TNPSC Thervupettagam

பெயரில் இருக்கிற ‘சுபம்’ வாழ்வில் இல்லையா?

July 7 , 2024 188 days 153 0
  • எந்தக் கல்லூரியில் நுழைந்தபோது பெருங்கூட்டமே சுற்றி நின்று தன்னை வேடிக்கை பார்த்ததோ அந்தக் கல்லூரியின் தேர்வு முடிவிலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் சுபலட்சுமி. 1911இல் இந்தியாவில் வெளியான செய்தித்தாள்கள், ‘இளம் பிராமணக் கைம்பெண் சாதனை’ என்று தலைப்பிட்டு சுபலட்சுமியின் வெற்றி குறித்து எழுதின. தூற்றிய வாய்களைத் தன் அறிவுத்திறனால் அவர் அடைத்தார்.
  • மைசூரு, திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் சமஸ்தானத்திற்கு வந்து பெண் களுக்குக் கற்பிக்கும்படி சுபலட்சுமியைக் கேட்டுக்கொண்டனர். இலங்கை அரசும் அவருக்கு அழைப்பு விடுத்தது. அன்றைக்குக் கல்லூரிப் பேராசிரியரான அவருடைய தந்தை வாங்கிய ஊதியத்தைவிட மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும் என்கிற நிலையிலும் அந்தக் கோரிக்கைகளை சுபலட்சுமி மறுத்துவிட்டார். சமூக அந்தஸ்தும் ஓரளவுக்குப் பொருளாதார வலுவும் உள்ள தனக்கே கல்வி கற்பதில் இவ்வளவு தடைகள் இருக்கிறபோது மற்றவர்களின் நிலை குறித்துக் கலங்கினார்.

வழிகாட்டிய சந்திப்பு

  • சுபலட்சுமியைப் போலவே கைம்மைக் கோலம் பூண்ட அம்முக்குட்டி என்கிற 18 வயதுப் பெண்ணும் சுபலட்சுமியோடு எழும்பூர் வீட்டில் தங்கினார். அந்த வீட்டின் வாசல் பக்கவாட்டில் இருந்தது. அரச மரத்தின் நிழல் அடர்ந்து மற்றவர்களின் பார்வையில் படாதவாறு இருந்ததால் அந்த வீட்டில் மூன்று கைம்பெண்கள் தங்குவது குறித்துச் சுற்றியிருந்தவர்கள் எந்தப் பிரச்சினையையும் எழுப்பவில்லை.
  • இலக்கை முடிவுசெய்துவிட்டபோதும் சில நேரம் பாதை புலப்படாது. அப்படியொரு தருணத்தில் சுபலட்சுமிக்கு வழிகாட்டி மரமாக விளங்கினார் கிறிஸ்டினா லின்ச். சுபலட்சுமியின் தந்தை பணியாற்றிய கோயம்புத்தூர் மாவட்டத்தின் பெண் கல்விக்கான அதிகாரி அவர். 1901ஆம் ஆண்டு நிலவரப்படி மதராஸ் மாகாணத்தில் மட்டும் ஐந்து முதல் 15 வயதுக்குள்பட்ட 23,395 பிராமணக் கைம்பெண்கள் இருந்தனர். அவர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி வழங்குவதற்காக அரசு சார்பில் சிறு இல்லம் தொடங்க வேண்டும் என்கிற அவரது திட்டத்துக்கு மூன்றரை ஆண்டுகளாகியும் ஒப்புதல் கிடைக்கவில்லை. கிறிஸ்டினா லின்ச் இது குறித்து சுபலட்சுமியிடம் பேசினார். அரசின் ஒப்புதலுக்காகக் காத்திராமல் நாமே பணம் வசூலித்து, சிறிய இல்லம் ஒன்றை நடத்தலாம் என சுபலட்சுமிக்கு ஆலோசனையும் சொன்னார். அப்படி 1912இல் உருவானதுதான் ‘சாரதா பெண்கள் சங்கம்’. இந்தச் சங்கம் சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுப் பொதுமக்களிடம் 2,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதற்குள் சுபலட்சுமி தன் ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்துவிட்டார். கைம்பெண்களுக்கான இல்லம் அமைக்க முடிவெடுத்தாலும் இடம் கிடைப்பது சிக்கலாக இருந்தது.

சாரதா இல்லம்

  • பெண்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றுவரும் வகையில் எழும்பூரில் இருந்தஅரச மர வீட்டுக்கு அருகிலேயே மற்றொரு வீட்டைத் தேடினர். பெண்களைக் குழுவாக இணைத்ததிலும் சங்கம் அமையப் பெற்றதிலும் சித்திக்குப் பங்கு உண்டு. தினமும் மாலை நேரத்தில் சித்தியின் ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்க பெண்கள் வருவார்கள். பக்திக் கதைகளில் தொடங்கும் பேச்சு படிப்படியாகச் சமூக நிர்ப்பந்தம், அறிவியல், புவியியல், சம கால வரலாறு என்று விரிவடைந்துகொண்டே போகும். அறிவுப்பூர்வமான இந்த உரையாடலில் பிற மதங்களைச் சேர்ந்த பெண்களும் இணைய விரும்பினர். அரச மர வீடு அவ்வளவு பேருக்கும் இடமளிக்கும் வகையில் இல்லை. அதனாலேயே விரைவாகத் தனி வீடு பார்த்தார்கள். சங்கமாக இருந்தது பிறகு கைம்பெண்களுக்கான ‘சாரதா இல்லம்’ எனப் பரிணமித்தது.
  • கணவன் இறந்துவிட்டால் பெண்களுக்கு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்கிற அந்நாளைய கற்பிதத்தைத் தன் அறிவால் சுபலட்சுமி மாற்றிக் காட்டினார். சாரதா இல்லத்தில் தங்கியிருந்த பெண்கள் ரவிக்கையோடு கூடிய பல வண்ணப் புடவைகளை அணிந்தபடி பள்ளிக்குச் சென்றது மாபெரும் புரட்சியே. அவர்கள் தலைமுடியை வளர்த்துக்கொண்டனர். ஏற்கெனவே மழிக்கப்பட்ட தலையோடு வந்த பெண்கள், இல்லத்துக்கு வந்த பிறகு கூந்தல் வளர்த்தனர். இவையெல்லாம் அந்தப் பெண்களின் கற்பனைக்கும் எட்டாத புரட்சிகரச் செயல்பாடுகள். அனைத்தையும் தன் சித்தி, அம்மா விசாலாட்சி, தங்கைகள், ஐரோப்பிய ஆசிரியர்கள் - கல்வி அதிகாரிகள், கைம்பெண்களின் பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்போடு சுபலட்சுமி நிகழ்த்தினார்.

மறுமணப் புரட்சி

  • ஒருநாள் ரங்கூனில் இருந்து ஒருவர் சுபலட்சுமிக்குக் கடிதம் எழுதியிருந்தார். தான் மனைவியை இழந்தவர் எனவும் தனக்குக் குழந்தைகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தவர், சாரதா இல்லத்தில் இருக்கும் கைம்பெண்களில் யாராவது ஒருவரைத் தான் மணந்துகொள்ள விரும்புவ தாகவும் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் சுபலட்சுமி முதலில் அதிர்ந்தார். அப்போது அந்த இல்லத்தில் தங்கியிருந்த 16 வயதுப் பெண், அந்த நபரை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். அதுவும் சுபலட்சுமியை அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால், கைம்பெண் ஒருவர் மறுமணம் புரிந்துகொண்டு மற்றவர்களைப் போல் மகிழ்வோடு வாழ்வதில் என்ன தவறு என்று தோன்றியது. தவிர, கடிதம் எழுதியிருந்தவர் முற்போக்குச் சிந்தனை கொண்டவராகவும் இருந்தார். உடனே, அந்த நபர் மதராஸுக்கு வந்து சாரதா இல்லத்தின் 16 வயது கைம்பெண்ணை மணந்துகொண்டார். நூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் பழமைவாதங்கள் நிறைந்த சமூகத்தில் இப்படியொரு மறுமணம் யாருமே நினைத்துப்பார்க்க முடியாதது. ஆனால், அதைச் சத்தமின்றி சுபலட்சுமி செய்துமுடித்தார்.
  • ஆசிரியர் பயிற்சிப் படிப்பின்போது ஒரு நாள் சுபலட்சுமி பள்ளி வளாகத்தின் படிகளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இரண்டு பெண்கள் சுபலட்சுமியைப் பற்றிக் கிண்டலாகப் பேசினர். கைம்பெண்ணும் கறுப்புப் பூனையும் எதிர்ப்படுவது அக்காலத்தில் சகுனத்தடையாகக் கருதப்பட்டது. ‘இவளுக்குப் பெயரில் மட்டும்தான் ‘சுபம்’ இருக்கும்போல’ என்கிற பொருள்படும்படி அந்தப் பெண்கள் பேசினர். அது அவரைச் சிறிதும் பாதிக்கவில்லை. பிறரது வாழ்க்கையில் சுபத்தையும் லட்சுமிகரமான நல்விளைவையும் ஏற்படுத்தியதால் தனக்கு எல்லா வகையிலும் ஏற்ற பெயர்தான் அது என நினைத்துக்கொண்டார். சுபலட்சுமியின் வாழ்க்கையைப் பற்றி எழுத விரும்புவதாக பிரிட்டன் எழுத்தாளர் மோனிகா சொன்னபோது, ‘இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியைப் பற்றி எழுதியவர், என்னைப் போன்ற சாதாரணப் பெண்ணைப் பற்றி எழுத என்ன இருக்கிறது? நான் யார்?’ என மறுத்தார் சுபலட்சுமி. தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்திய சுபலட்சுமியின் வாழ்க்கையே ‘நான் யார்?’ என்கிற கேள்விக்குப் பதிலாக இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்