- கள்ளிப்பால் ஊற்றி குழந்தையைக் கொல்லும் காலம் மாறி, கருவிலேயே பெண் சிசுவைக் கொலை செய்யும் காலத்தில் வாழும் சமூகத்தில் "காப்போம் பெண் குழந்தைகளை' என்ற முழக்கத்துடன் ஆரோக்கியம், மன நலம், சிறந்த கல்வி, நலமான வாழ்க்கை, சமூக அந்தஸ்து முதலானவை ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும்போது தேர்ச்சி விகிதம் அதிகம் பெறுவது பெண் குழந்தைகள்தான். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இன்படி கல்வியறிவில் ஆண்களைவிட பெண்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். இதற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு கொடுக்க இந்தச் சமூகம் மறுப்பதுதான்.
தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு
- தேசிய குடும்பநல கணக்கெடுப்பு 3-இன்படி 33 சதவீத பெண் குழந்தைகள் எடை-வளர்ச்சி குறைவானவார்களாக இந்தியாவில் வாழ்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காததே இதற்குக் காரணம்.
உலகில் பெண் குழந்தைகள் திருமணம் அதிகம் நடக்கும் 10 நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலகில் 70 கோடி பெண் குழந்தைகள் திருமணம் நடக்கிறது; அதில் 33 சதவீத பங்களிப்பை இந்தியா தருகிறது என்கிறது யுனிசெப். பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பப்படும் பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
- மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இன்படி இந்தியாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 940 பெண் குழந்தைகள் பிறக்கின்றன. கர்ப்பகாலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கருக் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கருவிலேயே பெண் சிசுவைக் கொலை செய்வதுதான் இந்தப் பாலின வேறுபாட்டுக்குக் காரணம்.
- இந்தியாவில் 34 சதவீத வளர்இளம் பெண்கள் (15 - 19 வயதுக்குட்பட்ட) பெண்கள் தன் கணவனாலோ அல்லது மற்றவர்களாலோ பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்கிறது யுனிசெப் ஆய்வு முடிவு.
இந்தியாவில் 70 சதவீத பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், அவர்களின் குழந்தைப் பருவம் கவனிக்கப்படாததுதான். ஆண் - பெண் பாலின விகிதம் குறைவாக உள்ள நாடு இந்தியா.
- ஆண் - பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாகக் காணப்படுவதற்கு, பெண் சிசு கருக் கொலையைச் செய்யும் மனிதர்களே காரணம். புனிதமான பெண் இனத்தை வாழவிடாமல் கருவிலே கொலை செய்வது பாவச் செயல். அந்த பாவச் செயலை இந்த விநாடியிலிருந்து நிறுத்த சபதம் ஏற்போம்.
கலாச்சார நம்பிக்கை
- பெண் குழந்தைக்கு எதிரான கலாசார நம்பிக்கை கொண்ட மக்களின் மனநிலையிலும் மாற்றம் வந்தால், பெண் சிசுக் கொலையை 100 சதவீதம் தடுக்கலாம். மேலும், பாலினம் கண்டறிதல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்கள், பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தினால் பெண் சிசு கருக் கொலையைத் தடுக்கலாம்.
- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-இன்படி, தமிழகத்தில் 14 வயதுக்குக் குறைவாக 85,000 பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்திருக்கின்றன. மேலும், தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் மக்கள்தொகையில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் திருமணமானவர்கள். 18 வயதுக்கு முன் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதால், அவர்கள் உடல்-மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.
- புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் குழந்தைகளைச் சுமக்கும் தாயாக பெண் குழந்தைகள் மாறுவது வேதனைக்குரியது. இதனால், பெண் குழந்தைகளின் கனவு சிதைக்கப்படுகிறது. பெண் குழந்தைகளில் சிலர் திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது வேதனைக்குரியது.
- இதைத் தடுப்பது எப்படி? பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திலும், கல்வி அறிவு குறைவான குடும்பத்திலும் உள்ள பெண் குழந்தைகளுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். முக்கியமாக, ஒரு பெண் குழந்தை பள்ளிப் படிப்பை முழுவதும் முடித்து, கல்லூரிக்குச் செல்லும் நிலையை நாம் உருவாக்கினால், பெரும்பாலான பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தலாம். எனவே, பெண்களின் கல்வி உறுதித் திட்டத்தை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
- பெண் குழந்தைகள் திருமணம் தடுப்புச் சட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படி மீறுவோர் மீது சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடப்பது குறித்து யாராவது அறிந்தால், குழந்தைகள் உதவி எண் 1098-க்கு தகவல் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும்.
ஊட்டச்சத்து உணவு
- மேலும், பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து வகையான குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை ஆசிரியர்களும், சமூகநலத் துறையும் மாணவர்களிடையே கொண்டு சென்று பெண் குழந்தைகள் சமூகத்தை ஊட்டச்சத்து மிக்க சமுதாயமாக உயர்த்தினால், நாளைய இந்தியாவின் தாய் - சேய் நலம் காக்கப்படும்.
- பெண் குழந்தைகளின் உரிமைகளான சரிவிகித ஊட்டச்சத்து , நல்ல உடல்நலம், முறையான உயர் கல்வி முதலானவற்றை வழங்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு இணையான வன்முறை, பாலியல் கொடுமையற்ற சமூக வாழ்க்கை, பதினெட்டு வயதுக்கு மேல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முதலானவற்றை உறுதி செய்ய வேண்டும்.
கருவில் பெண் சிசுவைக் கலைக்காத, பெண் குழந்தை பிறப்பை பெருமையாகக் கருதும் சமூகத்தை உருவாக்குவோம். வாருங்கள் கைகோப்போம்... பெண் குழந்தைகள் நலம் நோக்கி...
நன்றி: தினமணி (24-01-2020)