TNPSC Thervupettagam

பெண் தொழில்முனைவோரை அதிகளவில் உருவாக்கிய முத்ரா

April 30 , 2023 623 days 375 0

  • கடந்த 2014 மே மாதம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியைப் பிடித்தது. 2014-15-ம் ஆண்டு வங்கிகள் வாராக்கடனால் திணறிக் கொண்டிருந்தன. அந்த சூழலில் சுய வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் அறிமுகம் செய்தார்.
  • மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அது சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு எந்த அளவில் பங்கு வகித்துள்ளது என்பதைப் பார்ப்போம். குறு நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் மறுநிதி முகமை என்பதன் சுருக்கம்தான் முத்ரா (MUDRA).
  • குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு சுலபமாக கடன் கிடைப்பதை உறுதி செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். அத்துடன், சிறு வியாபாரம், சுயதொழில் செய்ய விரும்புவோர், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கும் முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்படுகிறது.
  • குறிப்பாக சிற்றுண்டி கடை, பெட்டி கடை, தள்ளுவண்டி கடை, முடி திருத்தும் நிலையம், பியூட்டி பார்லர், துணி கடை, தையல் கடை, பேக்கரி, வாகன பழுதுபார்ப்பு கடை, கைவினைப் பொருள் உற்பத்தி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலில் ஈடுபட விரும்புவோர் அதற்கு தேவையான முதலீடு இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பெறும் நிலை இருந்தது. இதுபோன்ற விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கும் உதவும் வகையில்தான் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
  • அதேநேரம் வேளாண்மை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட மாட்டாது. முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், சிறுகடன் நிறுவனங்கள், ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. எவ்வித ஈட்டுப் பிணையமும் இல்லாமல் கடன் வழங்கப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். கடன் பெற விரும்புவோர் மேற்கண்ட ஏதாவது ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கிக் கிளையை அணுகலாம்.
  • முத்ரா திட்டத்தின் கீழ் தருண், கிஷோர் மற்றும் ஷிஷு என 3 பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது. ஷிஷு பிரிவின் கீழ் ரூ.50 ஆயிரம் வரையிலும் கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ.50 ஆயிரம் வரையிலான கடனுக்கு எவ்வித நடைமுறை கட்டணமும் கிடையாது. ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடன்களுக்கு 0.5% நடைமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தின் கீழ் பெறும் கடனை 1 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி அவ்வப்போது மாறுபடும். இதுகுறித்து கடன் பெறும் கிளையை அணுகி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது கடன் வழங்குவதற்கான எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
  • தொடக்கத்தில் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டது. 2016-17 முதல் கோழி வளர்ப்பு உட்பட வேளாண்மையுடன் தொடர்புடைய தொழில்களுக்கும் கடன் கொடுக்கப்படுகிறது. 2017-18 முதல் டிராக்டர்கள், பவர் டில்லர்கள் வாங்கவும், 2018-19 முதல் வர்த்தக நோக்கத்துக்காக இருசக்கர வாகனங்கள் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.

8 ஆண்டில் ரூ.23.2 லட்சம் கோடி கடன்

  • இந்த திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டில் 40.82 கோடி பேருக்கு ரூ.23.2 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இதுவரை முத்ரா திட்டத்தின்கீழ் பயனடைந் தவர்களில் 83% பேர் ஷிஷு பிரிவின் (ரூ.50,000 வரை) கீழ் கடன் பெற்றுள்ளனர்.
  • இதன் மூலம் முதல்முறை தொழில் முனைவோர் அதிக அளவில் பயனடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல 15 சதவீதம் பேர் கிஷோர் பிரிவின் கீழும்,2 சதவீதம் பேர் தருண் பிரிவின் கீழும் பயனடைந்துள்ளனர்.
  • அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த கடன் தொகையில், ஷிஷு பிரிவின் கீழ் 40 சதவீதமும், கிஷோர் பிரிவின் கீழ் 36 சதவீதமும், தருண் பிரிவின் கீழ் 24 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மிகவும் பாராட்டத்தக்க சாதனை என்ன வென்றால், அதிக அளவில் பெண் தொழில்முனைவோர் உருவாகி உள்ளனர். முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களில் 69 சதவீதம் பேர் பெண் தொழில்முனைவோர் ஆவர்.
  • திட்டம் தொடங்கிய முதல் 4 ஆண்டுகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சராசரி கடன் வளர்ச்சி 23% ஆக இருந்தது. ஒட்டுமொத்த கடன் தொகையில் 21% புதிய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் கடன் வழங்கல் பின்னடைவை சந்தித்த நிலையில், 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி 28% ஆக அதிகரித்துள்ளது.
  • இதுபோல கடன் பெற்றவர்களில் 51% பேர் எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஆவர். இதன் மூலம் புதிய தொழில்முனைவோருக்கு எளிதாக கடன் கிடைக்கிறது என்பது தெளிவாகிறது. . கடந்த 2022-23-ம் நிதியாண்டில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.4.56லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் 98.65% அதாவது ரூ.4.5 லட்சம் கோடி கடன் விநி யோகம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

வசூலாகாத கடன் குறைவு

  • கடந்த 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனில் வசூலாகாத கடன் 3.17 சதவீதமாக உள்ளது. ஆனால் இதே காலத்தில் ஒட்டு மொத்த வங்கித் துறையின் வசூலாகாத கடன் 5.9 சதவீதமாக உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
  • நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக முத்ரா திட்டம் பெருமளவில் உதவுவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • இந்த திட்டம் பெண்கள் உட்பட லட்சக்கணக்கான இளைஞர்கள் தொழில்முனைவோராக மாற உதவி செய்துள்ளது.குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் 8 கோடி புதிய தொழில்முனைவோரை முத்ரா திட்டம் உருவாக்கி உள்ளது. இதுபோல ஏற்கெனவே தொழில் செய்து வரும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று பலனடைந்துள்ளனர்.
  • குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியிலும் முத்ரா கடன் திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக, சிறு வியாபாரிகள் முதல் சிறு தொழில் நிறுவனங்கள் வரையில் கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முத்ரா கடன் பெரிதும் உதவி வருகிறது. நாட்டின் சராசரி தனிநபர் தலா வருவாய் 2014-15-ல் ரூ.86,647 ஆக (ஆண்டுக்கு) இருந்தது.
  • இது 2022-23-ல் இருமடங்காக உயர்ந்து ரூ.1,72,000 ஆகி உள்ளது. இதற்கான முக்கியமான காரணங்களில் முத்ரா திட்டமும் ஒன்று ஆகும். இதன் மூலம் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் முத்ரா திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பது தெளிவாகிறது.

நன்றி: தி இந்து (30 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்