான் கிராம பஞ்சாயத்துகளில் தொடங்கி, நகர, மாநகராட்சி வரைக்குமான அனைத்து இடங்களிலும் பெண்கள் உயர்பதவிகளைப் பெற்று அரிய சேவைகளைச் செய்து வருகிறார்கள். இதைத்தான் மகாகவி பாரதியார் "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று கூறினார். இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றியிருப்பதன் மூலம், பாரதியாரின் கனவு நனவாகியிருக்கிறது. பட்டங்கள் பெருமளவு பெண்கள் கைகளில் வசப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், சட்டங்கள் இயற்றும் இடத்தில் பெண்கள் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
  • பெண்கள் சுயசிந்தனையும், ஆளுமையும், தனித்துவமும் பெற வேண்டும். அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு ஆண்கள் இயக்குவது பெண்களின் தனித்த ஆளுமையை கேள்விக்குறியாக்கி விடும். ஊராட்சித் தலைவர்கள் முதல் அனைத்து உயர்பதவிகளில் இருக்கும் பெண் பிரதிநிதிகளின் குடும்பத் தலைவர்கள் ஆதிக்கம் செய்வதை விட்டொழிக்க வேண்டும். அப்படி ஏற்படுகிற போதுதான், "பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா, பெண்கள் வெல்கென்று கூத்திடுவோமடா' எனும் பாரதியின் வரிகள் உண்மையாகும்.
  • மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மகளிர் தினம் என்றால் என்ன என்று கூடத் தெரிவதில்லை. பெரும்பாலான பெண்கள் இன்னும் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பல கோணங்களில் பெருகி இருப்பதைக் காண முடிகிறது. ஆகவேதான், பெண்கள் வலிமையற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நிலை இன்னும் உருவாகவில்லை. பெண்கள் முன்னேற்றம் என்பது ஒரு சார்பாக இல்லாமல், அனைத்து பெண்களும் முன்னேறி, சமூகத்தில் சம உரிமையும் அவர்களுக்கு கிடைத்தாக வேண்டும்.
  • நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே அதிகார மட்டத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கை இருந்து வருகிறது. செப்டம்பர் 1996-இல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் ஆட்சிக் காலத்தில், இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. ராஷ்ட்ரீய ஜனதாதள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களவையில் இந்த மசோதாவின் நகலைக் கிழித்து எறிந்ததை நாம் மறக்க முடியாது.
  • சுதந்திரம் அடைந்த பிறகும் பெண்களுக்கு அரசியலில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பது கடந்த 75 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான கசப்பான அனுபவமாகவே இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைமை ஆண்களின் கைகளில் இருப்பதால் நாட்டில் பெண்களின் நிலையை மேம்படுத்த இந்த மசோதா நடைமுறைக்கு வருவது பெரும் மாற்றத்தை விளைவிக்கும்.
  • பெண்களின் நிலை குறித்து சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தாலும் இன்னும் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதே எதார்த்தம். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் பாலின சமத்துவம் மேம்படும்.
  • 1952-இல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இப்படி ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து தற்போதைய 17-ஆவது மக்களவையில் பெண்களின் சதவீதம் 14. நமது நாட்டில் கடந்த காலத்தில் 62 பெண் எம்.பி.க்கள் இருந்த நிலையில், தற்போது 78 பெண் எம்.பி.க்கள் உள்ளனர்.
  • வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட, இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் சதவீதம் குறைவாகவே உள்ளது. இனி, மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 179-ஆக உயரும் என்பதுடன், 81 பெண்களை மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கலாம்.
  • மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதன் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். தற்போது மக்களவையில் 131 இடங்கள் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 43 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த 43 இடங்களும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான மொத்த இடங்களில் ஒரு பகுதியாக கணக்கிடப்படும்.
  • அதாவது 181 இடங்களில் 138 இடங்கள் பொதுப்பிரிவினருக்கான இடங்கள். இவை தற்போது மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், இந்த எண்ணிக்கை மாறக்கூடும்.
  • ஒவ்வொரு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப் பிறகு மகளிருக்கான இடங்கள் சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று மசோதா கூறுகிறது. இது நாடாளுமன்றத்தால் பின்னர் தீர்மானிக்கப்படும். இந்த அரசியல் சட்டத் திருத்தம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க அங்கீகாரம் அளிக்கிறது. இருப்பினும், மகளிருக்கான இடங்களில் சுழற்சி முறையும் தொகுதி மறுசீரமைப்புக்கு தனி சட்டமும் அவசியமானவை.

நன்றி: தினமணி (28 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்