- ‘பெண் சிசுக் கொலைக்கு முற்றுப்புள்ளி எப்போது?’என்னும் தலைப்பில் ஆகஸ்ட் 8 அன்று வெளியான தலையங்கம் வாசித்தேன். ‘ஆண் என்றால் வரவு, பெண் என்றால் செலவு என்கிற எண்ணம் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மக்கள் மனதில் வேரோடிப் போயிருப்பது இந்த அவலத்துக்கு ஒரு காரணம்’ என்று தலையங்கம் சொல்கிறது. அதாவது, இது பண்டைய சமுதாயத்தின், அநாகரிக அவலம், இன்றைய நவீன, நாகரிக இந்தியாவில் எப்படித் தொடரலாம் என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- உண்மையில், தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலை அதிகம் நடப்பதாக அறியப்பட்ட சில சமுதாயங்களில் இது பாரம்பரியப் பழக்கம் அல்ல; சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட விபரீத வீழ்ச்சி. பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற கணக்கு) பெரும் சரிவடைந்தது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். இப்பிரச்சினை குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அதன் அடிப்படையில் சில கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்திருக்கிறேன்.
- முந்தைய தலைமுறைகள் அறியாதது: பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளின், தொடுக்கப் படும் வன்முறைகளின் இறுதி வடிவம் பெண்ணினத்தையே அழிக்கும் முயற்சி. இக்கொடுமை இப்பகுதி மக்களால் பல தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்படும் பழக்கமல்ல என்பதைத் தெரிந்துகொண்டதுதான் என்ஆய்வு எனக்குக் கற்பித்த முதல் பாடம்.
- கடந்த நூற்றாண்டின் இடைப் பகுதியில்தான், பல தாக்கங்களின் காரணமாகத் தோன்றி, வெகு விரைவில் விஷம்போல் இது பரவியது. இப்பகுதிகளின் அனைத்து கிராமங்களிலும் கிடைத்த பதில் ஒன்றுதான். வரதட்சிணையும் திருமணம் தொடர்பான செலவுகளும்தான் பெண் சிசுவைக் கொல்லக் காரணம். இந்த அவலங்கள் முந்தைய தலைமுறைகள் அறியாதவை.
- இப்பகுதியின் பெரும்பான்மை சமுதாயத்தின் பாரம்பரிய நிறுவனங்களும் நெறிமுறைகளும் பழக்கவழக்கங்களும் மேல் சாதி, சம்ஸ்கிருதமயக் கலாச்சாரத்திலிருந்து - இந்நாட்டின் ஒரே கலாச்சாரம் என்று இன்று அடையாளம் காட்டப்படும் கலாச்சாரத்திலிருந்து - பெரிதும் வேறுபட்டவை. திருமணம் என்பது இங்கு கலைக்க முடியாத புனித நிறுவனமல்ல.
- மணமுறிவுகள் சாதிப் பஞ்சாயத்துகளால் எளிதில் மேற்கொள்ளப்பட்டதும், ஆண்கள், பெண்கள் இருபாலருமே பல முறை திருமணம் செய்துகொண்டதும்அத்தகைய வேறுபாடுகளில் சில. பல முறை திருமணம் செய்து கொண்ட பல பெண்களை என் ஆய்வின்போது சந்திக்க முடிந்தது.
வரதட்சிணையின் வரவு
- தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான சாதிகளில், பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் வரதட்சிணை என்பது பாரம்பரியப் பழக்கம் அல்ல. மாறாக, மாப்பிள்ளை வீட்டில் திருமணச் செலவுகளை ஏற்றுக்கொள்வதும், மணமகளுக்குப் பரிசம் கொடுப்பதும்தான் 60 ஆண்டுகள் முன்பு வரை வழக்காக இருந்தது. வரதட்சிணை காரணமாகவே பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன என்றால், வரதட்சிணையின் வரவுக்கு முன், பெண் சிசுக் கொலை என்பது இந்தப் பகுதிகளில், அந்தச் சமுதாய மக்களிடத்தில் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை.
- 1950களில் தொடங்கி, இப்பகுதிகள் பெரும் பொருளாதார மாற்றங்களுக்கு உள்ளாகின. அதன் விளைவாக, மக்களின் வாழ்க்கைமுறையும், மதிப்பீடுகளும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாயின. பெண்ணின் தாழ்ச்சி தொடங்கிற்று.
- வைகைக் கால்வாய்கள் கட்டப்பட்ட பின், வறண்டுகிடந்த அந்தப் பூமி வளம் காணத் தொடங்கிற்று. பாசனம் பெற்ற பகுதிகளில் நடுத்தர, பெரும் நிலஉடைமை, வர்த்தக, புதுப் பணக்கார வர்க்கம் உருவானது. இவ்வர்க்கத்தின் மதிப்பீடுகள் பெண்ணின் சுதந்திரத்தை, சுயசார்பை முழுவதும் அழிப்பவை.
- இந்தப் புதுப் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், வெளியில் சென்று உடலுழைப்பில் ஈடுபடுவது கெளரவக் குறைவு என்று கருதப்பட்டது. அந்தப் பெண்கள் விவசாயம், மற்ற கிராமத் தொழில்கள், கூலிவேலை ஆகியவற்றில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது. பெண் வீட்டுக்குள் சிறைப்படுத்தப்பட்டாள்.
சங்கிலித் தொடர் விளைவுகள்
- இப்பகுதிகளின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெரும்பாலானோர், மேல் சாதிகள் எனப்பட்டோரின் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினால்தான் தங்களதுசமூக கெளரவம் உயரும் என்ற சாதிய சமுதாய-சம்ஸ்கிருதமய முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர்.
- பெண் உடலுழைப்பில் ஈடுபடுவதைத் தடுத்து, வீட்டினுள் அடைக்கப்படுவதும், அவள் ஆணைச் சார்ந்தவளாக மாறியதும், சுமையானதும், அதனால் வரதட்சிணை தோன்றியதும், ‘பெண் வேண்டாம்’ என்றுசிசுக் கொலை தொடங்கியதும் தொடர் சங்கிலியாகத் தொடர்ந்தன. இந்த விபரீதம் தடுக்கப்பட வேண்டும் என்றால், பெண் தாழ்ந்தவள் என்ற முன்னேறிய வகுப்பினர் மத்தியில் வேர் கொண்டிருந்த விழுமியங்கள் கேவலமானவை என்ற புதிய சமூக நெறி உருவாக வேண்டும்.
- தலையங்கம் பரிந்துரைக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம் பயனளித்தது என்பதற்கான ஆதாரம் என்ன என்பது தெரியவில்லை. கடுமையான சட்டங்கள் கறாராக நிறைவேற்றப்பட வேண்டும். வரதட்சிணை வாங்குபவர்களும், கொடுப்பவர்களும், ஆடம்பரத் திருமணங்கள் செய்பவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
- அரசுப் பணியில் இருப்பவராயின், பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். பகட்டுத் திருமண மண்டபங்கள், உணவகங்கள் மூடப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்கள் பல வகைகளில் ஆதரிக்கப்பட வேண்டும். கருக்கலைப்பில் ஈடுபடும் மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பெண் சிசுவை அழிக்காமல் தடுப்பதற்கு இலவசக் கல்வி போன்ற அரசுத் திட்டங்கள் ஓரளவு தான் பயனளிக்கும். பெண் இரண்டாம் தரம் என்கின்ற கலாச்சாரம், அடித்தட்டு மக்களிடம் மட்டுமல்ல, நடுத்தர, மேல் வர்க்க, சாதியினரின் மனங்களிலும் ஆழப் பதிந்திருக்கிறது. அவர்களிடமிருந்துதான் கீழே பரவுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
நன்றி : இந்து தமிழ் திசை (18– 08 – 2023)