- தமிழ்ப் பெண் படைப்பாளுமைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். நாவல், சிறுகதை, பெண்ணியத் திறனாய்வு, வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பல்வேறு இலக்கிய வகைமைகளில் சமூக விழிப்புணர்வோடும் மனிதர்கள் மீதான கரிசனத்தோடும் தன் படைப்புகளை உருவாக்கியவர். 1950களில் தன் எழுத்துப் பயணத்தினைத் தொடங்கி, 2014 வரை தொடர்ந்து சமூகம் சார்ந்த சிந்தனையோடும், பெண் குறித்த அக்கறையோடும் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன்.
விளிம்பு நிலை மக்களின் கதைகள்
- பெண்களுக்குக் கல்வி கிடைப்பது அரிதான காலச் சூழலில்தனக்குக் கிடைத்த கல்வியை இச்சமூகஏற்றத்தாழ்வுகளைக் களைய ஆயுதமாகப் பயன்படுத்தியவர். பெண் எழுத்து என்பது குடும்பம், குடும்ப அமைப்புக்குள் நிகழும்சிக்கல்கள் ஆகியவற்றையே மையமிட்டிருக்கும் என்கிற பொதுப்புத்தியைத் தன் படைப்புகளினால் தகர்த்தவர் ராஜம் கிருஷ்ணன். தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவைக் கற்பனை கொண்டு இட்டுநிரப்பாமல், அந்தக் கதைக்களனுக்கே சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக வாழ்ந்து, ரத்தமும் சதையுமாக அவர்களின் வலியை வாசகர்களுக்குக் கடத்திய பெருமை தமிழ்ப் படைப்புலகில் இவருக்கு உரியது. இவரது ‘கரிப்பு மணிகள்’ நாவல் தூத்துக்குடிக்குச் சென்று அங்குள்ள உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை இவ்விதம் யதார்த்தமாகப் பார்த்துச் சித்தரித்ததே.
- ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான பெண்ணியத் திறனாய்வுக் கட்டுரைகள் என்று தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் படைப்புக்காகவே செலவிட்ட படைப்பாளுமை இவர். இப்படைப்புகள் ஒவ்வொன்றும் அவரின் பெரும் உழைப்பைச் சுமந்து நிற்கின்றன. மனிதநேயம் ததும்பி வழியும் இந்த ஆக்கங்கள் எவ்விதப் பூச்சுமின்றி உண்மையை உரக்கப் பேசுகின்றன. சமூகத்தின் விளிம்பு நிலையில் பாலின வேறுபாட்டிலும் உழைப்புச் சுரண்டலிலும் ஆட்பட்டிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கை மீது பெரும் வெளிச்சத்தை இவர் படைப்புகள் பாய்ச்சுகின்றன. பிற படைப்பாளிகள் எழுதுவதற்கே அஞ்சும் சமூக அரசியல் நிகழ்வுகளைத் தன் எழுத்தின் மூலம் சமரசமற்றுக் கூர்மையாக வெளிப்படுத்திய பெருமை இப்பெண் படைப்பாளிக்கு உண்டு.
களப் போராளி
- ‘ஒரு தேசிய வரலாற்றில் எந்தவொரு மக்கள் இயக்கமும் பெண்கள் சம்பந்தப்படாததாக இருக்க முடியாது. ஒரு சமூகத்தின் இயக்கத்தை அச்சாணியாக நின்று இயக்குபவர்கள் பெண்களே என்றாலும்கூட மிகையில்லை. ஏனெனில், அதன் சாதக, பாதகமான பாதிப்புகளை முழுமையாகத் தாங்குபவர்களும் அவர்களேதாம். ஆனால்,ஒரு தேசிய வரலாற்றையோ, சமுதாய வரலாற்றையோ கணிப்பவர்களும், பதிவுசெய்பவர்களும் பெண்ணின் முக்கியத்துவத்தை அத்துணை உயர்வாகக் கருதுவதில்லை’ என்று ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்கிற மணலூர் மணியம்மாளின் வாழ்க்கைப் புனைவில் வெளிப்படையாகத் தன் கருத்தினைப் புலப்படுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிராக நிகழ்தத்ப்படும் குற்றங்களை எல்லா நிலையிலும் தொடர்ந்து காத்திரமாகக் கேள்விக்கு உட்படுத்தியவர் ராஜம் கிருஷ்ணன். படைப்பாளியாக மட்டுமல்லாமல், களப் போராளியாகவும் தொடர்ந்து போராடியவர். படைப்பைக் கடந்து ஏற்றத்தாழ்வற்றுச் சக மனிதர்களிடம் எளிமையாகவும் இனிமையாகவும் பழகக்கூடிய பண்பாளர்.
- 1973ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘வேருக்கு நீர்’ என்கிற நாவலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது. சொந்த வாழ்வில் மனிதர்கள் சிலரால் ஏமாற்றப்பட்டாலும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை எந்த நிலையிலும் அவர் இழக்கவில்லை. மனிதர்கள் மீதான அன்பையும், மனிதநேயத்தின் மாண்பையும் அவரின் அந்திமக் காலத்தில் எழுதப்பட்ட ‘காலம்’ என்கிற நூல் ஓங்கி ஒலிக்கிறது.
- அறிவு சார்ந்து பெண் இயங்க வேண்டிய பாதையையும் சமூகம் தன்னைச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டிய தேவையையும் கடப்பாடோடு எழுதிச்சென்ற பெரும் பெண் படைப் பாளுமை அவர். பெண் எழுத்துக்குச் சமூக அங்கீகாரத்தைத் தனித்துவமாகப் பெற்றுத் தந்ததோடு, தன் எழுத்துகள்வழி பெண் படைப்பாளிகளுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2023)