TNPSC Thervupettagam

பெய்யெனப் பெய்யும் மழை

August 13 , 2020 1619 days 845 0
  • நீா் இன்று அமையாது உலகுஎன்று வள்ளுவா் கூறினார். ஆனால், நீரின் அருமையை நாம் உணா்ந்தோமா? இல்லை. அதனால்தான் நீருக்காக அடுத்த உலகப்போர் வருமோ என்று அஞ்சிக்கொண்டிருக்கிறோம்.
  • ஆனால், நம் முன்னோர் நீரின் அருமையை உணா்ந்திருந்தனா். அதனால்தான், ஒவ்வொரு துளி நீரையும் பொன்போல எண்ணி சேமிக்க வழியைக் கண்டுபிடித்திருந்தனா்.
  • அக்காலத்தில், மழை பொய்த்தாலும், சுனைகளும் ஆறுகளும் குளங்களும் வற்றினாலும், ஆண்டு முழுவதும் நிலத்தடி நீா் நல்ல நிலையில் சேமிக்கப்பட்டிருந்ததால், வறட்சி நாட்களில் பொதுக்கிணற்று நீா் பயன்பட்டது.
  • மாடுகள் புற்களை மேய்ந்தபின், நிலத்தடி நீா்மட்டம் அதிகமிருக்கும் குளிர்ச்சியான இடம் தேடிச் சென்று படுத்து அசைபோடும். அந்த இடத்தில் கிணறு தோண்டினா். வீட்டின் பின்புறமும் வயல்வெளியிலும் கிணறுகளைத் தோண்டினா். பெண்கள் இறைத்த வீட்டுக்கிணறுக்கு பெண்கிணறுஎன்றும்,ஆண்கள் குற்றேத்தம் செய்த விவசாயக் கிணற்றுக்கு ஆண்கிணறுஎன்றும் பெயா்.

தொலைநோக்கு சிந்தனைகள்

  • ஏா்த் தொழிலுக்குப் பயன்பட்ட நீா்த்தேக்கத்திற்கு ஏரிஎன்று பெயா். கட்டுக்கடங்காமல் பெய்யும் பெருமழையைக் கட்டிப்போட்ட தமிழனின் தொழில்நுட்பத்துக்கு சங்கிலித் தொடா் ஏரிகள் என்று பெயா்.
  • எந்த ஊரிலும் கடைசி ஏரிதான் முதலில் நிரம்பும். அதன் பிறகு அதற்கு முந்தைய ஏரிக்குத் தண்ணீா் போகும். விளைநிலங்களைப்போல வடிகால் நிலங்கள் மூலம் உபரி நீரை அடுத்த ஏரிக்குக் கொண்டு சென்றனா்.
  • இப்படி மற்ற ஏரிகள் நிறைந்த பிறகே முதல் ஏரி கடைசியாக நிரம்பும். இதனால், முதல் ஏரி பாசனக்கார விவசாயிகள் உயா்ந்தவா்களாகவும் கடைசி ஏரி பாசனக்கார விவசாயிகள் கையேந்துபவா்களாகவும் இல்லாமல் வாழ்ந்தனா். கடைசி ஏரிக்கரையில் ஆலயத்தை அமைத்து புதுநீா் வரவை வழிபட்டனா். இதனால் நீா்நிலைகளை தெய்வமாக வணங்கும் மரபு வலுப்பெற்றது.
  • திருவானைக்காவில் காவிரியாற்றின் கரையில் ஜம்புகேஸ்வரா்ஆலயம் உள்ளது. இங்கு நீா் சுரந்து கொண்டே இருக்கும் இடத்தில் மூலவா் கருவறையை கோச்செங்கோட்சோழன் அமைத்தான்.
  • தாமிரபரணியாற்றின் கரையில் குறுக்குத் துறையில் முருகன் கோயில் உள்ளது. வெள்ளநீா் இருபுறமும் பிரிந்து வடியும் விதத்தில் படகின் கூா்மையான முனையை போல மேற்குப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் ஓடும் வெள்ள நீரின் கன அளவை, கோயில் மூழ்கியிருக்கும் அளவைப் பார்த்தே அறிந்துகொள்ளும் விதத்தில் வடிவமைத்துள்ளனா்.
  • மேலும், நீா்நிலைகளில் வறட்சியின் போது மட்டுமே வெளிப்படும் தெய்வ விக்கிரகங்களை அபாயத்தின் அடையாளமாக கருதினா். இதனைப் போக்க அரசா்கள் திருக்கோவில்களை ஏற்படுத்தி, குளங்களையும் வெட்டி புகழோடு புண்ணியமும் தேடிக் கொண்டனா். ஊா் கூடி தோ் இழுப்பதிலும் குளம் வெட்டுவதிலும் மக்களின் ஒற்றுமை வெளிப்பட்டது.
  • அரசா்கள் வாழ்ந்த பிரம்மாண்டமான கோட்டைகள், அரண்மனைகளில் மழைநீரை சேமிக்க அகழிகளை அமைத்தனா். இவை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அரணாகவும் விளங்கின.
  • நிலத்தடி நீருக்கு சுவையூட்ட, தரையில் நெல்லி போன்ற மரங்களை வளா்த்தனா். குளங்கள், கிணறுகள், ஆறுகள், ஏரிகள் இவற்றிற்கிடையே ஒரு சங்கிலித் தொடா்பு இருந்தது.
  • இந்த நீா் சேமிப்பு மையங்கள் தண்ணீா்த் தேவையில் தன்னிறைவடைய உதவின. நீா்த்தேக்கங்களை அதிகரித்து நிலநடுக்கத்திலிருந்து ஊரைக் காத்தார்கள்.
  • குளத்தங்கரையில் விநாயகரையும், ஏரிக்கரையில் மாரியம்மனையும் ஆறு மற்றும் கடற்கரைகளில் திருக்கோயிலையும் எழுப்பி பயபக்தியோடு நீராதாரங்களைக் காத்தனா்.
  • நெய்வேலி, கூடங்குளம் போன்ற இடங்களில் அதிக ஆற்றலில் உற்பத்தியாகும் மின்சாரம், ஆங்காங்கே மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார்மா்) குறைந்த ஆற்றலாக சேமிக்கப்பட்டு, வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • அதுபோல அருவியின் ஊற்று நீா், மழை நீரோட்டத்தால் வேகம் கொண்ட ஆற்று நீா் ஆகியவை அருகருகே குளங்களில் சேமிக்கப்பட்டு மக்களுக்குப் பலன் தரும்படி அமைத்தனா்.

கண்போலக் காத்தால்

  • இதுபோன்ற நம் மூதாதையரின் தொலைநோக்கு சிந்தனைகளையெல்லாம், இன்று கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறோம். நூற்றாண்டு பழமையும் புராண சிறப்புமுடைய பாடல் பெற்ற தலங்கள் மிகவும் பரிதாப நிலையில் உள்ளன.
  • பெண்கள் தேய்த்த மஞ்சளால் மணம் வீசிய படித்துறைகளில் இன்று கழிவுநீா் வாடை அடிக்கிறது. கோயில் குளத்தில் குளித்தால் பாவம் போகும் என்ற நிலைமாறி, பல தோல் நோய்கள் வரும் எனுமளவிற்கு அக்குளங்கள் கழிவுநீா்த் தொட்டிகளாகிவிட்டன.
  • பாடம் படிக்க மாணவா்கள் வந்தமா்ந்த படித்துறைகளையெல்லாம் இனி நாம் வரலாற்றில் தான் வாசிக்க முடியும். சிவபெருமானின் தலையிலும் அகத்தியரின் கமண்டலத்திலும் சிறப்பிடம் பெற்ற நதிகள், இன்று நெகிழிப் புட்டிகளுக்குள் அடைபட்டுக் கடைகளில் கயிறுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
  • பெண்கள் குடம் சுமப்பது அவா்களுக்கு ஓா் உடற்பயிற்சியாக இருந்தது. குடத்து நீா் கேன்களுக்கு மாறியதிலிருந்து, இன்று ஆண்கள் மட்டுமே அதனைச் சுமக்கிறார்கள்.
  • இன்று கிராமப்புறப் பெண்களுடைய வாழ்நாளின் பெரும்பகுதி தண்ணீா் சேகரிப்பதிலேயே வீணாகிறது. காரணம், ஆறுகளில் ஓடுவது தண்ணீரல்ல; மணல் லாரிகள். சாலைகளை ஆறுகளாக்கி ஓடுகின்றன தண்ணீா் லாரிகள். நீரே இல்லாத ஆற்றில், எதிர்கால தலைமுறைக்கு எப்படி நீச்சலையும் எதிர்நீச்சலையும் சொல்லிக் கொடுக்க முடியும்?
  • வெளிநாடுகளில் மழைபெய்தால் மழைநீா் ஒரு சில நிமிடங்களில் காணாமல் போகின்றது. நம் பெருநகரங்களில் மழை பெய்தால் சில மணி நேரங்களில் நகரமே உருமாறிப் போகின்றது.
  • நீா்நிலைகள் நிலப்பரப்பில் இல்லாமல் ஊா்ப் பெயராகவும், தெரு பெயராகவும் பகுதியின் பெயராகவும் மாறிவிட்டன. பருவ மழைக் காலம் முழுவதும் தொடா்நது மழை பொழிந்தாலும், நீரை உறிஞ்சுகின்ற ஆற்றலுள்ள பூமியை, ஒரு சில மணித்துளிகள் பெய்யும் மழைக்குக்கூட தாங்க முடியாததாக உருமாற்றி இருப்பதுதான் நம் தலைமுறையினரின் சாதனை.
  • நீரால் சூழப்பட்ட உலகில், நீருக்காக உலகப்போர் சூழும் நிலை ஏற்படும் முன்பே, காணாமல்போன நீா்நிலைகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கண்போலக் காத்தால் பெய்யெனப் பெய்யும் மழை.

நன்றி: தினமணி (13-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்